வெள்ளி, 7 ஜூன், 2019

தயங்கு தயை என்னும் சொற்கள் தொடர்பு


இன்று தயை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இச் சொல்லினோடு தொடர்புடைய சொல் தயங்கு என்பது. தயங்கு, மயங்கு, இணங்கு என்பவற்றிலெல்லாம் ஈற்றில் நிற்கும் கு என்பதை சொல்லாய்வு அறியாதாரும் எளிதில் அறிந்துகொள்ளலாம். அஃது ஒரு வினையாக்க விகுதியாகும்.

மய என்ற அடிச்சொல்லோடு கு சேர்கையில் அஃது தன்வினையில் மெலிந்தே வரவேண்டும். எனவே மயங்கு என்றே வரும். அதாவது தயங்கு என்றே வருவதல்லால் தயக்கு என்று வலித்தல் ஆகாது. வலிப்பின் பிறவினை ஆய்விடும்.

தயங்கு என்பதில் தய (தயா) என்பதே அடிச்சொல். இஃது எவ்வாறு பிறந்தது என்பதை இன்னொரு நாள் இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நீ ஏன் நீரைத் திருடினாய் என்று அரசன் கேட்குங்கால் நான் ஓர் ஆவினைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருடினேன் என்று திருடன் சொல்கிறான். அரசனோ காரணம் கேட்பவனே அன்றித் திருடனின் சொற்களைச் செவிமடுப்பவன் அல்லன். மேற்கொண்டு வினா எழுப்பாமல் உடனே கையை வெட்டிவிடுவது அவன் வழக்கம். ஆனால் அவன்முன் திருடன் " ஆவிற்கு" என்று விளக்கியவுடன் அரசன் தயங்கி விடுகிறான். ஒரு நிமையம் சிந்தித்தபின் "மன்னித்தேன் போ" என்று விடுதலை செய்கிறான். இந்தத் தயக்கமே தயை ஆகும். தய+கு = தயங்கு; தய + = தயை.
எவனிடம் இத்தகு தயை நிலைபெற்றுள்ளதோ அவனே தயை உடையோன் - தயை நிதி. (தயா நிதி ). நில்+ தி > நி+ தி > நிதி. நில் என்பது நி என்றுமட்டும் வந்தது கடைக்குறை. தயையில் காரணமாக ஒன்றைக் கொடுக்கலாம்; அல்லது தண்டிக்காமல் விடலாம்; அல்லது நன்மை யாதாகிலும் செய்யலாம். தயை எவ்வுருக் கொள்கிற தென்பது வேறாகும்.

தய எனற்பாலதையும் தயங்கு என்ற பாலதையும் ஒன்றாய் வைத்து அவற்றின் பொருள் தொடர்பும் அடிச்சொல் உறவும் காட்டுகிறோம். அவற்றுள் நுண்பொருள் வேறுபாடில்லை என்பது இதன் பொருளன்று.

தய என்ற அடி, மன ஒன்றுபாட்டினையும் காட்டும். ஆவிற்கு நீரெனின் தன்னைத் தண்டிக்கலாகாது என்பது திருடனின் மனக் கிடக்கை; அதை அவன் அரசற்குத் தெரிவித்த மாத்திரத்தில் அவனும் அதே மனக்கிடக்கை உடையவனாய் ஆனான். இதுவே இங்கு மன ஒன்றுபாடு. தய என்ற அடியின் மூலத்திலிருந்து உண்டான பிற சொற்கள் உள. அவற்றை ஈண்டு காட்டுகின்றிலம்.

தய என்பது ஆ என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று தயா என்று பெயராகும். நில் என்ற வினையில் ஆகார தொழிற்பெயர் விகுதி ஏறி நிலா என்றாயது போலுமே இது என்பதறிக. இனித் தயாநிதியே என்ற விளியில் அயல்வழக்கு வடிவம் காண்போம்.

தயா + நிதி + = தயாநிதியே!
தயா + நிதி + = தயாநிதே.

இரண்டாவது புணர்ச்சியில் நிதி என்ற சொல்லில் ஈற்று இகரம் கெட்டு நித் என்று நின்று ஏகாரம் ஏறி, நிதே என்றாயது காண்க. முதல் வடிவத்தில் வந்த - ஈற்று இகரத்தை அடுத்து வந்த யகர உடம்படு மெய், இரண்டாவது வடிவத்தில் வரவில்லை. தமிழ் வடிவத்துக்கும் அயல் வடிவத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு யகர உடம்படு மெய்தான். தயாநிதே என்பதில் வந்த யாகாரம் புணர்ச்சியில் தோன்றிற்றென்பது அயல்விளக்கம் ஆகும். தாயா என்பதைத் தொழிற்பெயராக்கினும் அதுவும் அம்முடிபே கொள்ளும் என்பதுணர்க.

பதியே எனற்பால விளியைப் பதே என்பதும் நிதியே எனற்பலதை நிதே என்பதும் ஒரே சுவரில் காணப்படும் வெவ்வேறு வண்ணப்பூச்சுகள் போல்வன. எனினும் செந்தமிழியற்கை யகர உடம்படு மெய் புணர்த்துதலையே உகக்கும் என்பது அறிக. அதுவே மொழிமரபும் ஆம். அதனாலேதான் அது செந்தமிழ் ஆகிறது.
-----------------------------------------------------------------------------

திருத்தம் பின் தேவை காணின்.



புதன், 5 ஜூன், 2019

விபத்து

இது சில ஆண்டுகட்கு முன் எழுதிய கவிதை. பழைய கையெழுத்துப் படிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது கிடைத்தது.

ஒரு விபத்தில் நண்பர் இறந்துவிட்ட துயர நாளில் பாடப்பெற்றது. பழங்காலத்தில் இது போலும் பாடலை " கையறு நிலை" என்பர்.

"மரணம் வருவது காப்பதில்லை === நம்
மரணப் படைக்கலன் மாற்றியுள்ளோம்;
கரணம் தப்பின் மரணமென்பார் === அந்தக்
காரியம் மாறுமோ யாண்டுமில்லை.

" விபத்தில் இறந்தார் எவரெனினும் ===நெஞ்சு
விம்மும் துயரால் விடைபகர்வோம்;
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள் == இவர்(கள்)
சீர்சால் உலகின் முன்னவர்கள்.

உந்துருளிகள் (மோட்டோர்பைக் ) ஓட்டுவோர் அன்புகூர்ந்து கவனமாய் இருங்கள். அதுவே நீங்கள் எங்களைப் பிரியாமல் இருக்கும் வழியாகும்.

மரி + அணம் = மரணம்.
விழு+ பற்று > வி+ பத்து >விபத்து. விழுந்து சாதலைக் குறித்த பழயை புனைவு இன்று பொதுப்பொருளில் வழங்குகிறது. என்ன ஆச்சு என்பதை மலையாளத்தில் " எந்து பற்றி ? " என்பர். விபத்து என்பது நம்மைப் பற்றிக் கொள்ளும் நிகழ்வு.

குறிப்பு: முன்னைய இடுகையில் ஒரு தப்பு இருந்து அதைத் திருத்த முனைந்தபோது மென்பொருள் ஒத்துழைக்கவில்லை. அதுபின் திருத்தப்பெறும்.

செவ்வாய், 4 ஜூன், 2019

இனாம் என்ற சொல்லும் காரணமும்


இனி இனாம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.

உலகின் மிக மூத்த மொழி என்று ஒன்றை எந்த ஆய்வாளன் கூறினாலும் அந்த மொழியில் கூட பிற மொழி வழக்குச் சொற்கள் என்று கருதத் தக்கவை காணக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, தமிழர் கார் என்ற ஆங்கிலச்சொல்லைப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துகின்றனர். தமிழில் கார் என்ற ஒரு சொல் இருந்தாலும் அதன் பொருள் வேறு. இவ்வாறு கலப்புகள் நேர்ந்துவிட்ட நிலையில் அகரவரிசைக்காரர் ஒருவர் அச்சொல்லையும் தம் நூலில் பதிவுசெய்து பொருள்கூற முனையலாம். அதன் காரணமாக அது தமிழ்ச் சொல் ஆகிவிடுவதில்லை. அது அயலே. ஆகவே சொல்லின் மூலம் யாது என்றுஅறிதல் மிக்க முன்மையானதாகின்றது.

ஒரு சொல் எந்த மொழிக்குரியதாய் இருப்பினும் அது தேவை என்றால் அதை வழங்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சரியாக வழங்குவதற்கும் சொல் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் சொல் மூலக் கண்டுபிடிப்பு உறுதுணை செய்கிறது.
எடுத்துக்காட்டாக முகாம் என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன என்று அறிந்துகொண்டோம் - சென்ற இடுகையில். சில வேளைகளில் சொற்பிறப்புப் பொருளும் அதன் இற்றை வழக்குப் பொருளும் வேறுபடுதலையும் அறிந்து, அச்சொல்லை வழங்குவதா வேண்டாமா என்று முடிவுசெய்யவும் இத்தகு ஆய்வுகள் துணைபுரிகின்றன.


இனி இனாம் என்ற சொல்லைக்
காண்போம்.

இது இரு துண்டுச் சொற்களால் ஆனது. இவற்றுள் முன்னது : இன் என்பதாம். ஒட்டி விகுதியாய் நிற்பது ஆம் என்பதே.

இன் என்னும் சொல் உரிமை குறிக்கும். இது வேற்றுமை உருபாகவும் இலங்குகிறது. எடுத்துக்காட்டுகள்:

கந்தனின் மனைவி வள்ளி.
தமிழரின் வீரம் ஒரு மரபு.

இவ்வாக்கியத்தில் கந்தனின் மனைவி என்பது வள்ளி அவளுக்கு உரிமையானவள் என்பதைக் காட்டுகிறது. பிறவும் அன்ன.

இனம் என்ற சொல்லும் இன் என்பதனடிப் பிறந்ததே. நீங்கள் எந்த மக்கள் கூட்டத்துக்கு உரிமையானவரோ அந்தக் கூட்டமே உங்கள் இனம். இன் + அம் = இனம்.

பிச்சை போட்டவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை போட்டனர். கேட்பவன் இனாம் வேண்டுமென்றால் அதற்கு அவன் உரியவனாய் இருத்தல் வேண்டும். உரியவனுக்கு விலையின்றிக் கொடுக்கப்பட்டது. அத்தைக்கு நெல் கொடுத்தால் எப்படிக் காசு கேட்பது? அவள் நம்மைச் சேர்ந்தவள் ஆதலின் - இனம் ஆதலின் - இனாமாய்த் தரப்பட்டது.

இன் என்ற அடியிலிருந்தே இரு சொற்களும் தோன்றின. இன்றும் சிற்றூரில் " எனமாய்க் கொடுத்துவிட்டேன்" என்றுதன் பேசுகின்றனர்.
இனாம் என்பதைப் படித்தவர்கள் கையாள்கின்றனர். அல்லாதருக்கு இனம் அல்லது எனமே அது. பெறுதற்கு இனமல்லார் இனாம் பெறார். அறிமுகம் இல்லாதவராயின் ஏழ்மையினால் உரிமை பெறுகிறார்.

அதாவது பெறுதற்கு உரிமை உள்ளவருக்கே இனாம் வழங்கப்பட்டது. இனாம் என்பதன் சொல்லமைப்புப் பொருள்: இன்= உரிமை; ஆம் = ஆகும், என்பதே. விலையின்றிப் பெறுவதற்கும் ஒரு தகுதியை மன்பதையோர் கண்டறிந்திருந்தனர் என்பதையே இச்சொல் விளக்குகின்றது. இனிதாய் அமைந்த சொற்களில் இதுவுமொன்றாகும்.