ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சிவஞான போதத்தின் 8ம் சூத்திரm

இப்போது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தையும்   சூத்திரத்தின் பொருளையும்  நோக்குவோம். பின்னர்  சற்று விரிவாக உணர்ந்து கொள்வோம்.

நூற்பா இது:

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

ஐம்புல வேடரின்  -   மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்  ஐந்து புலன்களாகிய வேட்டையாடுநரின் ;

அயர்ந்தனை வளர்ந்து என    -    ஒருங்கு இணைந்த  தொடர் இயக்கத்தினால்   சொந்த வடிவத்தையும் அதன்கண் உள்ள ஆன்மாவினையும் உணராமல் மயங்கி,      என்றபடியாக ;

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த   -   தமது முன் நிற்கும் ஆசிரியனாய்த்  தவநிலையில் நின்று தனக்குச்  சிறப்பு  அறிவு புகட்டவே;


 விட்டு  -  அவ் அறியாமையைக் களைந்து;

அன்னியம் இன்மையின்  ---சிவம் தன்னின் வேறானது அன்றென்னும்  ஞானம்  அடைந்ததனால் ;

அரன்கழல் செலுமே.   -     சிவத்துடன் ஒன்றுபடுவதாகும். ( சிவத்தின் திருவடிகளிற்  புகும் இறுதியுறுதி அடையும்  )

சிவத்துட் செல்லும் என்பது கவி நயத்துடன்  அரன்கழல் செலுமே எனப்பட்டது.

அன்னியம் என்பது முன் இவ் வலைப்பூவில் விளக்கப்பட்டுள்ளது.  அங்குக் காண்க,  மற்றும்  https://bishyamala.wordpress.com/2016/04/04/376/  என்ற வலைப்பூவிலும்  காணலாம்.


சனி, 2 ஏப்ரல், 2016

மது: சொல்லின் தோற்றம்

தமிழர்கள் பண்டு நன்கறிந்த முன்மைக் குடிவகை கள் ஆகும்.

சங்கப் பாடல்களில் கள் பலவிடங்களில் குறிக்கப்பெறுகிறது.

கள் உண்ணாமை வள்ளுவனால் பரிந்துரைக்கப் படுகிறது. களித்தல் என்பது இன்று மகிழ்தல் என்னும் பொதுப்பொருளில் வழங்கினும் பண்டையருக்கு அது கள்ளுண்டு மகிழ்தல் என்ற சிறப்புப் பொருளில் நின்று தெம்பு தந்தது.  கள்> களி > களித்தல்.  கள் என்ற சொல்லுடன் ஓர் இகரம் இணைந்து வினைச்சொல் ஆகிற்று. இப்படி இகர இறுதிபெற்று வினையாக்கம் அடைந்த இன்னொரு சொல் உதித்தல்.
உது > உதி > உதித்தல்.  அது,இது உது என்பவற்றில் உது :  முன்னிருப்பது. உதித்தல்  :  முன் தோன்றுதல். உது + ஐ + அம் =உதையம் ‍>  உதயம் (  ஐ >  அ:  ஐகாரக் குறுக்கம் ).

பண்டைத் தமிழர் அறிந்த வேறு குடிவகைகள் யாவை? இது ஆய்வுக்குரியது ஆகும்.  ஆனால் கள் உள்ளிட்ட ஏனைக் குடிவகைகளையும் சுட்டும் ஒரு பொதுச்சொல் தேவைப்பட்டது.
அதற்காக மது என்னும் சொல் படைக்கப்பட்டது.

இது பேச்சு வழக்கில் தோன்றியது.  மயக்குவது என்னும் சொல்லில்
இடையில் நின்ற எழுத்துக்களை  எறிந்துவிட்டு  ம து என்று அதைக்
குறித்தனர். இது பின் சங்கதத்திலும் தமிழிலும் வழக்குப் பெற்றது.

மது என்பதில் மத் என்பதைப் பகுதியாகவும் உ என்பதை இறுதி நிலையாகவும் கண்டு இதை எளிதில் மறைத்துவிடலாம். இதில் ஏதும் தொல்லைகள் இல்லை.

இது  1.1.14ல் இங்கு வெளியிடப்பட்டது.  ஆனால் இந்த ஆய்வைப் பிடிக்காதவர்களால்  அழிக்கப்பட்டது. வேண்டுமானால் இதை உங்கள் கணிணியில் பதிவு செய்து வைத்துக்கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை..  இதை மீண்டும் எழுதியுள்ளேன்.
Opponents do mischief by attaching add-ons to our browsers.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

தபால்.

பிற்காலத்தில் புதிய சொற்கள் பல தமிழில் பயன்பாடு கண்டன.அவற்றுள் தபால், தந்தி என்பன நன்கு ஆட்சி பெற்றவை. நல்ல தமிழ் எழுதவேண்டுமென்பார் இவற்றை  விரும்பாமைக்குக் காரணம் இவை தெற்கணி (தெக்கணி, தக்கணி, தக்காணி) மொழிச்சொற்கள் என்று எண்ணியதே காரணம். அதற்கியையத்  தமிழில்போல  தக்கணியிலும் இவை வழங்கின.

ஒரு கடிதத்தையோ அல்லது எழுதப்பட்ட காகிதத்தையோ அன்றிப் பொருளையோ தன் பால் கொண்டு சேர்ப்பதைத்  த‍ன்‍+பால் >   தன்பால்>  தபால்  என்று குறித்தனர்.  பால் என்பது பக்கம் என்றும் பொருள்தரும் சொல்லாகும் ,  பெரும்பாலும் இலக்கிய வழக்குடைய சொல்லாதலின்,  இதைப் புனைந்து புழக்கத்தில் விட்டவர் தமிழ் அறிந்த வாத்தியாராகவோ வேறு தொழிலுடையாராகவோ  இருந்திருப்பார். இத்துணைக்காலமும் இத்துணைபேரையும் மருட்டிய இச்சொல்லைப் புனைந்தவரை நாம்
அறிந்திருந்தால் அவருக்குப் பரிசு வழங்கியிருக்கலாம்.

இடைவந்த  னகர ஒற்றைக் களைந்து சொல் அமைத்தது ஒரு வழியாகும். இன்னோர் எடுத்துக்காட்டு:

நண்பர்  ( நட்புடையவர் )  > நபர்.  ( நட்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் )  ‍சிறிய பொருள் மாற்றம்.

தன்பால் >  தபால்.  மேற்படி சொல்லமைப்புமுறை பயன்பட்டது.

ஓர் எழுத்தை எடுத்துவிட்டாலே கண்டுபிடிப்பது கட்டமாகிவிடுகிறது.

தந்தி பிறகு காண்போம்.