வியாழன், 19 ஜூலை, 2018

முன்மைக் கருத்துச் சொற்கள். அடி: மு>மூ

மனிதனுக்கு விளக்கமும் ஒளியும் தருவது அவனது முகமே.  இதனால் முகத்துக்கு வதனம் என்ற பெயரும் புனையப்பட்டது.

முகம் என்ற சொல்லும் ஒரு "சொல்லியல் வரலாறு" உடையதுதான்.

முகம் என்பது தலையின் முன்பகுதியில் அமைந்திருப்பது.

முன்பகுதிக்குரிய அல்லது அது குறிக்கும் அடிச்சொல் தமிழில் 'மு"  ஆகும்.

இந்த அடியிலிருந்து ஒரு சொல் தொடங்குமாயின் அது தமிழ்ச்சொல்லாகவே இருக்கவேண்டியது  கட்டாயம்.  வேறு வழியில் சொல்லப்படுவனவெல்லாம்  பிழைபட்டவை; சொல்லியல் உணராத படித்தவனால் சொல்லப்பட்டிருத்தல் கூடும்.

இப்போது இந்த "மு" என்னும் அடியினுடன் தொடர்புடைய அல்லது அதனின்றும் நீண்டு வளர்ந்த சொற்களைக் காண்போம்,

மு> ,முன் > முன்னுதல்.  ஒரு வினைச்சொல் ஆக்கம் இது.   0ன் என்பதனுடன் ஓர் உகரம் இணைந்தது; சொல் அமைந்தது. தல் விகுதி. உகரம் சாரியை என்`க.

முன் > முன்னர்:  அல் விகுதி ( மிகுதி )

முன் > முன்னம்

முன் > முன்னிடல்

முன் >  முன்னிரை   இது முன்+ நிரை.

முன்னிலை.  முன்னிற்றல்;

முன்னீடு = தலைமை. இன்னும் பல பொருள்

முன் > முன்னுரை.

முன் > முன்னேற்றம்.

முன் >  முன்னை      முன்> முன்னோன்.

மு > முது.  து விகுதி.

முது> மூது  > மூதறிவு.   முதிர்ந்த அறிவு.


மு என்ற அடி நீள்கிறது.

மு >  மூ   ( நெடிலானது).   மூத்தல்.  இது தல் விகுதி பெற்றது.

மூ > மூப்பு.   பு விகுதி.
மூப்பு > மூப்பன்:    மூத்த அதிகாரி.

மூ >  மூல்.   அமைப்பினால், தொடக்கத்தினால், உருவாக்கத்தினால், காலத்தால் , செயல்பாட்டினால், பயன்பாட்டினால்  இன்னும் பல வகைகளில் முன்னிருப்பதை இந்த மூல் என்பது குறிக்கும்.

மூல் + அம் =  மூலம்.
மூல் > மூலி > மூலிகை.     இ, கை என்பன நீட்சிகள்.  இத்தகைய நீட்சிகளைத் தாம் விகுதிகள் என்.கிறோம்.  மிகுதி > விகுதி.  மூல் என்ற அடி மிகுந்து விகுதி ஆகிறது.  மி> வி திரிபு  மிஞ்சு > விஞ்சு  போலி போலவாகும்.  இ  மற்றும் கை என்ற விகுதிகளை சேர்த்து இகை இறுதி எனினும் அதனால் தவறில்லை.

மூ > மூஞ்சி:   முன்னிருப்புக் கருத்துடைய சொல்.   முகம்.

மூ>  மூங்கு:   ஒருவகைப் பருப்பு.  முனைக் குறி உடையது. பிற விதைகளுக்கும் இக்குறிபோல் இருப்பினும் நாற்காலி என்ற சொல்போல் இது
காரண இடுகுறி.

மூ > மூக்கு.

 இன்னொரு நாள் தொடர்வோம்.  மு என்ற அடியிற் பிறந்த சொற்கள் மிகப்பலவாகும். விடுபட்டவை போக பிற கண்டு இன்புறுக.

 

புதன், 18 ஜூலை, 2018

ஆரிய அறிவாளிகளும் அறிவில்லாதவர்களும்

இந்தியாவிற்குள் அவ்வப்போது வெளிநாட்டுக்காரர்கள் வந்து தங்கியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தவைகளாகக் கூறப்படுவனவற்றை ஆராயுங்கால் அப்படி வந்த வெளிநாட்டினர் திரும்பிச் செல்வதற்கு அக்காலத்தில் பெரிய வசதிகள் ஏதும் இல்லை என்பது எவனும் சொல்லிக்கொடுக்காமலே கேட்பவனுக்குப் புரியவேண்டும்.  எடுத்துக்காட்டாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து சுற்றிபார்த்துச் சென்றவர்களைக் குறிப்பிடலாம்.  இத்தகைய யாத்திரைகள் எளியனவாய் இருக்கவில்லை.  இதன்  காரணமாகவும் இங்கிருந்த பெண்டிரை விரும்பியது முதலான நிகழ்வுகளாலும் பலர் தங்கிக் கலந்துள்ளனர். கலவாதார் வாழ்ந்த அதே குடிப்பெயரை மேற்கொண்டு கலந்தாரும் மாறா இயற்கைப் போர்வை கவித்துக்கொண்டு இதுநாள்காறும் இருந்துவந்துள்ளனர் என்பதே உண்மை.

ஆரியர் என்று யாரும் வரவல்லை --  அதாவது இந்தியாவிற்கு மேற்றிசையிலிருந்து ---  என்பது தெளிவு.  வெள்ளிய தோலுடையவர்கள் வந்து கலந்திருக்கக்கூடும். இவர்கள் ஆரியர் அல்லர்.  வந்தவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பிறழ்ச்சி உண்டாக்குதற்பொருட்டுத் தொன்மங்களையும் பிற நூல்களையும் வரைந்திலர். அப்போதிருந்த நிலையில் யார் எங்கு வேண்டுமானாலும் வீடுகட்டிக்கொண்டு வாழலாம்.

ஒரு கூட்டத்தினருக்கும் இன்னொரு கூட்டத்தினருக்கும் இடையில் சண்டைகள் முதலியன ஏற்படுவது இயற்கை.  உணவுப் பொருள்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதாலோ தம் வீட்டுப் பெண்பிள்ளைகளை மணஞ்செய்து கொடுக்க மறுப்பதாலோ சண்டைகள் ஏற்படுவது இயற்கையாகும். இவைபோல்வன  நடவாத மனிதக்குழுக்கள் உலகிலே இல்லை என்பது சிந்தித்தும் செய்திகள் வாயிலாகவும்  யாரும் உணரக்கூடியதே ஆகும்.

வந்து தங்கியவர்கள் தாம் தாக்கப்பட்ட காலை ஆயுதமேந்தி எதிர்த்திருக்கலாம்.   இது தெருச்சண்டைகள் போன்றவையே அன்றி ஒரு போர் என்னுமளவுக்குத் திட்டமிட்ட கட்டுக்கோப்பான படைநடத்துதல் அல்ல.
ஆரியர் என்போர் அறிவாளிகள் என்று அச்சொல்லால் தம்மைக் குறித்துக்கொண்டனர் என்பர். தங்கிய விடத்து நடைபெறும் திட்டமிடாத சண்டைகளில் ஒரு சாரார் தம்மை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மற்றவர்கள் அறிவுகெட்டவர்கள் அல்ல்ர். பெரும்பாலும் அறிவாளிகள் சண்டைக்குப் போகமாட்டார்கள். எழும் இடர்களைத் தம் அறிவின் துணையால் தீர்க்க முனைவோர் அவர்கள்.  மேலும் வெள்ளைக்காரன் ஆராய்ச்சியில், வந்தவர்கள்தாம் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொண்டார்கள் என்பது எப்படித் தெரியும்.   இருந்தவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஒரு வளமிக்க மொழியும் எழுதுவதற்கு எழுத்துமுறைகளும் சுவடிகளும் வைத்திருந்தவர்கள் இருந்தவர்கள் அல்லரோ?  வந்தவர்களுக்கு எழுத்துக்கள் இல்லை என்றும், அவர்கள் அரமாயிக் முதலிய மொழிகளில் எழுதினர் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யார்யார் எந்தெந்த மொழிகள் பேசினர் என்பதற்கும் ஆதாரம் எதுவுமில்லை!

ஆரியர் யார்? வந்தவர்களா? இருந்தவர்களா?  சிரியாவிலிருந்து வந்தவர்களே அசுரர்கள் என்று குறிக்கப்பட்டனர்  என்றும் சிலர் கூறியுள்ளனர். இவையெல்லாம் உட்புகுந்து நோட்டமிட்டால் இனி வீழ்ச்சியடையக்கூடிய வாதங்கள் என்பது  மேலும் சொல்லாமலே புரியக்கூடியதாகும்.


தொடர்ந்து வாசிக்க:=

http://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_27.html

http://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post.html 


தாயித்துக்காரர்களும் செத்த வீட்டுத் தீட்டும்.

மந்திரவாதிகள் மந்திரங்களைச் சொல்லி  அவற்றின் மூலமாகத் தாம் விரும்பியதை அடையமுடியும் என்று சிலர் நம்புகின்றனர்.  ஆனால் பலர் நம்புவதில்லை என்று தெரிகிறது, I am talking about occult science. Not mantras pronounced in religious events . எனினும் அலுவலகங்களுக்குள் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் கலாய்த்துக்கொண்டு  அக்கலகம் யாரோ மந்திரம் செய்துவிட்டதனால்தான் வந்துற்றது என்று சொல்லிக்கொள்வதும் நம் காதுகளில் வீழாமலில்லை.

உண்மையா?  மந்திரங்களுக்கு அவவள வு ஆற்றலுண்டோ என்று சரிந்துவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மந்திரங்களில் ஈடுபடுவதை  " மாந்த்ரீகம்" என்ற  அயற்சொல் குறிக்கின்றது. மலேசியாவிலுள்ள ஒரு பெரிய அரச அதிகாரிகூட மாந்திரீக வேலைகளின் மூலமாக தமக்குச் சாதகமான நிலைகளை அவ்வப்போது அடைந்துவந்தார் என்று தாளிகைகளின் மூலமாக அறிகின்றோம். (இது உடனிகழ்வு காரணமாக இருக்கலாம் . Co-incidence cannot be ruled out. காக்கை உட்காரப் பனம்பழம் விழ  என்பது பழமொழி .)

மந்திரம் செய்துகொண்டவர்கள் தாயித்து முதலியவை அணிந்துகொள்வது வழக்கம்.

சமீபத்தில் ஒரு இறப்புக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.   அங்கு இறந்தவருக்கு மாலை போடுவதற்கு நல்ல பெரிய மாலையும் உதிரிப்பூக்களும் தேவைப்பட்டன.  பூக்கடைகளுடன் தொடர்புடைய ஓர் அம்மையாரை அணுகினோம். எங்கள் தேவைகளைத் தெரிவித்தோம்.  அவரும் நாலு மணி மாலை அங்கு பூக்களுடன் வந்துவிடுவேன்,  காத்திருங்கள் என்று சொல்லி எங்கள் கவலையைத் தவிர்த்தார்.

மணி நாலு  ஆயிற்று. அவரைக் காணோம்.  தொலைபேசிகளைப் பயன்படுத்தியும் அவரை எட்ட முடியவில்லை. அப்புறம் பக்கத்துக் கடைக்குச் சென்று சில சிறிய மாலைகளை வாங்கிக் கொணர்ந்து காரியத்தை முடித்தோம்,

இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் சொன்னார்:  நாங்கள் கேட்டுக்கொண்ட அந்த அம்மையார் தாயித்து அணிந்திருக்கிறார் என்றும் இறந்த வீடுகளுக்கு இதுபோன்ற உதவிகள் செய்யமாட்டார் என்றும் சொன்னார்கள்.  செய்தால் மந்திர ஆற்றல் போய்விடுமாம். அதனால் அவர் வசதியாகக் கம்பி நீட்டிவிட்டார் என்றார்கள்.

இப்படியும் இருக்கிறதா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வியந்தனர்.

இறந்த வீட்டுக்குப்போனால் தாயித்துக்குச் சக்தி இருக்காதாம்,

உலகில் நம்பிக்கைகளுக்கு அளவில்லை.
பிழைத்திருத்தம் பின்.