ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அவத்தையும் அவஸ்தையும்.

அவத்தை என்ற உருக்கொண்டு பின்னர் அவஸ்தை என்று உருமாற்றம் அடைந்த சொல் பிறந்த விதம் அறிவோம்.

பச்சை நெல்லை சுடுநீரிலோ நீராவியிலோ வைத்து வேவித்தால் அது அவியல் ஆகிவிடுகிறது.  இப்படிச் செய்யாமல் அதே நெல் புழுக்கமான இடத்தில் காற்றோட்டமின்றி வைக்கப்பட்டுவிட்டால் அதுவும் ஒருவகையில் அவிந்து பயனற்றுப் போகிறது. குளிர்ப்பெட்டியில் நெடுநாள் இருந்த காய் முதலியவையும் அவிந்து  சுருங்கிப் பயனற்றுப் போகிறது.  இப்படித் தாமாக அவிந்துவிட்டவை  அவம் அடைகின்றன. இவை உணவுக்கு ஏற்றவை அல்ல.

எனவே அவம் என்ற சொல்லுக்குக் கேடு (கெடுதல்) என்ற பொருள் உண்டாயிற்று. அவம் என்ற சொல் பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. சில நூல்களில் உள்ளன.

இது ஆன விதம் இவ்வாறு:

அவி > அவிதல் :  வினைச்சொல்.

இங்கு தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  அவி என்பதே வினை.

அவி என்பது அம் விகுதி பெற்றால்  அவி + அம் = அவம் ஆகிறது. அவி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு   (அவ்)+ அம்= அவம்  என்று நின்று  வ் + அ ஆனவை புணர்ந்தபின் அவம் என்ற இறுதிவடிவம் பெறுகிறது.  அவ் என்பது ஒரு சொல்லன்று. அது ஒரு புணர்நிலை இடைவடிவம் ஆகும்.  பொருள் உடையதே சொல். புணர்நிலையில் ஏற்படும் இடைவடிவம் பொருள் காட்டுதல் இல்லை ஆதலின் அதனை ஒரு சொல் என்று நாம் குறிப்பதில்லை. சில சொற்கள் இவ்வாறு இடைவடிவம் அடைவதில்லை. எடுத்துக்காட்டாக அறு என்ற சொல்லினின்று ஆறு என்ற சொல் ( நதி ) உருவாகுகையில் எந்த இடைவடிவமும் இல்லாமல் முதனிலை நீண்டு திரிபுற்று  "ஆறு" ஆகிவிடுகிறது.  மாறாக,   குவியல் என்ற சொல் உருவாக்கத்தில் குவி என்பது மாற்றம் ஒன்றும் அடையாமல் ஒரு யகர உடம்படு மெய் ஒட்டப்பெற்று அஃது அடுத்து வரும் அல் என்ற விகுதியில் முதனிலையுடன் புணர்ந்து  அவியல் என்ற சொன்னிலையைப் பெற்றுவிடுகிறது.

அறு + அம் என்பவை பகுதியும் விகுதியும் புணர, உகரம் கெட்டு, அற் என்று இடைவடிவம் கொண்டு,  அம் வர  ற் + அ = ற ஆகி,  அறம் என்றாகும். இறுதி நிலை உயிர் கெடுகிறது. வருநிலை அகரம் றகர ஒற்றினைப் பற்றி முழு றகரம் ஆகிவிடுகிறது.

இவ்வாறே  அவம் என்ற முழுச்சொல் அந்நிலையை அவி என்ற வினையினின்று எய்தியவாறு கண்டுகொள்க.

அவத்தை என்ற சொல்லும்,  அவி என்ற வினையினின்று அமைந்த விதம் அறிக.

அவி + அத்து + ஐ. >  அவ்( இ ) + அத்து + ஐ >  அவ் + அத்து + ஐ >  அ (வ்+அ)த்து+ ஐ > அவத்தை  ஆயிற்று.  வினைச்சொல்லீற்று இகரம் கெட்டது.  வகர ஒற்று வருநிலை அகரத்துடன் இணைந்தது.

கொதிநீர்  ஆவி உடலிற்படும்படியான எரிவு ஒத்த துன்பமே அவத்தை ஆகும். அத்து என்பது ஓர் சொல்லாக்க இடைநிலை. இதனை அவம் + தை = அவத்தை என்றும் தை விகுதி என்றும் காட்டினும் அதுவேயாகும்.

வேகும் ஆவியிற் பட்டதுபோலும் துன்பம். இது ஒப்பீட்டில் உண்டான சொல்.

அவஸ்தை என்ற வடிவம், உயர் > உயர்ச்சி >   உசத்தி > ஒஸ்தி ஆனதுபோலும் அவத்தை அவஸ்தை ஆனது.  ஸ் என்றது மெருகு  அல்லது கவின்பொடிப் பூச்சு ஆகும்.

