புதன், 6 மார்ச், 2019

குறடாவும் பிளாயரும்



 பிளாயர்.

இந்த இரு சொற்களும் வழக்கில் உள்ளவையாகும். இவற்றுள் பிளாயர் என்பது ஆங்கிலச் சொல்.

பிளாயருக்கு நண்டுக் கொடுக்குப் போல விரிந்து ஒரு பொருளைப் பிடித்து க்கொள்ளும் திறம் உள்ளது. விரிதல் என்பதும் பிளத்தல் என்பதும் ஒன்றுதான், நுட்ப வேறுபாடுகளைப் பொருண்மையில் உட்படுத்தாவிடில்.

இந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழ்க் கண்ணாடி கொண்டு நோக்கின், பிளத்தல்: பிள + ஆய் + அர் என்று பிரித்து அருத்தம் கூறிவிடலாம். (மனிதன் நாவொலிகட்கு இயற்கையில் எப்பொருளும் இல்லை. ஒலிக்குப் பொருள் உட்புகுத்தப்படுகிறது. அதனால் சொல்லுக்குப் பொருள் கண்டு கொள்கிறோம். உட்புகுத்தலாவது அருந்தும்படி செய்தல். அல்லது " அருத்துதல் " ( அருந்து என்பதன் பிறவினை ). எடுத்துக்காட்டு: பொருந்து > பொருத்து; அருந்து > அருத்து. ஆகவே பிள என்பது இணைந்து நிற்கும் ஒன்று பிரிதலைக் குறிக்கிறது. பிள என்பது பிரி என்பதும் ஓரடியினின்று வருவன. இதை இங்கு விளக்கவில்லை.

பிள : பிளத்தல் என்பதன் அடியாம் ஏவல் வினை.
ஆய் : வினை எச்சம்.
அர் : விகுதி. தமிழிலும் இது விகுதியாய் வருதல் உண்டு.
செக்கரில் தோன்ற" ( புறம்: 16) = சிவப்பாய்த் தோன்ற.
வழக்கு: செக்கர் வானம்.
இதில் அர் விகுதி இறுதிநிலை ஆதல் காண்க.
தக்கர் - தண்ணீர் கொள்கலம். தண்ணீர் தங்கவைக்கும் (ஊற்றிவைக்கும் ) பெரிய ஏனம்.
தங்கு + அர் = தக்கர் ( வலித்தல் விகாரம்).
தேர்தலில் அவர் தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். தக்க = தங்க.
இவற்றிலிருந்து அர் விகுதி பயன்பாடு அறிக.
பிளாயர் என்பது தமிழன்று. ஆனால் பல ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழ் மூலம் இருத்தல் காணலாம். ஏன் என்பதை நீங்கள் ஆராயலாம். தமிழ் உலக மொழியுமாம். அதன் மூலங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. ( மூலங்கள் எனின் மூலச் சொற்களும் சொல்லடிகளும் ).
மூல ஐரோப்பியத்தில் ப்லெக் என்பதிலிருந்து இது வருதலைக் கூறுவர். இலத்தீன் பிளக்காரே என்பதும் காட்டப்பெறுகிறது. தமிழ்- பிளத்தல் காட்டப்பெறவில்லை. இதுபோலும் பல சொற்களை ஆராய்ந்து ஒரு பத்து ஆண்டுகளின் முன் ஒருவர் இணையத்தில் வெளியிட்டிருந்தார். யாம் சேமித்து வைத்தவை அழிந்தன.
இத்தகு சொற்களை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

 குறடா:

இனி குறடா என்ற சொல்லுக்கு வருவோம். ( இது கட்சிக் குறடா அன்று.) குறடா என்`கின்ற ஓர் ஆயுதம். இது குறு குறுகு என்ற அடியினின்று போதருவதாகும்,

