வியாழன், 30 ஜனவரி, 2020

நித்தம் > நித்தல் > நிச்சம்.

நித்தம்நித்தம்  என் சிங்காரச் செல்வத்துக்கு
முத்தமொன்று தந்துமகிழ்வேன்---- உன்
அத்தை வருவாள் மெத்தையி லிருந்துனை
மெல்லவே அள்ளியணைப்பாள்


என்று ஒரு கவிதையன்று,   ஒரு கவிதைபோலும் வாக்கியத்தைப் படைப்போமானால் அதில் நித்தம் என்ற சொல் கேட்க நன்றாகவே இருக்கும். நித்தம் என்பது எப்படி அமைந்த சொல்?


மாற்றம் ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் இருக்குமானால் அதை நித்தம் உள்ளதெனலாம்.. அது ஓடிவிடவில்லை. என்றும் நின்று நிலவுகிறது. நிலவுதல் என்ற சொல்லிலும் நில் என்பதே அடி.  நிறுத்து என்பதிலும் அதுவே ஆகும் அடிச்சொல்.  நில்> நிறு > நிறுத்து.  நில்> நிலை (  நில் + ஐ = நிலை.)..நில்+ ஐ + அம் = நிலையம்.

நில் என்ற அடியிற் பிறந்த சொற்கள் பற்பல. வேறுவகையில் சொல்வதானால் அனந்தம்.  என்ன அனந்தம்?   அன் + அந்தம்:  அதாவது அந்தம் / முடிவு இல்லாதவை.  அல்> அன்.  முடிவு இருந்தாலும் கற்பனையிற் பறந்து முடிவற்றதாக மிகுத்துச் சொல்வதுண்டு.   நிற்க.

நில் + தல் - நிற்றல்.  நில் + தம் > நிற்றம்.   நித்தம்.  ற்று > த்து என்று பேச்சு மொழியில் மாறும்.         நில் > நிற்று > நித்து > நித்து + இ + அம் = நித்தியம். ( நிற்பது,  மாறாதது. ) இவ்வாறே நில் என்ற இயல்புவழக்குச் சொல் பல சொற்களுக்குத் தாயாக இருந்துள்ளது காணலாம்.

இவற்றை அறிஞர் பிறரும் முன் விளக்கி யதுண்டு.

நித்தம் > நித்தல் ( அம் விகுதிக்குப் பதிலாகவோ மாற்றமாகவோ அல் வந்துள்ளது. ) ;  நித்தம் > நிச்சம்  ( த > ச திரிபு).

இதேபோல் திரிந்த இன்னொரு சொல்:  அத்தன் >  (அப்பன்) > அச்சன் எனக்காண்க.  மாறாமை உடைய அல்லது பெயரில்லாத எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்கவேண்டுமானால்  நிப்பம் என்று பெயர் வைத்துவிடுங்கள்.

இத்துடன் நிறுத்தி இளைப்பாறுவோம்.  மகிழ்க.




தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்








கருத்துகள் இல்லை: