வெள்ளி, 10 ஜனவரி, 2020

நீக்கப்பொருள் தரும் தமிழ்ச்சொற்கள்.

நீங்குதல் என்ற சொல்லுக்கு அடியாவது " நீ " என்ற (அடிச்)சொல்.
நிந்தனை:
தான் நீங்கலாக முன் நிற்போனைக் குறிக்கும் சொல்லே " நீ " என்பதாகும்.  அடிப்படைக் கருத்து " நீக்கம்" என்பதே என்றறிக.  இது முன்னிலைப் பதிற்பெயர்.

நீ என்பது சீனமொழியிலும் வழங்குவதாகும்.

நீ என்பது அடிச்சொல்லாய், கு என்னும் வினையாக்க விகுதி பெற்று  " நீங்கு " என்று அமைந்தது. இதுவே பிறவினையாய் "  நீக்கு" என்றமைந்தது.

நீரில் தான் மிதந்த இடத்தினின்று இன்னோர் இடத்துக்கு நீங்கிச் செல்வதே " நீந்துதல்"  ஆகும்.  நீ என்ற சொல்லுடன் து என்னும் வினையாக்க விகுதி இணைந்ததுதான் " நீந்து" என்பது.

இது தொழிற்பெயராகும்போது  " நீச்சு"  " நீச்சல்" என்ற உருக்கள் கொள்ளும்.

பலிநீச்சு என்பது சடுகுடு விளையாட்டுக்கு இன்னொரு பெயர்.

"பலிநீச்சடிக்கவே பல்லு இரண்டு உடையவே..."  என்பது ஒரு சிற்றூர்ப்பாட்டு.

மனிதன் குகைகளிலும் காடுகளிலும் வசித்த தொல்பழங்காலத்தில் கூட்டமாகவே வாழ்ந்தான்.  கூட்டமாக வாழ்வது அவனுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம். உணவுடைய கூட்டத்தாரை இல்லாதவரும் அவர்களுக்குள் வலிமை உள்ளவரும் ஆனோர் வந்து பாய்ந்து அடித்து உணவையும் பிற அரும்பொருட்களையும் எடுத்துச் சென்றனர். ஒரு கூட்டத்தாருக்கு உரிய பொருளை அவர்களுக்கே உரிமை என்று நிலைநிறுத்தும் ஏற்பாட்டுநடக்கை அல்லது விதியமைப்பு உருவாக வெகுகாலம் சென்றது.  உரிமைவிதிகள் பிற்கால ஏற்பாடுகள். உங்கள் பொருள்கள் உங்கட்கே என்பதை இன்னொரு குழுவினர் ஏற்று நடத்தலே பொருளுரிமைக் கோட்பாடு ஆகும்.

இத்தகைய கோட்பாடுகளை மதிக்காமல் நடப்பவனே  "  நீசன்"  " நீச்சன்" என்று அறியப்பட்டான்.  இந்த நீசம் அல்லது நீச்சத்தன்மை கட்டொழுங்கு போற்றி அமைதி காண விழைந்தோரால் கடிந்துகொள்ளப்பட்டது.   நீச்சத்தன்மை மண்கவர்தல், பெண்கவர்தல், பொருள்கவர்தல் ஆகிய மூன்றையும் தழுவிக் கேடு என்று உணரப்பட்டது ஆகும்.

நீ >  நீசு > நீசம்  (  சு, அம் விகுதிகள்).

நீ > நீச்சு ( புணர்வில் வலி மிகுதல் )  > நீச்சு + அம் =  நீச்சம்.

பிறன்பொருள் கொள்வதற்கு ஒரு வலிமை வேண்டியது போலவே அஃது வேண்டாமை போற்றுதற்கும் ஒரு வலிமை வேண்டும் என்பது உணரப்பட்டது. அஃதே  மனவலிமை என வலிமை ஆகும்.  இம்மன வலிமைப் பாதையின் நீங்கி நின்றோன்  நீசன் அல்லது நீச்சன்.  இம்மன வலிமை இல்லாதவன் அல்லது அதனின் நீங்கியோன் நீச குணம் அல்லது நீச்ச குணமுடையோன் என்று அறியப்பட்டான்.  மனிதர்கள் கூட்டமாகச் செயல்பட்டமையின், இத்தகு சில கூட்டத்தார் நீச்சர் அல்லது நீசர் எனப்பட்டது.  மனவலிமை நீங்கியோர் இவர்கள். இது இழிகுணம் ஆதலின் நீச்சர் அல்லது நீசர் என்பதற்கு இழிவு என்பது பெறுபொருண்மை (  பின்னர் அடைந்த பொருள் ) ஆகும். இது அடைவுப்பொருள் எனலும் அது.

அறிந்து மகிழ்க.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மடிக்கணினித் தமிழ் அலைபேசியில் தவழ்கிறது

மடிக்கணினி செய்கின்ற வேலை எல்லாம்
மணிப்பேசி செய்முனைப்புக் காலம் காணீர்
பொடிப்பேழை முன்னேற்றம் கண்ட யர்ந்தோம்
பொன்னான காலமிதில் சங்கம் இல்லை!
இடியப்பம் பிரியாணி ஆகும் மாற்றம்
இக்காலப் பிறழ்வாகும் தக்க தொன்றே;
முடிமன்னர் குடிவாழ்த்தும் அன்னை இன்று
முன்சென்றாள் தன்மகிழ்வுக் கெல்லை உண்டோ?