குறு ( குறுமை, குறுகுதல் அதாவது அகலம் குறைதல் ).
சில சொற்கள் காண்போம்.
குறு > குறள். ( ஈரடிப் பாவகை)
குறு > குறுவை ( குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ஒரு நெல்வகை).
குறு > குறுக்கை ( சிலுவை) ( குறுக்கு நெடுக்கில் அடிக்கப்பட்டு இணைப்புடைய இரு சட்டங்கள் அல்லது கட்டைகள் .
குறு> குறுணி. ( குறுகிய அளவை, ஓர் அளவை ).
குறு > குறுகல் : அகலக் குறைவு
குறு > குறுக்கம் ( அகலம் குறைத்தல், அகலம் குறைவானது )
குறு> குறுங்கண் : சன்னல், சாளரம்.
குறு > குறுங்கண்ணி : ( கொண்டைமாலை)
குறு > குறுஞ்சிரி : புன்னகை
குறு> குறுணை ( குறு நொய் ) : உடைந்த அரிசி.
குறு >குறுநணி: அண்மையில்.
குறு > குறுமுனி: அகத்தியனார்.
இங்கு தரப்பட்டவை குறு என்பதனடிப் பிறந்த சில சொற்கள். இன்னும் பல உள. பொருளும் முழுமையாகத் தரவில்லை. இவை வெறும் மாதிரிகளே.
இப்போது குறடாவுக்கு வருவோம்.

குறு > குறடா.
குறு + அடு + .
இதில் ஆ விகுதி. நிலா என்பதில்போல.
குறுக்கப்பட்டு கொடுக்குகள் போல் அடுத்துப் (பிடிக்கும்) ஒரு பிடிகருவி. ஆகவே " பிளாயர்" ஆகும்.
பிளாயர் என்ற ஆங்கிலத்தைப் பேசாமல் குறடா என்`.
அறிந்து மகிழ்வீர்.
பிழைகள் புகின் திருத்தம் பின்.







செவ்வாய், 5 மார்ச், 2019

பூக்களில் ஈக்கள்போல்...

இந்த நாலுவரிக் கவியை ஒரு புகைப்படவிளக்கமாக எழுதினேம்.  அந்தப்  புகைப்படம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடிய வில்லை.  அதைக் கண்டெடுத்தால் பதிவேற்றம் செய்வேம்.  இப்போது கவிதையை மட்டும் வெளியிடுவேம்.

பூசைஒவ் வொன்றிலும் மாசறு மக்கள்
பூக்களில் ஈக்கள்போல் ஏக்கறு தக்கோர்
ஆசைகள் யாவையும் ஓசுறு தெய்வம்
அகம்கனிந்  துண்மையில் நிறைவுறச் செய்யும்.


மாசறு - குற்றமற்ற
தக்கோர் - நல்லோர்
ஏக்கறு  -  தாழ்மையுடன்
ஓசுறு -  கீர்த்தி மிகுந்த.
அகம் - மனம்

ஈக்கள்  என்றது: தேனீக்களை.   தேன் என்ற சொல் தொக்கது.
ஆசை :  ஒன்றன் பால்  மனம் அசைவது.  அசை -  ஆசை ,   முதனிலை
நீண்டு  திரிந்த தொழிற் பெயர் .  சுடு >  சூடு என்பது போல.

உரை:

ஒவ்வொரு பூசையின் போதும்  மிகுந்த பணிவுடன் மாசில்லாத மக்கள் பூக்களில் ஈக்களைப்போல தக்க வாறு கூடி விடுகின்றனர்.   அவர்கள் தெரிவிக்கின்ற  எல்லா ஆசைகளையும்  கீர்த்தி வாய்ந்த தெய்வமானது  மனம் கனிந்து  நிறைவு  ஏற்படச் செய்கின்றது.

திங்கள், 4 மார்ச், 2019

தலைமாற்றும் மாற்றாமையும் : சொற்புனைவு.

