சனி, 30 மார்ச், 2019

பீடம் என்பது

வரிசையாய்ப் பல வந்து முன் நிற்கின்றன சொற்கள் என்றாலும் எல்லாவற்றையும் எழுதிவிட முடிவதில்லை. இன்று ஒன்றை மட்டும்
கவனிப்போம்.   இச்சொல் பீடம் என்பது.

இதன் முந்து   அடியாய் இருப்பது பீடு என்னும் சொல்லாகும்;

பீடு என்பது பெருமை என்று பொருள்படும்.

பழங்கால மனிதனுக்கு மேடு, பள்ளம்,. உயரம், தாழ்வு என்பன போன்ற கருத்துக்களே பல சொற்களைப் படைக்க உதவின. மலை, மடுவு போன்ற
இயற்கை நில அமைவுகளும் இவ்வாறு உதவின.

பிடுதல் என்ற சொல்லே பீடு என்பதன் முன் உள்ளது ஆகும். தரை நிலையிலிருந்து பிடப்பட்டு அல்லது வேறுபாடுற்று உயரமாய்க் காணப்படும்  உயர்நிலம் பீடு > பீடம் ஆனது.   பீடு என்பது பிடு என்றதில் விளைந்த முதனிலை திரிந்து  நீண்ட தொழிற்பெயர் ஆகும்.

பிள் என்பது இதன் மூல அடி.  பிள் > பிளவு.  பிள் > பிடு என்று திரியும். இது சுள் > சுடு, பள் > படு என்பன போன்றவையே.   பள்: >பள்ளம்;  பள் > படு> படுகை என்பன அறிக.

தரையின் மட்டத்திலிருந்து பிளவு பட்டு மேலெழுந்து  பீடம் அமைகிறது. இஃது இயற்கையில் அமைந்தாலும் மனிதனால் அமைப்புற்றாலும்  சொல்லமைப்பில் ஒரு வேறுபாடில்லை.

பிடு என்பது கையால் பிடுவது மட்டுமின்றித் தானே பிடுதலுண்டதையும் குறிக்கும் என்பதறிக.

பெருமை குறிக்கும் பீடு என்ற சொல்லும் இயற்கை அமைப்புகளிலிருந்து உருவான கருத்தே ஆகும்.

பீடம் என்பது பிடு+ அம் என,  நேரடியாகவும் காட்டப்பெறுதல் கூடும்.  முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று அறிக.

பீடம் என்ற உயர்தரை அல்லது நிலம்  பல வேறு சொற்களிலும் கலந்து வரும்.
எடுத்துக்காட்டு:  தலைமைப் பீடம்.  பீடாதிபதி.  (பீட  அதிபதி).

ஆனால் பீடி என்ற சொல் தொடர்புடையதன்று:  பிடி> பீடி.  புகைப் பிடிப்பதற்காவது.

அறிவோம் மகிழ்வோம்.

செவ்வாய், 26 மார்ச், 2019

சொப்பன வாழ்வு

உறக்கத்தின்போது கனாக்கண்டு நல்லபடியாக ஒலிப்புறாத சொற்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையே சொப்பனம் ஆகும்.

கருத்து:  சொற்களைப் பன்னுதல்.
பன்னுதலாவது பலமுறை  நன்`கு ஒலிக்காமல் வாய் அசைவுறல்.

பல் > பன் (லகர 0னகரத் திரிபு).  ( பல தடவை என்னும் அடிப்படைக் கருத்து)
பன் > பன்னு:  வினைச்சொல் ஆக்கம்.
பன்னுதல் :  தொழிற்பெயர்.

இன்று உள்ள பொருள்:

கனவு,  குறைச் சொல்லொலிக் கனா.

சொல்+ பன்னு + அம் > சொற்ப(ன்)னம் (  இடைக்குறை:ன்  )>  சொற்பனம் > சொப்பனம்

இங்கும் விளக்கம் சிறிது உள்ளது.

.https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html


இதன் அடிப்படைப் பொருள் சொற்களைப் பன்னுதல் என்பதே ஆதலின், இன்று இதன் பொருள் மாறிவிட்ட நிலையில் இது திரிசொல்லாகும்.

சொல்லிலும் திரிபு; பொருளிலும் திரிபு.

இத் திரிசொல்லைப் பயன்படுத்திப் பாபநாசம் சிவன் எழுதிய:

" சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய  சாமி உனை மறந்தார்!  ---  அந்தோ
அற் பப் பணப் பேய் பிடித்து  அறிவிழந்து
அற்பர்களைப்  புகழ்வார்."

இங்கு  சொற்பன, அற்பப்பண என்ற எதுகைகள் மிக நன்று.

நாவால் பொய்மொழிவார் ---- தனுதுவாழ்
நாளெலாம் பாழ்செய்வார்.  ----  உன்
பாவன நாமமதை ----- ஒருபொழுதும்
பாவனை செய்தறியார்

அந்தோ விந்தை இதே -----  அறிந்தறிந்து
ஆழ் நரகில் உழல்வாரே  ---- இவர்
சிந்தை திருந்தி  உய்ய  ---- குகனே
உந்தன் திருவருள் புரியாயோ.

