திங்கள், 13 மே, 2019

நட்டமும் குந்தகமும்



குந்தகமும் நட்டுநிற்றலும்


சொற்களிலிருந்து அவற்றின் கருத்துக்களை ஆய்ந்து அவற்றின் இயைபு காண்போமாக.

ஏதேனும் ஒன்றைத் தொடக்கி நடைபெறுவித்துக்கொண்டிருந்தால் அது நன்றாக : “ ஓடிக்கொண்டிருக்கின்றது " என்று சொல்வது வழக்கம். இந்தக் கருத்தைத் தழுவி " வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது" என்ற கருத்துவழக்கும் எழுந்தது.


நீங்கள் தொடங்கிய கடை எப்படி என்றால் " ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தப் பையன`கள் ஒரு மாதிரி பார்த்துகொள்கிறார்கள் " என்ற பதில் வருகிறது.

குந்துவது என்பது உட்காருவது ஆகும். முதலில் குந்துவது என்ற சொல்லைப் பார்ப்போம்.

அடிச்சொல்: குல் > …

குல் > குன் : ஓர் அடியினின்று இன்னோர் அடி தோன்றியது.

இப்படித் திரிந்தவை ஆயிரக் கணக்கில் இருந்தாலும், இன்னோர் எடுத்துக்காட்டு வேண்டின் தருதும்:

திறல் > திறன்.


குன் து > குன்று. ( சிறிய மலை). இது அம் விகுதி பெற்று நீண்டு, குன்றம் என்றாகும். குன்றமென்பது குன்று என்பதனுடன் சொற்போலி. அம் விகுதி வெறும் அழகுபடுத்தவே அமைந்தது. குன்றம்: வழக்குகள்: திருப்பரங்குன்றம், குன்றத்திலே குமரன். குன்றத்தின் உச்சி: கோடு. -டு: திருச்செங்கோடு; கசரக்கோடு.

குன் து > குந்து. ( உட்காருதல் ).


மனிதன் குந்தும்போதும் ஒரு விலங்கு குந்தும்போதும் ஒரு பறவை குந்தும்போதும் உடலின் விரிவு அகலமெல்லாம் குன்றிவிடுகிறது. கால் கைகளைக் குறுக்கிக்கொண்டுதான் அமைதல் காணலாம். இதனால்தான் குந்துதல் என்ற சொல் குறுக்கிக்கொள்ளுதல் என்னும் பொருளில் உட்காருதலைக் குறித்தது. ஆனால் ஆய்வாலன்றி இப்பொருளை அறியமுடியாமைக்குக் காரணம் சொல்தோற்றக் காலத்தின் பொருளமைதி இன்று இழக்கப்பட்டமையே ஆகும். இவ்வாறு அமைப்புப் பொருளும் வழக்குப் பொருளும் வேறுபடுதல் மொழியியல்பு; மாறாமையே வியத்தகுவது ஆகும்.


இனிக் குந்தகத்துக்கு வருவோம். நல்லபடி ஓடிக்கொண்டிருந்தது குந்திப்போனால் அதுவே குந்தகம் ஆய்விடும்.


ஓடிக்கொண்டிருப்பது நட்டு நிற்றலே நட்டம்; நடு + அம் = நட்டம். டகரம் இரட்டித்தது. இதுவும் கருத்தில் குந்தகத்துக்கு ஒப்புமையான கருத்தே ஆகும். குந்திவிடுவது என்ன? அப்புறம் ஓரிடத்து நட்டு நின்றுவிடுதல் என்ன?


https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_23.html

தொடர்ந்து வாசியுங்கள்.




ஞாயிறு, 12 மே, 2019

நிற்சயம்

நிற்சையம் என்ற சொல் நினைவுக்கு வருகிறது. வேறு சில இங்கு விளக்கவேண்டுமென்று எண்ணும்போது ஓடிவந்த இச்சொல்லை அலசிவிட்டு அடுத்தமுறை எண்ணியவற்றுக்குச் செல்வோம்.

இதுபற்றிய ஓரிடுகை ஈண்டு இருந்ததாகவே நினைவு.  அதைக் காண்டற்கியலவில்லை.

உலகில் சில நிற்பவை;  சில மாறி மறைபவை.   நிற்சையம் என்பது மாறாதது ஆகும்.  அதையே உறுதியானது என்று சொல்கிறோம்.

நில் + சை >  நிற்சை;   இதில் சை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி. இதுபோலும் சை விகுதி பெற்ற இன்னொரு சொல் நேர்ச்சை என்பதாகும்.  பச்சை என்பதில் சை இறுதி இருந்தாலும் இதில் வரும் சை என்பது சை விகுதியன்று.  பசு+ ஐ = பச்சை என்பதே.  இங்கு சை என்பது முன் உள்ள சு என்பதனுடன் ஐ விகுதி கலந்து வருவதாம். சகர இரட்டிப்பு கற்க.

இனி நிற்சை என்பதில்  அம் இறுதியைக் கொண்டு இணைக்க,  அது நிற்சையம் ஆகிறது.  இதிலிருந்து திரிந்த நிச்சயம் என்ற வடிவமே இன்று ள்ளது.    நிற்சையம் என்ற சரியான வடிவம் மீட்டுருவாக்கத்திற் கிட்டியதே  ஆகும்.

நிற்சையம் >  நிற்சயம்  ( இது ஐகாரக் குறுக்கம்).
நிற்சயம் >  நிச்சயம். ( இது பேச்சுவடிவச் சொல் ).

