செவ்வாய், 12 மார்ச், 2019

தீபகற்பம்.

தீபகற்பம் என்ற சொல்லை முன் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.
பெருநிலத் தொடர்பு முற்றுந்தீர்ந்த  ஒன்று தீர்வு > தீவு  ஆகும்.  ரகர ஒற்று வேறு பல சொற்களில் போல இதிலும் மறைந்தது.

 தீவகம் அல்லாத நிலம் என்று இதை வாக்கியமாக்கலாம்.  தீவு எனினும் தீவகம் எனினும் ஏறத்தாழப் பொருள் ஒன்றே.  அகமென்பது ஓர் கூடுதல் இறுதிநிலையாக வருகிறது. இதற்குப் பொருள் கூறுவதாயின் அகம் - தீவின் உட்புற நிலம் எனினும் இழுக்காது.

தீவ என்பது தீப என்று திரிந்துள்ளது.  வகர பகரப் போலி.

தீப + கற்பம்?

இதில் தீபம் ஏதுமில்லை.  தீபத்திற்குக் கற்பம் ஏதுமில்லை.  தீபத்தில் எதுவாயினும் எரிந்துவிடுமாதலின் கற்பம் தங்குவதில்லை. தீவகத்து ஒரு கற்பம் இருக்குமாயின் அதுபோலும் தூய கற்பமும் வேறில்லை என்று முழங்கலாம். இதனை இப்படிக் கற்பித்து வரைதல் ஒருவனின் கற்பனைத் திறனை விரித்துக்கொள்ளுதலாம். தீபகற்பம் என்னும் நிலம் முப்புறம் திரி எரிய ஒருபுறம் பிடி இருத்தல்போல என்றுகூட ஒப்பீடு செய்யலாம் எனினும் சொல்லமைப்பு அதுவன்று.

 இவற்றில் கிருதமொன்றும் இல்லை.  அயலென்பார் அறியார். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழியோ வெளிநாட்டு மொழியோ இல்லை என்று ஒப்பின் இச்சொல் அம்மொழிக்கும் உரித்தே ஆகும்.  ஆனால் தீபகற்பமென்பது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று.

குறிப்பு:
முக்கரைத்தொடர் - பொருள்: மூன்றுபக்கம் கரைகள் ஒருபுறம் நிலத்தொடர்.



 

திங்கள், 11 மார்ச், 2019

தொந்தி.

இன்று "தொந்தி"  என்ற சொல்லைக் காண்போம்.

இச்சொல்லில் தி என்பது விகுதி  மிகுதி என்ற சொல்லில் தி விகுதி  யானதுபோல் தொந்தி என்பதிலும் தி எனல் விகுதி.

தொந்தி என்ற சொல்லில் தொம் என்பதே பகுதி அல்லது முதனிலை ஆகும்.

தொம்+ தி =  தொந்தி.

தொங்கு என்ற சொல்லை ஒப்பிடுக.

தொம் + கு =  தொங்கு.

தொந்தி என்பது தொங்குவயிறு.

தொம்பை தொம்மை தொப்பை
தொம்பைக்கூடு  தொம்பைக்கூண்டு தொம்பைமாலை முதலியவும் உள,

தொம்பை என்பது தொங்கும் பானை போன்ற வயிறு.

ஞாயிறு, 10 மார்ச், 2019

சொற்சிந்தனைகள். சித்து விளையாட்டும் சித்தரும்.


இந்தியச் சமய வரலாற்றில் இறைப்பற்று மேலீட்டால் ஒழுக்கமுடைய பெரியோர் இருவகையானோர் தோன்றினர். ஒருவகையினர் மிகப் பெரியோர் என்று எண்ணப்பட்டனர். இவர்கள் மாமுனிவர்கள். அண்டமா முனிவர்கள் என்றும் குறிக்கப்பெற்றனர். சங்கதத்தில் மகரிஷிகள் என்றும் தமிழில் பேரிருடிகள் எனவும் சொல்லப்பட்டனர். பிறவிப் பெரியோர் என்றும் சொல்லலாம். “ மக " என்பதும் " மகா" என்பதும் இவர்களுக்கு அடைமொழிகளாய் வந்தன.

இந்த மாமுனிகளுக்குக் கோட்டுக்கு இணைகோடுபோல வேறு இறைப்பற்றுச் சிந்தனையாளர்களும் தோன்றினர். மன்பதையினுள் இல்லறம் நடத்தித் திடீரென்று தோன்றிய உணர்வு வேறுபாட்டினால் அவ்வில் வாழ்வினைக் களைந்தெறிந்து துறவியானவர்கள் இவர்களிற் பெரும்பாலோர். இத்தகையோர் மாமுனிவர்கள் ஆகாவிட்டாலும் சிறுமுனிவர்கள் ஆயினர். இவர்களை மக்கள் அப்படிக் கருதியதால் சிறு என்ற சொல்லினின்றே தோன்றிய சொல்லினால் இவர்கள் சுட்டப்பட்டனர்.

சிறு + அர் = சிற்றர் > சித்தர்.

இவர்கள் மாமுனிவர்கள் போல் பெருந்தவம் இயற்றாமல் அவ்வப்போது அறிவுரைகளை நடப்பிற்கேற்பவே உதிர்த்தனர். இவை " சிந்தனை" எனப்பட்டன. இதுவும் சிறு என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்லாகிய சிந்து என்பதிலிருந்து பிறந்ததே.

சில் = சிறியது.
இதற்கு எதிர்ச்சொல் பல் என்பது.

சில் > சில; பல் > பல.
சில் என்பது உருவிற் சிறியதும் எண்ணிக்கையிற் சிறியதும் என இருவேறு விதமானவை.

இவர்கள் வியக்கும்படியான சில சொன்னோராவார்.

சில் > சின் > சிந்து. ( லகர 0னகரப் போலி )
சில்+து > சிற்று > சித்து ( திரிபு ) > சிந்து ( மெலித்தல் விகாரம்).

இவை இருபிறப்பிகள்.

சிந்து > சிந்தி > சிந்தித்தல் ( வினையாக்கம் ).
சிந்தி + அன் + = சிந்தனை. அன்: சொல்லாக்க இடைநிலை. : விகுதி.

அவ்வப்போது நிகழ்வுக்கு ஏற்ப எண்ணிச் சொல்லுதல்: சிந்தனை. சிறு சிறு மன உணர்வு வெளிப்பாடுகள்.

இப்போது இது (சிந்தனை ) தன் சிறுமைப் பொருள் இழந்துவிட்டது.

இந்தச் சிற்றர்கள் (சித்தர்கள் ) செய்த வியக்கத் தக்க செயல்கள்: கசக்கும் கரும்பை இனிக்கச் செய்வது; வாழைமட்டையில் நெருப்பு எரியவைப்பது போலும் செயல்கள்: ----- வியன்செயல்கள் ----- சித்துகள் என்றே சொல்லப்பட்டன. சிறிது நேரத்தில் கண்டு வியந்து போற்றத்தக்கவை இவையாம்.

தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்று கூறிய மாத்திரத்தில் கூரைமேலெறிந்த அப்பம் தீப்பற்றி எரிகிறது. இதுவும் சித்து ஆகும். ஊர்மக்கள் இவை போல்வன சித்துவிளையாட்டு என்றனர்.

நந்த வனத்திலோர் ஆண்டி --- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந்தானொரு தோண்டி --- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

தோண்டி: தோண்டப்பட்டது போன்ற உள் குடைவான மண்பானை.

சொல்லமைப்பு முறையில் சித்தர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதே விளக்கம். பின் வழக்கில் அது வேறு பொருள் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் கூடும்.

சிந்து: அளவடி யல்லாத சிறிய கவி.

அறிந்து மகிழ்க.

பிழைபுகின் திருத்தம் பின்.