வெள்ளி, 18 ஜூலை, 2014

ஆதாயம்.



தாயம் என்ற சொல்லுக்கு பன்னிரண்டுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இப்போது ஆதாயம் என்ற சொல்லைக் கவனிப்போம்

இதைப் பிரித்தால், ஆ+தாயம் என்று வரும்.

ஆ = ஆகும் வழி.  ஆதல். நடைபெறுதல். ஆவதென்பது வரவு, போவதென்பது செலவு என்பதும் கொள்க.

தாயம்  ‍ :  தா + அம் ,இவற்றில்  தா :  தருதல். அம் : விகுதி.

பொருள் இலாப மாகின்ற வழி, அதாவது  இலாபம்.  பொருள் ஆக்கம், தன வரவு.

யகரம் ‍ உடம்படு மெய் எனப்படும். சொற்புணர்ச்சிக்கு உதவுவது.

அழகாக அமைந்த  சொல்.




காதல் வேறு, மரியாதை வேறு.

அள்ளூர் நல்முல்லையாரின் இனிய எளிய தமிழால் யாக்கப் பெற்ற சில வரிகளைக் குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து பாடி மகிழ்வோம்.
அப்பாடல் இது:

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்;   அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவி அஃது எவனோ அன்பு இலங் கடையே.   63

நன்னலம் தொலைய ‍‍‍=  நமது நாணம் கெடும்படியாக,  நலம் மிகச் சாஅய் = நமது  (இங்கு தலைவியின் ) அழகும் கவர்ச்சியும் பெரிதும் கெட்டுப்பபோய்; இன்னுயிர் கழியினும் =  இனிய உயிர்  பிரிந்தாலும்;  உரையல் = சொல்லாதே;
அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி =   காதலர் நமக்கு  தாயும் தந்தையும் போன்றவர் என்பதை ஒத்துக்கொள்வோம்  தோழியே; அதற்காக, புலவி அஃது  =  நான் அவருடன் ஊடியிருக்கின்றேன் என்பது;
 எவனோ = எதற்காகப்  பேசவேண்டும்;  அன்பு இலங்  கடையே ‍= அன்பு இல்லாதவரிடத்திலே.

அதாவது:  அவர் நமக்கு (குடும்பத்துக்கு)  அன்னையும் அப்பனும்போல் பக்கத் துணையாய் இருக்கிறார். என்றாலும், என்னை நீங்கி வேறு பெண்ணை நாடிவிட்டார். அன்பு இல்லாமல் போய் விட்டது; அவரால் என் அழகும் உடல் நலமும் ஒழிந்தது. இப்போது வெட்கம் கெட்டதனமாக, நீ ஏன் நான் கோபித்துக்கொண்டிருக்கிறேன்  என்று போய்ச் சொல்லவேண்டும். அன்பு போனபின், கோபம் ஒரு பொருட்டா? பயனில்லை; தோழி, அவரிடம்
அப்படிப் பேசுதல் தவிர்ப்பாய்.

இதுதான் இப்பாடலில் தோழிக்குத் தலைவி சொல்வது.

அந்த வேறொரு பெண் பரத்தை போலும்.

அன்னையும் அப்பனும் போன்றவர் என்றால், அதற்குள்ள பணிவன்புடன் நடந்துகொள்வோம். வழிபடுவோம்!  அன்பு இல்லாதவர், அவரிடம் தணிவு செய்துகொண்டு பழைய காதலுறவைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.  காதல் வேறு,  மரியாதை வேறு. என்கிறாள் தலைவி.

அருமையான கருத்து.

குறளும் இதையே கூறும்.

காதல் ஒழியினும் ஓர்  ஆடவனுக்குப் பெண் காட்டும் பணிவு தொடரும்.  தலைவி  அறிவுடையவள்.

வியாழன், 17 ஜூலை, 2014

பல்லியின் முன்மை pre-eminence

பல்லியின்  முன்மை   பாரத மக்கள் பின்பற்றும் பல்லி  சொல்பலன்,  பல்லி விழுபலன் முதலியவற்றால் நன்கு புலப்படுகின்றது.

ஐயப்பாடு உடையவர்களுக்கு,  இதை எப்படிக் கண்டறிந்தனர் என்பதே பெரிய  கேள்விக் குறியாய் உள்ளது.  இவர்களுக்கே இது கவலையாய் உள்ளதே யன்றி,  அதைப் பார்ப்பவர்களுக்கு  அன்று எனலாம் .

தலையில் விழுந்தால் கலகம்
குடுமி -  உடல் நலம்;
முகம் -  உறவினர் காணல்
நெற்றி -  இலக்குமிகரம்;
வலக்கண்  --  இனிது முடிதல்
இடக்கண் - கட்டுபடுதல்
மூக்கு - நோய்
வாய் - பயம்
கீழ் உதடு  - பொருள் வரவு
மேவாய் -  அரசு தண்டனை;
வலக்காது - தீர்க்க ஆயுள்
இடக்காது - வியாபாரம்
கழுத்து -  பகைவர்  அழிவு
வலத் தோள் -  வெற்றி
வலது  மணிக்கட்டு - பீடை


இடது மணிக்கட்டு - கீர்த்தி,
வலக்கை பெருமரணம்,
இடக்கை - மரணம்
வலக்கை விரல்  அரசு தரும்  கொடை/பரிசு
இடக்கை விரல்  - நட்புறவில் கவலை
மார்பு -  தன வரவு
நெஞ்சு -  நன்மை
முதுகு - திரவிய அழிவு
தொடைகள் -  பெற்றொர் விருப்பம் நடத்தல்
கணுக்கால் -  சுற்றுலா
வலப்பாதம் -  நோய்
இடபாதம் - துக்கம்
தேகத்தில் ஓடல் =  நிறை ஆயுள்.

;இவையெல்லாம் பட்டறிவினாலோ  பல நேர்காணல்கள் மூலமாகவோ, அரசர்கள்  காலத்தில் திரட்டப்படிருக்கவேண்டும் . இவற்றை வைத்து  நிமித்திகர்கள்  தெரிவிப்புகள் செய்திருக்கவேண்டும்.  கல் வெட்டுகளிலும் தேடிப்பார்க்க வேண்டும்.  சிலர் கணியக் கலையில் (astrology)  முனைவர்ப் பட்டம் பெற்றிருப்பதால் அவர்களிடம்  எதிர்பார்க்கலாம். அல்லது இதன் வரலாறு அறிந்து முனைவர்ப்  பட்டம் பெற   மணவர்கள் முனையலாம்.