வடவெழுத்து ஒருவினால் உண்மைச் சொல் வெளிப்படும் என்றார் தொல்காப்பிய முனிவர்."  பல்புகழ் நிறுத்தப் படிமையோன் "  அன்னவர்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுத் திருத்தம் பின்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

மரியாதையும் மருவாதையும்

மருவுதல் என்றால் தழுவுதல்,  கைகளால் ஒருவரைச் சுற்றிக்கட்டிப் பற்றிக்கொள்ளுதல்.  இது பணிவின் நிமித்தமாகவும்  அன்பின் நிமித்தமாகவும் வரவினை ஏற்பதன் நிமித்தமாகவும் நடைபெறக்கூடும். வேறு காரணங்களும் பொருந்துமாறு மருவுதல் உளது.  மனத்தால் மருவுதல், காலத்தால் மருவுதல், இடத்தால் மருவுதல் என மருவுதல் பல்வகையாகும்.  சங்ககலத்துடன் இணைந்த காலத்தை சங்க மருவிய காலமென்பர். சங்கத்தின் தாக்கம் மறைந்துவிடாத அடுத்த காலத்தையும் மருவிய காலமென்பதுண்டு.

திருமண உறவால் மகளான நிலையை அடைந்தவளை மருமகள் என்பர்.  மருவு என்ற வினையுடன் தொடர்புடைய "  மரு " என்னும் சொல் மருமகள், மருமகன், மருமக்கள் முதலிய சொற்களிலும் மரு என்பது  தெளிவான அடிச்சொல்லாய் உள்ளது.

மருமகன் என்ற சொல்லின் இடைக்குறை மருகன் என்பது.  இதில் ம என்ற ஓரெழுத்து குறைவாயிற்று.

மரியாதை என்ற தமிழ்ச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஈண்டு உள்ளது .https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_90.html

அதையும் படித்து நினைவுபடுத்திக் கொள்க.

கைகளால் மருவிக்கொள்ளாமல் வாயினால் மட்டும் அன்பின் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது  மரு + வாய் +  தை =  மருவாதை என்பதை அறியலாம்.
இங்கு வாய் என்பது கடைக்குறைந்து  வா என்று நின்றது.  வாய்= து + அம் = வாதம் என்ற சொல்லிலும் வாய் என்பது வா என்று நின்றது.   வாய்ப்பேச்சரிடை வாய் என்பது வா என்று சுருங்கும்.  எ-டு:  வாப்பட்டி. இவ்வாறு குறைந்தமைந்த சொற்களும் உள.

வாய்த்தியார் > வாத்தியார் ( வாய்ப்பாடம் சொல்பவர் ).

நாளடைவில் மரியாதையும்  ( மருவி யாத்துக்கொள்ளுதலும் )  மருவாதையும் (  வாய்மருவுதலும் ) தம்  நுண் பொருள் வேறுபாட்டினை இழந்தன. இன்று ஒன்று மற்றொன்றின் திரிபாக எண்ணப்படுகின்றது.

வியாழன், 16 ஜனவரி, 2020

பிரபஞ்சம்

தமிழ் மொழியின் இனிய சொற்கள் யாண்டும் காணப்படுவனவே. காணவே மொழிகளிடை இழையும் ஓர் அணுக்கம் நமக்குத் தெளிவாகிறது.

எடுத்துக் காட்டாக கஜானா என்ற சொல்லைக் காணலாம்.

காசு + எண்ணாம் = காசெண்ணா (ம்)> காஜாநா ஆகிவிடும். இதில் வந்த மாற்றங்களும் பெரியவை அல்ல. சகர வருக்கத்துக்கு ஜா உள்ளே வந்துள்ளது. அவ்வளவுதான்.  காசினெட்டு என்பதி  ிருந்து  cashewnut வந்தது போலுமே.

உலகில் முதலாகப் பூத்த
வை  ஐம்பூதங்களே. அவையே முற்பிறப்புக்கள்.

பிறப்பு+ அஞ்சு + அம் = பிறப்பஞ்சம்> பிறபஞ்சம் ( இது இடைக்குறைந்து,)
பிரபஞ்சம் என்று இன்று உலவுகிறது.

ஐந்து > அஞ்சு .  இது பேச்சு வழக்குச் சொல்.

அஞ்சுதல் ( அச்சம்) என்னும் சொல் வேறு.

ஐந்து என்ற செந்தமிழை  நுழைத்திருந்தால் "பிரபைந்தம்" என்று விளைந்து  இனிதாய் இருந்திருக்காது.
அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுத் திருத்தம் பின்.