ஞாயிறு, 30 டிசம்பர், 2018

வருக புத்தாண்டே

ஆங்கில ஆண்டாம்  இருபதொன் றொன்பது
வீங்கிள வேனிலாய் விருந்து படைத்திடும்
ஓங்கிய மேனிலை உளத்தே  ஒழுகிசை
பாங்குறத் தாவென வாவெனப் பணிவோம்.  1

நல்லன விளைத்தோர்  நலமே தொடர்கென
அல்லன குழைத்தோர்  அறவழி செல்கென
இல்லென உள்ளன அனைத்தும் செழிக்கென
சொல்லுயர் தமிழால் சுவைக்கவி படைப்போம்.  2

இனியது புதியது  வருமிது சிறந்தது
கனியிது  களிப்பினில் தனியிதென்    றொளிர
இனியிதை வருகென அனைவரும் இணைந்து
பனிகுளிர் இன்புற நனிவிழ   வெடுப்போம். 3

 

அரும்பொருள்:


இருபதொன் றொன்பது  :   இருபது ஒன்று ஒன்பது
(2019)

வீங்கு  இளவேனிலாய் =  விரிந்த வசந்த காலமாய்.

விருந்து -   புதுமை.

ஓங்கிய மேனிலை உளம் :  உயர்ந்த மேலான பண்புள்ளம்.

ஒழுகிசை பாங்குறத்  தா = நீரொழுகுதல் போன்ற
இனிய இசையைத் தருக.

2

அல்லன  -  தீயவை
குழைத்தவர் -  கலந்து ஆக்கியோர்

இல்லென -  வீடென்று அல்லது குடும்பமென்று.

சொல்லுயர் -  புகழ் உயர்ந்த.


3

தனியிதென்    றொளிர  -  தனி இது என்று ஒளிர
ஒளிர -  ஒளிவீச

பனி குளிர் இன்பம் =  மிகக் குளிர்ந்த இன்பம்.
பனியானது  குளிர்தல் போல்   (குளிர்ந்த) இன்பம்.
வல்லெழுத்து மிகாமல் புனையப்பெற்றது இவ்வரி.

குளிர் இன்பம்: வினைத்தொகை.

நனி -  நன்றாக

விழவு =  விழா , கொண்டாட்டம்.


புணரியல் திரிபுகள்:

தொடர்கென :  தொடர்க என.
செல்கென -  செல்க என
செழிக்கென -  செழிக்க என
வருகென-   வருக என


பிழைகள் தோன்றின் திருத்தம் பின்.
திருத்திய நாள் 31.12.2018

வெள்ளி, 28 டிசம்பர், 2018

முக்கம் என்ற பேச்சுமொழிச் சொல்

முக்கம் என்றொரு சொல் தமிழில் உண்டு எனினும் பேச்சு வழக்கில் உள்ள முக்கமென்னும் இன்னொரு சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காணப்படவில்லை.

முக்கம் என்பது முற்கம் என்பதன் திரிபாகும்போது:

பல்லி செய்யும் ஒலி
நாவு கொட்டும் ஒலி
ஒவ்வாமைக் குறிப்பு ஒலி

என்று பொருள்படுகிறது.

இச்சொல்லின் இன்னொரு பொருள் பயறு வகைகளைக் குறிக்கிறது, இது திவாகர நிகண்டில் காணப்படுவதும் ஆகும்.


ஆனால் பேச்சு வழக்கில் முக்கம் என்பது  வழியில் உள்ள திருப்புமுனை அல்லது தெருச்சந்திப்பு என்று பொருளாகிறது,   இதை இப்பொருளில் பேச்சில் யாம் கேட்டதுண்டு.  எழுத்தில் இப்பொருளில் இதைச் சந்தித்ததில்லை.

அகரவரிசைக்காரர்கள் விடுபாட்டில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.

கடத்தற்கு அரிய அல்லது கடக்கு  மிடம் கடம் எனப்படும்.   வேங்கடம் என்னும் சொல்லில் இஃது உள்ளது.  வெம்மை மிக்கக் கடப்பிடம் என்னும் பொருளது இதுவாம்.  தாம் கடத்தற்கரிய இடையூறு சங்கடம் ஆகிறது.  இது தம் கடம் > சங்கடம் என்னும் திரிபு.   கடு> கடம்;  கடு>காடு.   இவ்வாறு கடு என்ற உரிச்சொல்லினின்று போந்து கடிய காட்டினையும் குறிக்கும்.  இன்னும் கயிறு, பாலைநிலத்துவழி,  சுடுகாடு, கும்ப இராசி,  யானை மதம் ( கட யானை ),  ஒரு நிறுவை, உடம்பு என்றெல்லாம் பொருள் பல. இன்னும் உள.   கடத்தற்கரியது என்னும் கருத்திலே கடல் என்ற சொல்லுமமைந்தது.