இது தமிழன்றிப் பிறிதில்லை.  ஆனால் அயலில் சென்று வழங்குதல் உடையது. இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று,

நில் என்பதும் விகுதிகளும் தமிழ்.  அயல் வழக்கு ஐயமூட்டக்கூடும். மலைவு தீர்தல் கடனே.

வெள்ளி, 10 மே, 2019

ஆனந்தம் மற்றொரு முடிபு

 
ஒரு பசு தமது ஆயின் அதுதான் ஆனந்தம். பழங்காலத் தமிழனின் தேவை, தலைக்கு மேல் ஒரு கூரை; வீட்டினருகில் காலையில் குடிப்பதற்குப் பால்தரும் ஒரு "பாலம்மை" --- சிவபெருமான் கிருபை வேண்டும்; மற்றென்ன வேண்டும்? அருந்தத் தருமொரு பாலம்மை வேண்டும்.

தமிழறிவாளர் வேலூர் க.. மகிழ்நன் ( 1935 வாக்கில் ) , பசுவைப் பாலம்மை என்றே பெயரிட்டு வழங்கினார். அவரே சங்க இலக்கியம் என்று திரு வி.க அவர்களால் புகழப்பட்டவர் அவர். சுண்டி இழுக்கும் தமிழ் நடை அவரது என்பதை அறிந்தோர் அறிவார்.

பாலம்மை ஒன்றிருந்தால் ----- இந்தப்
பாரினில் ஆமோர் ஆனந்தமே

என்று சிந்துபாடத் தோன்றுகிறது எமக்கு.

சொல்லாய்விலோ மொழி ஆய்விலோ ஈடுபடுவோன் உணர்ச்சி வயப்படுதல் ஏற்கத் தக்கதன்று என்பர் ஆய்வுகட்கு இலக்கணம் வகுத்தோர். உண்மைதான். ஆய்வு என்று வந்துவிட்டால் யாதொரு பாலும் கோடாமையும் நடுநிற்றலுமே ஆய்நெறி ஆமென்பதே பேருண்மை ஆம்.

இதனைக் கருத்தில் இருத்தியபடி ஆனந்தம் என்ற சொல்லின்பால் ஒரு மறுபார்வையைச் செலுத்துவோம்.

முன் வரைந்த இடுகையில் ஆனந்தம்:

ஆன் + அம் + தம்.

ஆன் = பசு. அம் = அழகே ஆகும்; தம் = தமதானால்.

தம் : து அம் விகுதிகள் எனினுமாம்.

ஆனென்பது அடுத்தவீட்டிலிருந்தால் கேட்டு வாங்கிப் பால் குடிப்பது அவ்வளவு பெருமைக் குரியதாகாது. தமக்கென்று ஆனொன்று இருப்பதே ஆனந்தம்.

இறையுணர்வினால் தோன்றும் உள்ளானந்தம் என்பது பிற்கால வளர்நிலை ஆகும்.


இனி ஆனந்தம் என்பது வேரொரு வழியிலும் அறிதற்குரித்தாகிறது:

+ நன்று + அம் > + நந்து + அம் = ஆனந்தம்.

ஆக நன்றான நிலைமை ஆனந்தம்.

இதில் வரும் ஆ என்ற முன்னொட்டு ஆகாயம் என்பதில் போல வந்தது.

காயம் என்பது பழைய தமிழ்ச் சொல். நிலா சூரியன் முதலிய காய்கின்ற வான்வெளி என்பது பொருள். காய் > காயம். இது காசமென்றும் திரிவது.

இது ஆக்கம் குறிக்கும் ஆ என்ற முன்னொட்டுப் பெற்றது. ஆகாயம் ஆனது போல் இங்கும் ஆனந்தம் வந்தது.

இனி :

நன்று என்பது நந்து ஆனது எப்படி? 0ன் து > ந்து.

பின் + து = பிந்து; பிந்துதல்.
முன் + து = முந்து; முந்துதல்.

மன் + திறம் = மன் + திரம் = மந்திரம் ( மன்னுதல் = நிலைபெறுதல் ). நன்மையை நிலைபெறச் செய்தல் மந்திரத்தில் நோக்கம்).

இயல் + திறம் > இயன் திரம் > இயந்திரம். { 0ன் + தி = ந்தி }

இம்முறை பின்பற்றி :

நன்று > நன் + து > நந்து.

நன்று என்பது உண்மையில் நல் து என்பதுதான் எனினும் இங்கு நல் என்ற அடியை எடுத்துக்கொள்ளாமல் நன் என்ற புணர்வடிவையே மேற்கொண்டனர் என்று அறிக.

நல் > நன் என்பது திரிபிலும் வரும் : எடுத்துக்காட்டு: திறல் > திறன்.

நன் என்பது திரிபு வடிவமும் ஆகும்.


இயல் திறன் என்பதை இயற்றிரம் என்று வல்லெழுத்துப் புணர்த்துக் சொல்லமைத்தல் கைவிடப்பட்ட உத்தி. அது எப்படியும் பேச்சு வழக்கில் இயத்திரம் என்றே வரும். அதை மெலிக்கும் வழி மெலித்து இயந்திரம் என்றதே மொழியில் ஆற்றொழுக்கு மென்னடைக்கு ஏற்றதென்பதை இப்புலவர்கள் அறிந்திருந்தனர். இலக்கணம் செவியினிமைக்கு வழிவிடுதல் இன்றியமையாதது காண்க.

முன் எழுதிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_16.html