வெள்ளி, 10 ஜனவரி, 2020

நீக்கப்பொருள் தரும் தமிழ்ச்சொற்கள்.

நீங்குதல் என்ற சொல்லுக்கு அடியாவது " நீ " என்ற (அடிச்)சொல்.
நிந்தனை:
தான் நீங்கலாக முன் நிற்போனைக் குறிக்கும் சொல்லே " நீ " என்பதாகும்.  அடிப்படைக் கருத்து " நீக்கம்" என்பதே என்றறிக.  இது முன்னிலைப் பதிற்பெயர்.

நீ என்பது சீனமொழியிலும் வழங்குவதாகும்.

நீ என்பது அடிச்சொல்லாய், கு என்னும் வினையாக்க விகுதி பெற்று  " நீங்கு " என்று அமைந்தது. இதுவே பிறவினையாய் "  நீக்கு" என்றமைந்தது.

நீரில் தான் மிதந்த இடத்தினின்று இன்னோர் இடத்துக்கு நீங்கிச் செல்வதே " நீந்துதல்"  ஆகும்.  நீ என்ற சொல்லுடன் து என்னும் வினையாக்க விகுதி இணைந்ததுதான் " நீந்து" என்பது.

இது தொழிற்பெயராகும்போது  " நீச்சு"  " நீச்சல்" என்ற உருக்கள் கொள்ளும்.

பலிநீச்சு என்பது சடுகுடு விளையாட்டுக்கு இன்னொரு பெயர்.

"பலிநீச்சடிக்கவே பல்லு இரண்டு உடையவே..."  என்பது ஒரு சிற்றூர்ப்பாட்டு.

மனிதன் குகைகளிலும் காடுகளிலும் வசித்த தொல்பழங்காலத்தில் கூட்டமாகவே வாழ்ந்தான்.  கூட்டமாக வாழ்வது அவனுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம். உணவுடைய கூட்டத்தாரை இல்லாதவரும் அவர்களுக்குள் வலிமை உள்ளவரும் ஆனோர் வந்து பாய்ந்து அடித்து உணவையும் பிற அரும்பொருட்களையும் எடுத்துச் சென்றனர். ஒரு கூட்டத்தாருக்கு உரிய பொருளை அவர்களுக்கே உரிமை என்று நிலைநிறுத்தும் ஏற்பாட்டுநடக்கை அல்லது விதியமைப்பு உருவாக வெகுகாலம் சென்றது.  உரிமைவிதிகள் பிற்கால ஏற்பாடுகள். உங்கள் பொருள்கள் உங்கட்கே என்பதை இன்னொரு குழுவினர் ஏற்று நடத்தலே பொருளுரிமைக் கோட்பாடு ஆகும்.

இத்தகைய கோட்பாடுகளை மதிக்காமல் நடப்பவனே  "  நீசன்"  " நீச்சன்" என்று அறியப்பட்டான்.  இந்த நீசம் அல்லது நீச்சத்தன்மை கட்டொழுங்கு போற்றி அமைதி காண விழைந்தோரால் கடிந்துகொள்ளப்பட்டது.   நீச்சத்தன்மை மண்கவர்தல், பெண்கவர்தல், பொருள்கவர்தல் ஆகிய மூன்றையும் தழுவிக் கேடு என்று உணரப்பட்டது ஆகும்.

நீ >  நீசு > நீசம்  (  சு, அம் விகுதிகள்).

நீ > நீச்சு ( புணர்வில் வலி மிகுதல் )  > நீச்சு + அம் =  நீச்சம்.

பிறன்பொருள் கொள்வதற்கு ஒரு வலிமை வேண்டியது போலவே அஃது வேண்டாமை போற்றுதற்கும் ஒரு வலிமை வேண்டும் என்பது உணரப்பட்டது. அஃதே  மனவலிமை என வலிமை ஆகும்.  இம்மன வலிமைப் பாதையின் நீங்கி நின்றோன்  நீசன் அல்லது நீச்சன்.  இம்மன வலிமை இல்லாதவன் அல்லது அதனின் நீங்கியோன் நீச குணம் அல்லது நீச்ச குணமுடையோன் என்று அறியப்பட்டான்.  மனிதர்கள் கூட்டமாகச் செயல்பட்டமையின், இத்தகு சில கூட்டத்தார் நீச்சர் அல்லது நீசர் எனப்பட்டது.  மனவலிமை நீங்கியோர் இவர்கள். இது இழிகுணம் ஆதலின் நீச்சர் அல்லது நீசர் என்பதற்கு இழிவு என்பது பெறுபொருண்மை (  பின்னர் அடைந்த பொருள் ) ஆகும். இது அடைவுப்பொருள் எனலும் அது.

அறிந்து மகிழ்க.

கருத்துகள் இல்லை: