திங்கள், 3 ஜூன், 2019

முகம். , முகாம், முகமை

முகமும் முகாமும்.

முகமென்ற சொல்லில் அடியாக விருப்பது மு என்ற ஓரெழுத்து ஒரு சொல்லே ஆகும், அதாவது ஒரே எழுத்தால் ஆன சொல்.

முகமென்பதைப் பிரித்தால் மு+ கு + அம் எனப் பிரியும். இம் மூன்று எழுத்துக்களையும் பொருளுணர்ந்து வாக்கியமாக்க வேண்டின் " முன்னுக்கு அமைந்திருப்பது " என்று சொல்வது சரி. எனவே இது காரண இடுகுறியாகிறது.

மு என்பதும் முல் என்பதும் ஒரு பொருளனவே. முலை என்ற சொல் இதிற் பிறந்தது. முல் என்பது முதல் நீளும், மூல் ஆகும். இம் மூலென்னும் வடிவத்திலிருந்து மூலம், மூலியம், மூலிகை முதலிய சொற்கள் அமைந்தன. மு என்பது து விகுதி பெற்று முது என்றாகி ' 'முந்திய" என்றாகும். காலத்தால் முன்னிருப்பதும் இதிலடங்கும்.

இவற்றை அறிந்தபின் முகாமென்பது எளிதாகிவிடுகிறது. படைஞர் தம் படைக்கு ஒரு முகாம் அமைக்கின்றனர். முகாமென்பது ஒரு முன்னணிப் படைவீடு ஆகும். அதிற் படையணியுடன் இன்னும் என்னென்ன வைத்துக்கொள்ள வேண்டுமென்பதை படைத்தலைமை தீர்மானிக்கும். படையினர்க்கல்லாத பிற முகாமும் ஒப்புமை பற்றி முகாமென்றே குறிக்கத் தகும். மு+ கு + ஆம் = முகாம். அதாவது முன்னிருக்கும்படி ஆகும் இடம் அல்லது கட்டிடம், இதற்கு ஆம் ( ஆகும் ) என்பதையே விகுதியாக்கியது ஒரு திறமை என்றே சொல்க. இதில் கு என்பதை இரண்டாவது முறை வராமல் விலக்கியது ஒலிநயம் விளைக்கவே ஆம், இல்லையேல் முகாகும் என்பது இன்னா ஓசைத்தாகிவிடும். இவ்வாறு விலக்குதல் பல சொற்களில் வருதல் காணலாம். பழைய இடுகைகளைப் படித்து அறிக.

இவ்வழியில் முகமை என்ற சொல்லும் இனிதாகவே அமைந்துள்ளது.

உருது மொழிக்குப் பல சொற்களை அமைத்துக் கொடுத்தவர்கள் தமிழர்களே. இனாம் என்பதுபோல முகாமென்பதையும் அவர்களே அமைத்தார்கள். இனாமென்பது இன்னொரு நாள் காண்போம்.. பின்னர் உருவமைத்த மொழி உருது. உரு + து.

ஞாயிறு, 2 ஜூன், 2019

வயிறு என்னும் முதன்மைச் சொல்.

இன்று வயிறு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு அமைந்தது என்ற கதையை அறிந்துகொள்வோம்.

நாம் பல சொல்லமைப்புகளையும் சில ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக அறிந்துகொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கி, இதிலிருந்து ஒரு தெரிவியலை ( தியரி - ஆங்கிலம் ) உருவாக்குவது எம் நோக்கமன்று. அத்தெரிவியல் அல்லது எத் தெரிவியலும் தானே முன்வந்துறுமாயின் சில வேளைகளில் யாம் அதனைக் குறிப்பிடுவதுண்டு. யாம் எழுதுவது சொல்லமைப்பை வெளிப்படுத்தவே ஆகும்.

வாயிலிருந்து தொடங்குகிற உணவு உட்கொள்ளும் வழியானது உடம்பின் உள்ளில் சென்று முடிகிறது அல்லது இறுகின்றது. இறு என்ற அடியினின்றே இறுதி என்ற சொல்லும் அமைகின்றது. ஆகவே இறுகின்றது என்ற வினைமுற்றை எளிதில் பொருளுணர்ந்து கொள்ளலாம்.

வாயிலிருந்து தொடங்கி உணவு செல்வழியானது குதத்தில் முடிவதாகச் சிலர் சொல்வதுண்டு எனினும் வயிறு என்ற சொல்லமைப்பில் இக்கருத்து கொள்ளப்படவில்லை. குதம் கழிவு வழியாதலின் போலும். குந்து > குது > குது + அம் = குதம். எனின் குந்தும் உடற்பகுதி.

வாய் தொடங்கி அது முடியும் இறுதியே வயிறு ஆகும். சொல் அமைந்தது இவ்வாறு:
வாய் + இறு = வாயிறு ( இங்கு முதல் குறுகி) > வயிறு ஆயிற்று. எனவே இது முதனிலை குறுகித் திரிந்த ஒரு சொல்லாக்க மாகும்.


இவ்வாறு திரிந்து அமைந்த சொற்கள் பல. உதாரணத்துக்கு:

சா + வு + அம் = சவம்
தோண்டு + = தொண்டை.

எனவே உணவு ஏற்கும் பகுதியின் இறுதியே வயிறு ஆகும்.

வியாழன், 30 மே, 2019

பாரியை : சொல்லின் திறப்பொருள்.

பாரியை எனற்பால சொல்லை ஈண்டு கண்டு மகிழ்வோம்.

பெரும்பாலும் இல்லத்தில் தங்கி வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவள் இல்லாள். அவள் தங்கி இருப்பது பெரிதும் அவள்தன் மனையில். அங்கு செய்தற்குரிய அனைத்தும் அவள் செய்கிறாள். ஆகவே
அவள் " மனைவி". கணவனின் இவ்வுலகச் செலவுக்கு ( பயணத்திற்கு) அவளே துணை ஆவாள். ஆதலின் அவள் "வாழ்க்கைத்துணை". இதைச் சுருக்கித் "துணைவி" என்றும் சொல்வர். இவ்வுலகத்தில் கணவனுக்கு வேண்டிய துணைமை அனைத்தும் தருபவள் ஆதலின் அவள் தாரம் ஆகிறாள். தரு+ அம் = தாரம். வாழை தரும் பழக்குலை "தார்". பிள்ளைப்பேறு தருபவள் ஆதலின் "தாரம்" எனப் பட்டாள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றுள் பலவும் வீடு என்னும் வட்டத்தின் குறுக்கத்தில் எழுந்த சொல்லமைப்புகளே. ஆனால் உலகில் அனைத்திலும் கணவனுடன் அவள் இணைந்தே பயணிக்கிறாள். பாரில் இயைந்திருப்பவள் ஆதலின் அவள் "பாரியை" ஆகிறாள். இது பாரியா, பாரியாள் என்றெல்லாம் ஆனமை உலகவழக்குத் திரிபுகள். இவற்றுள் பொருளொன்றும் சிறப்பு எய்திற்றிலது.