இந்தப் பாடலை எம்.கே  தியாகராஜ பாகவதர் ( மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராசன், இசைவலர் ) படத்தில் பாடியிருந்தார்.

இனி அந்தோ என்ற சொல்லாட்சியைப் பார்ப்போம்.

என்ன (தமிழ்)  >  எந்து  ( மலையாளம்)
வந்து (த )  .>   வன்னு  (மலை)

இவ்வாறு   0ன்ன > ந்த  மாறுதலுடைமை காணலாம்.

இதுபோலவே 

அன்னை > அன்னோ  (தாயே )  என்பது
அன்னோ > அந்தோ என்று மாறிவந்துள்ளது.

இடையில் இந்த ஒலிமாற்றினை விளைப்பது து அல்லது த் என்னும்
இடைநிலை தான்.

அன்+ ஓ = அன்னோ.  ( அன்+ஐ = அன்னை) இதைப் பின் காண்போம்.
அன்+ த் + ஓ =  அந்தோ.

இரண்டிலும் அன் என்பதே அடிச்சொல்.

அன்னில் உள்ள 0னகர ஒற்று  அம்மில் மகர ஒற்றாகும்.

ம்>ன்  போலி.   திறம் > திறன்.  அறம் > அறன்.

இவ்வாறு அறிந்து மகிழ்வீராக.




 

முல் முன் மு அடிச்சொற்கள். கு என்பது சொல்லாக்கத்தில்.

இன்று முகமென்னும் சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.

இந்த அடிச்சொற்களை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்:


முல் > முன் >  மு.

இவை ஒவ்வொன்றிலிருந்தும் பல் சொற்கள் தோன்றியுள்ளன. சொல்லியலில் லகரத்தின் பிந்தியது 0னகரம் ஆகும்.  பின் 0னகரம் கெட்ட அல்லது மறைந்த நிலையில் மு என்ற எழுத்துமட்டும் நின்று ஒரு சிறு சொல்லாகிவிடுகிறது. இச்சொல் இப்போது தனியாக வழங்கவில்லை.  முழுச் சொற்களுடன் கலந்தே வரும். ஆனால் ஒரு காலத்தில் அது தனிச்சொல்லாக இருந்து அதன் தனிவழக்கை அல்லது புழக்கத்தை இழந்துவிட்டது என்பதை அறிக.இதன் விளக்கத்தை வேறொருகால் ஆய்வு செய்வோம்.

இப்போது முக்கு அல்லது முக்குதல் என்ற சொல்லைக் காணவும். இதன் பொருள் முன் கொணர்தல் என்பது;  அதுவும் உடலின்  உட்காற்றின்  மூலம் 
அழுத்தம் தந்து வெளிக்கொணர்தல் எனின் வரையறவு சரியாகவிருக்கும். இச்சொல்லில்

மு + கு என்ற இரண்டு உள்ளுறுப்புச் சொற்கள் உள்ளன.

மு:   முன் இருத்தல் என்னும் அடிப்படைக் கருத்து.
கு என்பது இன்றும் உருபாக உள்ளது.  அவனுக்கு எனின் அது வேற்றுமை உருபாக வருகிறது. இதுவே இச்சொல்லாக்கத்தில் வந்துள்ளது.

மு+ கு = முக்குதல் என்று வினைச்சொல் அமைகிறது.

கு என்பது சேர்விடம் மற்றும் சென்றடைவு குறிப்பதாகும்.

மு + கு =  மூக்கு என்ற சொல்லில் மு என்ற முன்மை குறிக்கும் சிறுசொல் முதனிலை திரிந்து  மூக்கு என்று அமைகின்றது.

மு + கு + அம் =  முகம் என்ற சொல்லில் முன் என்பது முன்பக்கத்தையும் குஎன்பது  இருப்பிடத்தையும்  அம் என்பது விகுதியாகவும் வந்து சொல்லமைவதைக் காணலாம்.

அம் என்பது விகுதி என்றோம். அது நீண்டு ஆம் என்றும் இறுதியில் விகுதியாகவே நிற்கும்.

இப்படி அமைவது தான் முகாம் என்ற சொல் ஆகும்.

மு+ கு + ஆம் =  முகாம் ஆகும்.

முகவை என்ற சொல்லில்  மு+ கு + வு + ஐ என்று  வந்து  இருவிகுதிகள் நிற்கின்றன.  இவ்விரண்டையும் ஒருவிகுதியாகக் கருதி  வை என்றும் சொல்லலாம்.  கொலை என்ற சொல் கொல் + ஐ என்று ஐ தனியாக நிற்றல் காணலாம்.

முகன் என்ற சொல்லில்  முகம் + அன் =  முக + அன் =  முகன் என்றாகி முகத்தை உடையோன் என்ற பொருள்தரும்.  எடுத்துக்காட்டு: ஆறுமுகன்.

முகி என்பது முகன் என்பதன் பெண்பாலாக வருதல் காணலாம்.

இன்னும் பல சொற்கள்  இப்பகுதியில் உள்ளன.  இன்று இத்துடன் நிறுத்துவோம்.  பின்னர் தொடர்வோம்.

நன்றி.