முக்கம் என்பது   சாலைகளில் முக்கடப்புகளைக் குறித்த சொல்.  மூன்று என்று பொருள்தரும் மு என்பது முன் நிற்றலால்.   இது மற்ற முக்கம் என்னும் சொற்களினின்று வேறான சொல் ஆகும்.

முக்கடம் > முக்கம்.  இங்கு டகரம் இடைக்குறைந்தது.

டகரங்கள் குறைந்த சொற்கள் பல நம் பழைய இடுகைகளில் அவ்வப்போது காட்டப்பெற்றுள்ளன.  நினைவுகூர:

பீடுமன் >  பீமன்.  டுகரம் குறைந்தது.   பீடுடைய மன்னன் என்பது பொருள்.
பீடுமன் > பீஷ்மன்.    பீமன் > வீமன் என்பதும் திரிபு.  ப-வ.

பேச்சில் முக்கம் நிலைத்தபின் முக்கடம் மறைந்தது.  இத்தகைய சொல் இறுபுகள் இயல்பே ஆகும்.   இறுபு - ஒழிதல்,

அறிந்து மகிழ்க.

பிழை : திருத்தம் பின்.


பூரா என்ற சொல்.

எங்கும் அல்லது எல்லாம் என்று பொருள்தரும் பேச்சுவழக்குச் சொல்லே பூரா என்பது.

"வீடு பூரா தூசியாய் இருக்கிறதே"  என்ற வாக்கியத்தில் இது எங்கும் என்று பொருள்படுகிறது.

புகுந்து உறுவதே பூரா.   புகுதல் என்பது உட்செல்லுகை.

இது  புகு>  பூ  என்று சொல்லின் முதனிலையில் திரியும்.


இதற்கு ஓர் உதாரணம் தருவோம்.

தொகு ( தொகுதல். தொகுத்தல் )  என்ற வினைச்சொல் தோ என்று சொல்லில் திரியும்.

தொகு >  தொகுப்பு > தோப்பு.  (வாழைத் தோப்பு முதலியவை).

இதுவுமது:

(திகை > திகைதி >) திகதி > தேதி.   " உறுதிபெற்ற நாள்,  குறிக்கப்பெற்ற நாள்"

திகைதல் : உறுதியாதல்.

ஆகவே,   புகு+ உறு + ஆ =  பூறா > பூரா  ஆனது.

சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்.  பல சொற்களில்:  பழைய இடுகைகளைப் படித்துக் கண்டுணர்க.

வெளியாட்கள் புகப்பார்க்கிறார்கள் என்பது பேச்சில் பூரப்பார்க்கிறார்கள் என்று வரும்.

எதுவும் அல்லது யாரும் எங்கு புகுந்தனரோ அதுவே அவர்களின் தொடக்கம். ஆகவே பூர்தல் -  என்பதிலிருந்து பூர்வு> பூர்வம் என்ற சொல் அமைந்தது. பூர்வம் =  தொடக்கம்.  பூர்வு + ஈகு + அம =  பூர்வீகம்:  ஈகு என்பது ஈங்கு என்பதன் இடைக்குறை.  எங்கே முதலில் புகுந்தீர் அல்லது தோன்றினீர் அதுவே உம் பழைய இருப்பிடம். பிறத்தலும் இவ்வுலகில் புகுதலே.

எரியும் நெருப்பிலிருந்து வெளியில் புகுவதே புகை.   புகு+ ஐ  = புகை.  வெளிவரலைப் புகுதல் என்றது ஒப்புமையாக்கம். வெளியி டங்களில் புகுதல் அல்லது பரவுதல்.

பூரம் = புகைவரும் எரியும் பொருள்.

கருப்பூரம் :  கற்பூரம்.   ( எரியும் கல்போலும் பொருளிலிருந்து புகை வரும்.  அதனால் கற்பூரம் ஆனது ).

கருப்பூரம் -  கர்ப்பூரம்
கல் பூரம் -  கற்பூரம்.

இறுதியில் இவை ஒருபொருள் குறித்தன.   

அடிக்குறிப்பு:

புகு ஊர்தல் எனினும் அமைதலின் இதை இருபிறப்பி எனலாம்.

பிழை காணின் திருத்தம் பின்,