சனி, 4 ஜனவரி, 2020

நிந்தனையும் நீயெனலும்

( இவ்விடுகையில் ஒரு பகுதி காணாமற்  போயிற்று.  ஆகவ பின் எழுதிச் சேர்க்கப்பட்டவை இதில் உள்ளன. ச்   அதன்பின் காணாமற் போனதும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது எனினும்  அப்பகுதி தனியாக வெளியிடப்படும்.  அதாவது இங்கு சேர்க்கப்படவில்லை. கள்ள மென்பொருள் நுழைவும் கடவாணைபெறார் புகவும் அறிந்து வருந்துகிறோம். )

Inconvenience to readers regretted.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

TEXT OF THE POST.

நம்மினும் மூத்த பெருமக்களை , முன்நின்று உரையாடும் போது -   நீங்கள் என்றுதான் சுட்டவேண்டும்; "நீ" எனல் பணிவு  அல்லது மரியாதைக் குறைவு என்பது நம் பண்பாட்டு விதியாய் உள்ளது.

இப்பண்பாட்டு விதியினின்றே நிந்தனை என்னும் சொல் தோன்றியுள்ளது.

மூத்த பெருமக்களில் ஒருவர் நீ என்று குறிப்பதை இழித்தலுக்கு ஒப்பாகக்  கரு
தினார். பிறரும் அன்னர்.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தாரிடமும் காணப்படுகின்றன.  மலாய் மொழியில் "லூ"( நீ)  எனலாகாது. முன்னிலைப் பணிவை 'அண்டா"  என்று  தான் சொல்லவேண்டும்.  வயதிற் குறைந்தோர் பெரியோர்முன் செல்லும்போது குனிந்தவாறு பணிவினைத் தெரிவித்துக்கொண்டுதான் கடந் து செல்ல வேண்டும்.

நீ என்ற சொல் ஒரு  து விகுதிபெற்று முதனிலை குறுகி " நிந்து" என்றாகி,  பின்னும் ஒரு வினைச் சொல்லாக்க    விகுதியாகிய "இ" என்பதை மேற்கொண்டு நிந்தி என்றாகி நிந்தித்தல் ஆனது.

நிந்தனை என்பது  'நிந்தி' + அன் + ஐ' என்பன புணர்வுற்ற சொல்.  அன் என்பது இடை நிலை ஆகும்.

நீ  என்பதென்ன?  தன்னின் நீங்கிய நிலையே "நீ"  ஆகும்.  நீக்கக் கருத்து.
இதிலிருந்தே பேசுவோன் தன் பண்பினின்றும் நீங்கியதையும் தான் இழிந்ததையும் பிறரை  இழித்ததையும் குறித்துப் பொருள் விரிந்தது.

இதேபோல் "நம்"  என்பதிலிருந்து நம்பு என்ற சொல் தோன்றியதும் காண்க.

ஒப்பீடு: (சொல்லமைப்பு)



நாம் > நம் > நம்பு (வினையாக்க விகுதி "பு") > ( நம்புதல்)
நீ > நின் > நிந்து ( து விகுதி ) > நிந்தி ( இ வினையாக்க விகுதி) > ( நிந்தித்தல் ).



பிறனின் எண்ணத்தைத் தனதாக்கி (நமதாக்கிக்) கொள்ளுதலே நம்புதல். நம்புதல் என்ற சொல்லமைந்தபின் கருத்தமைப்பில் ஒருமை ( தான் ) பன்மை ( நாம் ) என்பன தேவையற்றவை. தேவையானது நாவுரையைச் செவிப்பட்டார் ஏற்பு என்பதொன்றே.



சந்தித்திரிபுகள்:



நின்+து > நிந்து என்பதும் புணர்ச்சியில் பின் > பிந்து > பிந்துதல், முன்> முந்து> முந்துதல் என்பனவற்றின் அமைப்பைப் பின்பற்றியவேயாம்.  முன்> முந்து > முந்திரி, மன் > மன்+ து + இரு + > மந்திரி ( அரசனுடன் நிரந்தரமாய் நின்று ஆலோசனை வழங்கும் பெரிய அலுவலர் ) என்பன காண்க. மன்னுதல் - நிலையாய் இருத்தல். முன்னுதல் பின் மன்னுதலாய்த் திரிந்தது என்றும் அறிஞர் கூறியதுண்டு. சில் > சின் > சின்+து > சிந்து ( சிறு கவி )( சிறு நூல் நெயவு என்றும் கூறுப) என்பதுமது. பல் ( பலர் ) + தி > பன் தி > பந்தி ( பலர் உண்ணும் நிகழ்வு ) என்பதும் அறிக.



நின் + தி : நின்னை ( உன்னைத்) திட்டுதல் என்று சொல்லவும் வழியுள்ளது.