புதன், 17 ஏப்ரல், 2019

கண்டித்தல் துண்டித்தல்

தலையில் துண்டு கட்டிக்கொள்வது சிலரிடத்துக் காணப்படுகிறது. மலேசியா இந்தியா முதலிய நாடுகளில் காணலாம்.

துண்டு என்பது  துண்+து,
இதில் ஈற்றுத்  து என்பது விகுதி.
ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்டதுதான்
துண்டு. பிறபொருளெனினும் இஃதொக்கும்.  எடுத்துக்காட்டு: மரத்துண்டு.

துணி என்பதும் ( க்ளோத் ) துணிக்கப்பட்டதனால் வந்த பெயரே.

அடிச்சொல் துண்.
துண்+ இ=  துணி.

வீடு கட்டுகையில் நெடுஞ்சுவர் எழுப்புவதுடன், இடையில் உள்ள மாடித்தரை அல்லது  உத்தரங்கள் முதலியவை விழாமல் இருக்கத் தூண் வைக்கப்படுகிறது. தூண்கள் கற்றூண், இருப்புத் தூண் என வகைபல.  இவை சுவர்போல் அடைத்த நெடியனவாய் இல்லாமல் மரங்கள் போல் மேல் கூரை அல்லது தரையினைத் தாங்கி நிற்கும்.

பண்டை மனிதன் தூண்கள் அமைக்கக் கற்றுக்கொண்டது மரங்களைப் பார்த்துத்தான்.  மரங்கள்மேல் வீடுகட்டி வாழ்ந்தவன் மனிதன்.

துண் என்ற அடியிலிருந்தே தூண் என்பதும் வந்தது.

துண் > தூண். (  முதனிலை திரிந்த பெயர்)

தூணுக்கு  ஸ்தம்பம் என்பர்.   தானே அல்லது தனியே தனியே நிற்பதுதான் தூண்.   ஆகையால்  தன்> தன்பு அம் > தம்பம் > ஸ்தம்பம் ஆனது.  பு அம் விகுதிகள்.  ஸ் என்பது தலைமெருகு.  திறம் > ஸ்திரம் என்பதுபோல.  ர- ற
மாற்றீடுகள்.

ஒ.நோ:  பின் > பின் + பு + அம் = பின்பம் > பிம்பம், ( பின் தோன்று நிழல்).

துண்டு என்ற சொல்லினடி  துண் > துணி என்றும் பின் துணித்தல் என்றும் ஆனது.  துண்டு ஆக்குதல் என்பதற்கு  துண்டு > துண்டித்தல் என்று சொல் அமைந்தது.

ஆனால் கண்டித்தல் என்பது  கடிதல் (  சினந்துகொள்ளுதல் )  என்பதன் இடைமிகை ஆகும்.   கடு>  கடி> கடிதல்.  கடுமையாக நடந்துகொள்ளுதல், 

கடி> கண்டி > கண்டித்தல்,  கண்டனை  கண்டனம்  ( அனம் அனை விகுதிகள்).
கண்டி என்ற சொல்லில் 0ணகர ஒற்றுத் தோன்றியது.

கண்டு என்பது ஒரு துண்டு என்று பொருள்படும்,  பூச்சி கடித்துக் கண்டு கண்டாகத் தடித்திருக்கிறது என்ற வழக்கை நோக்குக.  நூல்கண்டு என்ற வழக்கையும் காண்க.

எனவே கண்டு > கண்டித்தல் என்ற விளக்கம் அத்துணைப் பொருத்தமன்று,

அறிஞர் சிலரும் இதை விளக்கியதுண்டு.

தட்டச்சுத் திருத்தங்கள்  பின்.





செவ்வாய், 16 ஏப்ரல், 2019

விகுதிப்பொருத்தம்.

ஒரு புதிய சொல்லைப் படைப்பதென்றால் பல திறமைகள் தேவைப்படுகின்றன.  தகுதியுடைய ஒரு பகுதியை ( நிலைக்கூறு ஆவதைத்  ) தெரிந்தெடுப்பது மட்டுமின்றி,  விகுதி என்னும் வருகூறும் பொருத்தமாக இருத்தல் இன்றியமையாதது என்று அறியவேண்டும்.

இதனைச் சேனை என்ற சொல்லின்மூலமாக விளக்கலாம்.

பலர்  சேர்ந்து செல்வதே சேனை.  சேமிப்பு என்ற சொல்லில் எப்படி சேர் என்பதன் இறுதி ரகர ஒற்று மறைந்து சேர்மிப்பு என்பது சேமிப்பு என்று ஆனதோ அப்படியே சேர்நை என்று வரவேண்டியது சேர்னை > சேனை என்றானது.  நகர வருக்கம்  0னகர வருக்கமாக மாறுதலுடையது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.  அண்மைய எடுத்துக்காட்டு ஒன்று:

ஓட்டுநர் >  ஓட்டுனர் ( நகரம் 0னகர மானது )
இயக்குநர் > இயக்குனர்.(மேற்படியே)

சேனை என்ற சொல்லைப் படைப்பதன் முன் மனிதனின் மூளையில் உருவான அடிப்படைக் கருத்து:  சேர்ந்து அனைவரும் செல்வது என்பதே.

இதன் பகுதிகளை மட்டும் எடுத்து:

சேர் + அனை >  சேரனை >  சேனை.  அல்லது  சே+னை.>  சேனை.

அனைவரும் பாடுவது பஜனை.

பாடு+ அனை > படனை > பஜனை. இங்கு முதலெழுத்தைக் குறுக்கிப் பாடு என்பதில் உள்ள சொல்லும் பொருளும் மறைக்கப்பட்டது.

இதுபோலும் குறுகிய இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.
காண் > கண்.

பெயர் நீண்டு வினையாதலும் கொள்ளப்படும்.

அனை என்பதே விகுதியாக்கப்பட்டு, பின் அகரம் களையப்பட்டு  0னை மட்டுமே தேய்ந்த விகுதியாய் நின்றது.

ஐகார இறுதி பிற பேச்சுக்களில்  ஆகாரமாக மாறும்.  சேனை> சேனா.

சோடனை என்னும் சொல்லும் இங்கனமே  வேண்டிய இடங்களிலெல்லாம் சோடித்தல் என்ற பொருள்வர,  சோடி+ அனை =  சோடனை என்றானது. வேண்டிய  அனைத்தையும் அழகுபடுத்தல். அனைத்தும் சோடித்தல். அழகற்ற அனைத்தையும் அழகுபடுத்தாவிடில் சோடனையில் புண்ணியமில்லை என்பதை உணரவேண்டும்.  இச்சொல்லுக்கும் அனை என்ற விகுதி பொருத்தமே.

கொள்வனை கொடுப்பனை என்ற  சொற்களில் மணமக்கள் சார்பினர் தங்கள் தங்கள் உறவினர்களையும் ஏற்றுக்கொள்ளுதலால் அனைவரும் உட்படுத்தப்படுகின்றனர் என்பதையும் கவனிக்கவும்.

இவை "அனை" என்ற விகுதி பொருந்திய சொற்களாம்,

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தென்சீனக் கடல்: ( ஹாங்காங் சுற்றுலா)


தென்சீனக் கடலோரம் தெவிட்டாத அழகே
கண்சொன்ன படிகேட்டு நுகர்ந்தின்பம்  பழகே.