வெள்ளி, 17 ஜூலை, 2020

அழகிரி என்னும் பெயர்.

இன்று அழகிரி என்ற பெயரின் சொல்லமைப்பைக் காண்போம்.

இப்பெயரை இயற்பெயராய்க் கொண்டோர் பலர் உள்ளனர். 
இது  சொல்லாய்வே அன்றி வேறில்லை. இப்பெயரைப் பற்றி
எழுதி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பது
நோக்கமன்று.  ஆகவே,  ஆய்வினை ஏற்றுக்கொள்வீர்கள் ; 
அவ்வாறே வேண்டிக்கொள்கிறோம்.

அழகு+ இரு + இ  என்று பிரித்து அழகிரி என்று முடித்து, 
அழகிருப்பவர் எனினும்  ஆகும்; ஆனால் அதனினும் 
சிறந்த முடிபினை எட்ட மேலும் ஆய்வோம்.

அழகு என்ற சொல்லில் அழ என்பதே முதனிலை ஆகும். 
கு என்பது விகுதியே ஆகும். ஆனால் இவ்விகுதி பெயர்ச்
சொல் அமைப்பிலும் வினைச்சொல் அமைப்பிலும் வருவது.  வினைச்சொல்லில் வருதற்கு எடுத்துக்காட்டு:  பழகு (பழகுதல்), 
மூழ்கு (மூழ்குதல் ) எனக் காண்க.

எனவே  அழ என்ற முதனிலையும் மலை என்று பொருள்படும்
"கிரி" என்ற கிளவியும் இணைந்ததே அழகிரி என்ற பெயர். 
இஃது விகுதிகெடுத்துப் புணர்த்திய சொல் ஆகும்.  இப்பெயரை 
வேறு விதமாகச் சொல்வதென்றால் " அழகுமலை" என்னலாம். 
கிரி என்பது மலை.

கிரி என்பது திரிசொல்.  குன்று என்பது (சிறிய) மலை. இது 
இடைக்குறைந்து  குறு என்றாகி,  குறு > கிரி என்று திரிபுற்றது.
குறு என்ற அடியினின்று பல சொற்கள் தோன்றியுள்ளன. குறி, 
குறை என்பவை தொடர்புற்றவை.

அறிக. மகிழ்க.

திங்கள், 13 ஜூலை, 2020

ஒரேநாளில் 4328 நோய்த்தொற்று [ த-நா]



ஆயிரத்து முன்னூற்றின் இருபத் தெட்டாம்
ஆயிரத்தில் நாலுறழும் கிருமித் தொற்றே
மாயறவு கொண்டவர்கள் திரும்ப வேண்டும்
மாநிலத்தில் இன்றொருநாள்  பெருக்கம்  ஈதே!
தூயவர்கள் பலர்புகழில் துவன்ற நாட்டில்
தொடர்கின்ற துன்பங்கள் அகன்றி டாவோ?
தாயொடுமே பிள்ளைகளும் தழைத்து நின்று
தமிழன்னை தயைபெற்றே எழுதல்  வேண்டும்.


ஆயிரத்தில் நாலுறழ -  நாலாயிரம்
மாயறவு -  மரணம் நீங்குதல்
கொண்டவர்கள் -  கொண்டு +  அவர்கள்
துவன்ற -  கூடிய, நிறைந்த
அகன்றிடாவோ = நீங்கிட மாட்டாவோ?


ஞாயிறு, 12 ஜூலை, 2020

மரபுத் தொடர்: " எந்த மூலை?"

நாம் வழங்கும் சொற்றொடர்களில் சில ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவையாய் இருக்கும்.  எடுத்துக்
காட்டாக, " என்ன இவர் செய்து சாய்த்துவிட்டார்? 
இப்போது இங்கு வந்து பீத்திக்கொண் டிருக்கிறார்" 
என்பது காட்டில் மரங்களை வெட்டிச் சாய்த்துக்
கொண்டுவந்து அறுத்தெடுத்துப் பலகைகளாக்கும்
தச்சுத் தொழில் சார்ந்த வேலைக்காரர்கள்
பயன்படுத்தி வந்த சொற்றொடராகும்.  இதே
போலும் ஆங்கிலத்திலும் உண்டு. "Are you fighting
 your case or taking a certain course?" என்ற கேள்வியில்  
taking a certain course என்பது  கடலோடிகளின்
பேச்சுவழக்கில் தவழ்ந்து வளர்ந்து மிகுந்து மக்கள்
பிறரிடமும் பரவிவிட்ட சொற்றொடரென்று அறிஞர்
கூறுப. இவற்றைச் சுருக்கமாகத் துறைத்தொடர்கள்
என்று சுட்டலாகும்."taking a certain course" எனற்
பாலதை   ஆங்கில மொழிநூலறிஞர்  natutical term
என்பர்.

தச்சுத் தொழிலில் அறுத்துக் கொணர்ந்த மரம் அல்லது
மரங்கள் அளவிலோ எண்ணிக்கையிலோ குறைந்துவிட்டால்
"இது எந்த மூலை?" என்ற கேள்வி எழும். நான்கு மூலைக்கும்
நான்கு தூண்கள் நிறுத்தவேண்டுமே.  மூன்று தூண்களுக்கே
மரங்கள் உள்ளனவென்றால் பற்றாக்குறையை உணர்த்துவதற்கு
இவை எந்த மூலை என்பர்.  இதற்குப் போதவில்லை என்பதே
பொருளாகும். இப்போதைய வழக்கில் " எந்த மூலை" என்பது
கவலைக்குரிய பற்றாக்குறையைச் சுட்டவே வெளிப்படும்
சொற்றொடராக உள்ளது.

சாய்த்துவிட்டாயோ என்று வரும் மரபு வழக்கினின்று சில
சொற்கள் அமைந்துள்ளன.

செய்து முடிக்க இயன்றதை  சாத்தியம் என்பர்.  இது சாய்த்து+
இயம் என்ற இரு உள்ளுறுப்புச் சொற்களை உடையது.  இயம்
என்பது இ+ அம்  என்ற பகுவிகுதிகளின் இணைப்பு.  இ = இங்கு.
அம் - அமைதல் உணர்த்தும் விகுதி..  சாய்க்க இயன்றது, அதாவது
செய்தற்கியன்ற நிலை என்பதே சாய்த்தியம் > சாத்தியம்
ஆயிற்று.  யகர ஒற்று (ய்)  கெட்டது (௳றைந்தது).    வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர், வாய்த்தியார் > வாத்தியார் ஆனார்'
அதுபோலவே சாய்த்தியம் > சாத்தியம் ஆயிற்று.  சாதித்தல்
என்பதும் சாய்தல் அடியினதே.  சாய் > சாய்தி > சாதித்தல்
என்பது யகர ஒற்று இழந்தது. சாதித்தல் என்பதில் வரும் சாதி
என்பது ஜாதி ( மக்கட்பிரிவு) குறிக்காது.  இது தன்வினை
பிறவினை வடிவங்கள் இரண்டிலும் சாதித்தல் என்றே
இயல்வதாகும்.

இவ்வாறு அறிந்து மகிழ்க..


மெய்ப்பு - பின்னர்.