வெள்ளி, 17 ஜனவரி, 2020

மரியாதையும் மருவாதையும்

மருவுதல் என்றால் தழுவுதல்,  கைகளால் ஒருவரைச் சுற்றிக்கட்டிப் பற்றிக்கொள்ளுதல்.  இது பணிவின் நிமித்தமாகவும்  அன்பின் நிமித்தமாகவும் வரவினை ஏற்பதன் நிமித்தமாகவும் நடைபெறக்கூடும். வேறு காரணங்களும் பொருந்துமாறு மருவுதல் உளது.  மனத்தால் மருவுதல், காலத்தால் மருவுதல், இடத்தால் மருவுதல் என மருவுதல் பல்வகையாகும்.  சங்ககலத்துடன் இணைந்த காலத்தை சங்க மருவிய காலமென்பர். சங்கத்தின் தாக்கம் மறைந்துவிடாத அடுத்த காலத்தையும் மருவிய காலமென்பதுண்டு.

திருமண உறவால் மகளான நிலையை அடைந்தவளை மருமகள் என்பர்.  மருவு என்ற வினையுடன் தொடர்புடைய "  மரு " என்னும் சொல் மருமகள், மருமகன், மருமக்கள் முதலிய சொற்களிலும் மரு என்பது  தெளிவான அடிச்சொல்லாய் உள்ளது.

மருமகன் என்ற சொல்லின் இடைக்குறை மருகன் என்பது.  இதில் ம என்ற ஓரெழுத்து குறைவாயிற்று.

மரியாதை என்ற தமிழ்ச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஈண்டு உள்ளது .https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_90.html

அதையும் படித்து நினைவுபடுத்திக் கொள்க.

கைகளால் மருவிக்கொள்ளாமல் வாயினால் மட்டும் அன்பின் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது  மரு + வாய் +  தை =  மருவாதை என்பதை அறியலாம்.
இங்கு வாய் என்பது கடைக்குறைந்து  வா என்று நின்றது.  வாய்= து + அம் = வாதம் என்ற சொல்லிலும் வாய் என்பது வா என்று நின்றது.   வாய்ப்பேச்சரிடை வாய் என்பது வா என்று சுருங்கும்.  எ-டு:  வாப்பட்டி. இவ்வாறு குறைந்தமைந்த சொற்களும் உள.

வாய்த்தியார் > வாத்தியார் ( வாய்ப்பாடம் சொல்பவர் ).

நாளடைவில் மரியாதையும்  ( மருவி யாத்துக்கொள்ளுதலும் )  மருவாதையும் (  வாய்மருவுதலும் ) தம்  நுண் பொருள் வேறுபாட்டினை இழந்தன. இன்று ஒன்று மற்றொன்றின் திரிபாக எண்ணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: