வெள்ளி, 15 ஜூன், 2018

விலைவசமும் இலவசமும் : மற்றும் தொடர்புடையவை.

இலவசம் என்ற சொல்லை மறுநோக்குச் செய்வோம்.

இது இலாவண்யம் என்ற சொல்லை ஒத்த பாணியில் பின்னாளில் ஆக்கப்பட்ட சொல்லே ஆகும்,

இலாவண்யம் என்பது "ஊரில் இல்லாத  அணியை உடையது" என்று பொருள்படும்.  அணி என்பது அழகு ஆகும்.

இலாவணியம் என்பது இலாவண்யம் என்றும் தன் தலை இழந்து லாவண்யம் என்றும் பெயரானது,  ஈண்டு இறுதியில் வரும்  யா என்ற இறுதி,   ஆயா(ள்) என்பதன் முதற்குறை,  இங்கு ஈற்றில் வந்தது,  அம் விகுதி பெறாது வரின், யா என்று முடிந்து பெண்பெயராகும்.

விலைவசமும் இலவசமும்

இலவசம் என்பது விலையின்றி வசமாவது என்று பொருள்தரும்,  இல -  விலை கடன் முதலியன இலவாக;   வசம் -   ஒருவற்கு வசப்படுவது.  ஆகவே இலவசமாயிற்று.

லாவணியம் என்பது  இகரம் இழந்தமை போல, இலவசமென்பது தன் தலையை இழக்கவில்லை.

இந்தியத் தேர்தல்களின்போது " இலவசம்"  என்ற சொல் பெரிதும் வழங்கியது,
நுழைவு இலவசம், அனுமதி இலவசம் என்பன காண்க.

அனுமதி என்பதில் அனு என்பது அண் என்ற சொல்லிற் பிறந்தது.   அனு எனில் அண்மி நிற்பது.  திரிபுச் சொல்.  அனுபந்தம் என்ற சொல்லில் இதன்பொருள் தெளிவாகிறது.  அணுகிப் பற்றி நிற்கும் பகுதி.    மதி என்பது ஏற்றுக்கொள்ளுதல் குறிக்க ஆளப்படுகின்ற சொல். அண்மி வர ஏற்பதென்பது பொருள்.

அண்மி வருகையில் சரி என்று ஏற்பது அனு + சரி + அணை.  சரி என்பதில் இகரம் கெட்டது.  அனுசரணை.

எழுத்தறிஞனைக் கொன்ற எதிரிகள்.

சரிதானே    என்றாலும் இல்லைதான்  என்றாலும் என்னவம்மா
நரியாக   இல்லாமல் நல்ல  தெழுதிய ஆய்வெழுத்தன்
குறியாக வைத்திட்டுக் கொல்லுவ தென்பதிங்  கென்னஞாயம்?
மறியினைக் கொன்றுணும் மாந்தரின் கீழ்ப்பட்ட திச்செயலே.

ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் அவனுடைய சொந்தக் கருத்துகள் இருக்கும்.  அதாவது அதை எழுதும்போது அது அவனுக்குச் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் பிறருக்கு அது சரியில்லை என்று தோன்றலாம். சரியென்றும் தோன்றக்கூடும். அது சரியில்லை என்றால் அவன் ஆய்வு நல்லதா அல்லது ஏதும் தந்திரம் செய்கிறானா, உள்ளத்தில் பட்டதை உண்மையாகச் சொல்கிறானா என்று பார்க்கவேண்டும்,  அதற்காக அவனைக் கொல்வதென்பது அன்முறை ஆகும்.  அது ஓர் ஆட்டை கொன்று உண்ணும் செயலினும் கீழ்ப்பட்டதே ஆகு.,  அதில் இரக்கம் இன்மையினால். பிடிக்கவில்லையானால் ஆடு ஏதோ கத்துகிறது என்று நீங்கள் போய்க்கொண்டிருப்பதே நன்னெறியாகும். அவன்மேல் குறிவைத்து அவனைக் கொல்லலாகாது.

இது ஓரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றிய பாடல்.

நரியாக -  தந்திரமாக.
ஆய்வெழுத்தன் -  எழுத்தாளன்.
குறியாக -  குறிவைத்து.
மறியினை -  ஆட்டினை.
கொல்வோன் வருகையில் தன்னைக் காத்துக்கொள்ளத் திறனற்றது ஆடு.








புதன், 13 ஜூன், 2018

மாடி - தமிழ்ச்சொல்.

மாடி என்ற சொல் வழக்கில் உள்ளதாகும். மாடி என்பது வீட்டின் இரண்டாம் அடுக்குக்கும் அதற்குமேலும் உள்ள அடுக்குகளையும் குறிப்பதாகும்.

வீடுகட்டும் பாட்டாளி
வீதியிலே தூங்குகிறான்
கூடியந்த மாடியிலே
கும்மாளம் போடுகின்றார்

என்றொரு திரைக்கவிஞர் எழுதினார். திரைக்கவி யானாலும் நல்ல எதுகை மோனைகளுடன் எழுதி மகிழ்த்துவதில் நம் தமிழ்க்கவிகள் பண்பட்டவர்கள் ஆவர். தாம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதிகள் செய்துதருவது கட்டுமானக் குத்தகையாளர்களின் சட்டப்படியான கடமை என்று சிங்கையில் சட்டமிருப்பதாகத் தெரிகிறது.  வீதியிலே தூங்குவோரை இங்குக்  காண்பதரிது.

அடுக்குமாடி என்பது பல அடிக்குகள் உள்ள கட்டடங்களுக்கு வழங்கும் சொல்.

புடவையில் விளிம்பு மடிக்கப்படுவதால் அதையும் மாடி என்று சொல்லும் வழக்கு உள்ளது.  சிற்றூரார் தெய்வத்துக்கும்  மாடன் என்ற பெயருண்டாதலால் அதன் பெண்பால் மாடி எனவரும். மாடத்தி எனினுமாம். பலரைப் பலிகொண்ட காவல்தெய்வம் மாடன்.  இவன்பெயர் மடி என்ற சொல்லடியாக அமைகிறது. மடி+அன் = மாடன் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்ற ஆண்பாற்பெயர். பின்னர் இவனுக்கு மாடு ஒரு வாகனமாய் ஆக்கப்பட்டதென்று தெரிகிறது.  பிணம் தின்னும் மாடன் ஆதலின் இவன் சுடலைமாடன் என்பர்.

"மாடனை வேடனைக் காடனைப் போற்றி
மயங்கும் அறிவிலிகாள் ....." 

என் கின்றார் பாரதி.  இவன் மனிதக்குருதி கேட்பானாம்.

மாடி என்பது இடர், இக்கட்டு, சினம் என்றும் பொருள்படும்.

மாடி - மடத்தின் தலைமையையும் குறிக்கும்.

மாடி  கூரையில்லாத கட்டிடத்தில் மேலடுக்கையும் குறிக்கும்.

மடி என்பது வினையடிச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்டு  மாடி ஆகும்.
(தொழிற்பெயர்.)

மாடி+அம் =  மாடம்.    (  எழுநிலை மாடம்,  வழக்கு நோக்குக).

கட்டிடத்தின் ஒரு நிலை அல்லது அடுக்கு    அதன் தரை ஈறு மேலே எழுந்து,  மடிந்து திரும்பி எதிர்ச்சுவருடன் இணைந்து நிற்பது  போல் இருப்பதால்  அது மாடி எனப்பட்டது. மடி -  மாடி.  ஒவ்வொரு நிலையும் ஒரு மடிப்பாகிறது.  பன்னிலை மாடமென்பது பன்னிலை மடி ஆகும். புடவை மடிப்பும் மாடியே.

மடி என்பது திரும்புதல். இடர் என்பது மாறிமாறிவருவது.  ஒருமுறை வந்து பின் மாறி மறுமுறை வருகையில் அது மாடி ஆகிறது,  இப்படி அது இடர், இடுக்கண் என்ற பொருளை அடைகிறது,