வாக்கியங்களில் வரும் ஆற்றொழுக்கினைப் பின்பற்றாமல் மறுதலையாகச் சொற்களைப் போட்டுச் சொல்லமைப்பை மேற்கொள்ளுவது ஒன்றும்  புதிய உத்தி அன்று.

அல்+ திணை =  அஃறிணை என்பதிலே திணை அல்லாதது என்ற வாக்கியத்தில் வரும் சொற்களைத் தலைமாற்றிப் போட்டுப் புனைந்திருத்தலைக் காணலாம். பிற்காலத்தில் இந்த உத்தியை மேலும் மேலும் கையாண்டனர் என்பதே உண்மையாகும்.  எடுத்துக்காட்டு:

கருத்து வாக்கியம் :  தாய்க்குப் பின் தந்தை
இதைத் தலைமாற்றி:
பின் + தாய்  >   பிதா

பின் என்பதில் உள்ள  0னகர ஒற்று விலக்கப்பட்டது:  எடுத்துக்கொண்டது: பி என்ற முதலெழுத்து மட்டுமே.

பின் > பி.   ( கடைக்குறை).
தாய் > தா  (  கடைக்குறை ).

அஃறிணை என்ற மறுதலை அமைப்பைப் போல இன்னொரு சொல்லமைப்பு:

கருத்து வாக்கியம்:   தாரம் தப்புதல்.  ( வாழ்க்கைத் துணையை இழத்தல் )
இதைத் தலைமாற்றி:
தப்புதல் தாரம்.
தப்பு + தாரம் =  தப்புத்தாரம்
மெய்யெழுத்துக் களைதல்:
தபுதாரம்.
இறுதி மகர ஒற்று களையப்படவில்லை.
இதைத் தொல்காப்பியனார் பயன்படுத்தியுள்ளார்.   அவரே புனைந்ததா என்று தெரியவில்லை.

கருத்து வாக்கியம்:  அது அம்மா (  பணிவினால் அஃறிணைப் பயன்பாடு)
மா +  (அ)து  >  மாது.  ( அம்மையார்).


இன்னும் சில: (தலைமாற்று இல்லாதவை).

அகத்திலே இருக்கவேண்டியது:   இரு+ அக(ம்) + சி + அம்=  இரகசியம்.
அவிழ்க்கும் இரு கைகள் உடைய மேலணி:    இரு + அவிழ் + கை > இரவிக்கை.
ழகர ஒற்று நீக்கம். இரு அவிழும் கைகள் உள்ள உடை.

கருத்து:  விழுமிய புலம்.  இதைப் பார்ப்போம்.
சுருக்கினால்  விழுபுலம்.
இதில் தலைதிருப்பு உத்தி எதுவும் கையாளாமல்:

விபுலம்.

புலம் என்பது நிலம் காட்சி என்ற பல்பொருளொரு சொல்.

விபுலம் என்பது அதன்படியே பல பொருள் தரும்.

விழுமிய புலம் -  சிறந்த காட்சி என்றும் பொருள்படும்.


கெட்டுப் புன்மையாகியாகிவிட்ட நிலைமைக்கு ஒரு சொல்.
சொல்:  நபுஞ்சகம்.

நலிபு உச்சு  அகம்.

நலிபு  :>   நபு.  (  இடைக்குறை )  அல்லது நவு(தல்) > நபு  வகர பகர மாற்றீடு.
உச்சு  >  உஞ்சு   ( மெலித்தல் ).   இலக்குக்குச் செல்லுதல்.  வினை: உச்சுதல்.
அகம் :  உள்ளதாதல் குறிப்பு.

நபு உஞ்சு அகம் >  நபுஞ்சகம்.(  பேடித்தன்மை)

இவ்வமைப்பில்  சொற்கள் தலைமாற்று  ஏற்படவில்லை.

நண்பர் >  நபர்.  இடைக்குறை. இந்த இடைக்குறை மூலமாக நட்புக்குறிப்பு
விலகிற்று.

திருத்தம் பின்