வியாழன், 13 டிசம்பர், 2018

வாகன நெரிசலுக்கொரு வண்ணக்கவி

தம்பிமாரே  அக்காமாரே பாருங்கோ  ----- வண்டி
ததிகிணதோம் போடுதிங்கே கேளுங்கோ!
தும்பிகூடப் பறந்தப்பாலே கூறுங்கோ ---- போக
தோதுகிட்டு மோவுங்காலம் நீளுங்கோ!

வாகனத்து  நெரிசலிலே பாதிநாள் --- நீங்கள்
படுக்கைபோட்டுத் தூங்கலாம்ே  போதுமோ?
வேகமாகப் போகலாமென் றெண்ணினீர் ----மாவு
வேகவைத்துப் பக்கொடாக்கள் பண்ணுவீர்.

காலம்நேரம் மூளைகழன்று போகுமே---- எந்தக்
காலமிந்த இடர்கள்நல்ல  தாகுமோ?
நீலவானை நெஞ்சில்வைக்கும் கவியிலே -----கெட்ட
நெரிசல்தன்னை வண்ணிக்கின்றேன் புவியிலே.


இன்று மலேசியாவிற்குப் போக எண்ணினால் வாகன
நெரிசல் வான்முட்டிக் கிடக்கிறது.  இங்கு நீங்களே சொடுக்கிப்
பாருங்கள்

https://www.onemotoring.com.sg/content/onemotoring/home/driving/traffic_information/traffic-cameras/woodlands.html 

விடமும் விரதமும்

சில சொற்களின் அமைப்பை  நாம் மறத்தலாகாது.  அவற்றை ஈண்டு காண்போம்:


விடு என்பதன் அடியாகப் பிறந்ததே விடம் என்ற சொல். இதன்  அயல் திரிபு: விஷம் என்பது.  ட என்ற எழுத்துக்கு அயலில் ஷ என்பது ஈடாக நிற்கும். இதற்கான சொல்லமைப்புப் பொருள்:  நம் அன்றாட உணவில் விடத்தக்கது; அதாவது உண்ணக்கூடாதது.  இனி, பாம்பு முதலியன மனிதனின் உடலுள் விட்டு மரணம் விளைவிப்பது என்றும் பொருளாம்.

விடு > விடம்.  இதில் அம் விகுதி.

இனி விரதம் என்ற சொல்லை ஆராய்வோம்.

 இதுவும் விடு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே.  விரதமாய் இருப்போர் சில உணவுகளை விட்டு ஏற்புடையதை உண்பர்..  மாமிசம் என்பதை விட்டு மரக்கறி யுணவு உண்பது ஒரு விரதமே. சிலர் செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் கோழி மீன் முதலியவை உண்ணார். இது வொரு விரதம் ஆகும்.  எப்போதும் சைவ உணவே உண்பது விரதம் என்று சொல்வதில்லை.  இவர்களைச் சைவ உணவினிகள் என்பர்.

விடு >  விடு + து + அம் =  விடதம். விடு என்பதிலுள்ள உகரம் நீங்கியது, ஓர் அகரம் தோன்றியது.  து என்பதில் உகரம் நீங்கியது,

விடதம் என்பதை விரதம் எனின், டகரம் ரகரமாயிற்று என்பதாம்.

வேறு சொற்களிலும் இவ்வாறு நிகழ்வதுண்டு:

மடி > மரி.
குடம்பை > குரம்பை.
அட >  அர > அரே.-  ஹரே.
சூடு> சூடியன் > சூரியன். சூடு தரும் ஒரு பெரிய உடு.
கொள் > கோடல் (கொள்+தல் ) > (கோரல்) > கோருதல்.  ஒன்றை கொள்ள விழைந்து கேட்பதுதான் கோருதல்.  

கொள்> கோரு  ஒ.நோ:  மாள் > மரி. குறில் நெடில் மாற்றமும் ளகர ரகரத்
திரிபும்,  கோருதல் என்பது கொள்ள விழைதல்.

பிழைத்திருத்தம் பின்,

விடை > விடையம் > விடயம் > விஷயம்.  இதன் அடிச்சொல்லும் விடு
என்பதே. விடுக்கப்பெறும் செய்தியே விஷயம்.

அறிக மகிழ்க.


வினையிலிருந்து இன்னொரு வினைச்சொல் உருவாக்கம்

தமிழ்மொழி தனக்கு வேண்டிய சொற்களைத் தானே படைத்துக்கொண்டது. இதனை சொல்லித் தெரிந்துகொண்டதில்லை.  ஆய்வே ஆசிரியன். இப்போது இதனைச் சில சொற்களைக் கொண்டு நிலைநாட்டுவோம்.  பிறரும் கூறியிருத்தல் கூடும். சொல்லாய்ந்த யாவருடைய நூல்களும் நமக்குக் கிடைக்கவில்லை; சிலவே கிட்டின.  ஆகவே எங்காவது யாம் படிக்காத நூலொன்றில் கூறப்பட்டிருக்கலாம். எமக்கும் படித்தவை சில இப்போது நினைவிலில்லை.

ஒரு பொருள் இன்னொரு பொருளை அடுத்துச் செல்கிறது.

அடு >  அடுத்தல். (வினைச்சொல்).

அடுத்த பொருள் நின்ற பொருளைப் போய் அடைக்கிறது.

அடு >  அடு+ ஐ >  அடை

அடை > அடைத்தல்.   அடைதலுமாம்.

இவ்வாறு வினையினின்று இன்னொரு வினைச்சொல் தோன்றுகிறது.

சில பொருள்கள் தண்ணீரை இழுத்துக்கொள்கின்றன.  துணி காகிதம் முதலியன அத்தகையவை.  ஈர்த்தல் என்பது இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள்படும்.  இழுக்கப்பட்டு உள்ளிருக்கும் நீர்ப்பதம் ஈரம் எனப்படும்.  இது
ஈர்+ அம் என்று பகுதி விகுதிகள் புணர்த்த சொல்லாகும்.

ஈர் ( வினை ) > ஈரித்தல்.  (  நீரால் ஈரம் கொள்ளுதல் ). (  இன்னொரு வினைச்சொல்).

வேண்டின் ஈர்ப்பித்தல் என்றொரு சொல்லையும் உண்டாக்கலாம்.  இது இழுக்கச் செய்தல் என்று பொருள்படும். பிறவினை என்பர்.  ஈர் என்பது தன்வினை.

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப்பிழைகள் திருத்தம் பின்.