வியாழன், 23 ஜனவரி, 2020

எதிர்க்கட்சிகள் பற்றி.

பழைய கவிதை கண்டெடுத்தது இன்னொன்று.
முன் இட்டது இங்கு உள்ளது:   https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_22.html



தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்;

மாணாத செயல்களிலே மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரும் ஆதரவை மாயுறுத்தும் காலை

ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க
ஒல்லுவதோ அரசினர்க்கு கொள்ளாமை கண்டு

நாணாமல் அவர்களையே நன்மன்றில் நிறுத்தல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி அன்றோ.


==============================================================

மாணாத  -  சிறப்பில்லாத, பொருந்தாத.
மாயுறுத்தும் -  அழிக்கும்; குழப்படி செய்யும்.

ஓணான் - பல்லிபோன்ற ஓர் சிற்றுயிரி ( சிறுபிராணி)
ஓல்லுவதோ - முடியக் கூடியதோ

கொள்ளமை = நன்மையாய் இல்லாமை.; கொள்ளத்தக்கதாய் இல்லாமை.
நன்மன்றில் -  தீர்ப்புத் தரும் மன்றத்தில்.அல்லது மக்களின்முன்.
செல்லு(ம்)வழி -  செல்லுவழி

அல்லவோ?.  அன்றோ என்றும் வழங்கும்  .  பழைய  வெளியீட்டில் இது  "ஆமே"  என்று முடிந்தது.  ஆமே =  ஆகுமே.  குகரம் தொக்கது.

ஓர் தூயகருத்து என்று கவிதையில் வரலாம். உரைநடையில் ஒரு தூயகருத்து  என்றே வரும்.- இதற்கான உரிமத்தை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

இது 2015ல் எழுதியது.  இன்னொரு நாட்டின் நடப்பு பற்றியது.
இது இங்கு உள்ளதா என்று தேடிப்பார்க்கவில்லை.

படித்து மகிழ்வீர்.

கருத்துகள் இல்லை: