வியாழன், 8 மே, 2014

வாக்களித்து..............

தேர்தலிலே நின்றுமக்கள் திறமுடையோன் 
என்றெண்ணி வாக்களித்து 
பார்புகழ நாடாளு மன்றுள் நீர்   
பாய்ந்துவிடின் அதற்கீடேது?
யார்புகழ்வார் என்றுபிறர் வாய்நோக்கி 
நின்றநிலை யாண்டும் மாறி  
நேர் புகழும்  ஒரு கூட்டம் உம்மருகில் 
நிற்குமதன் பயன்உகப்பீர் . 


வெற்றி யெனின்  கேட்டதனை மகிழ வேண்டாம் 
வேலைஇவை தாமெனநீர் விரித்த வற்றை
உற்றவொரு பாதையிலே உகந்து செல்வீர்  
உற்றதுவோர்   தோல்வியெனின் துவளல் வேண்டாம் 
சொற்றிறம்பா நன்னெறியில்  சுருண்டி டாமல் 
சூழ்வினையை ஆள்வினையால்  சுமந்து சென்றால்
வற்றிவிடா வளம் சார்ந்த உலகம் சொந்த 
வள மனைக்குள் வந்து தொழில் புரிதல் காண்பீர்.  


குறிப்புகள் 

மன்றுள்  --- மன்றத்துக்குள் ;       நீர் =  நீ என்பதன் பன்மை;
பாய்ந்து -  புகுந்து;   உகப்பீர் =  தேர்ந்தெடுத்துக் கொள்வீர்.
சொற்றிறம்பா -  சொன்ன சொல்  மாறாத .
சூழ் வினை -  சுற்றியுள்ள வேலைகளை அல்லது ஆய்ந்து  மேற்கொண்டவற்றை ; ஆள்வினை -  செயல் திறன் .




புதன், 7 மே, 2014

சுகந்தம்

எப்படித் தோன்றியது சுகந்தம் என்னும் இந்தச்சொல்?  இதை இப்போது ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலில் வந்த சொல் சகர வருக்க எழுத்து முதலாகத் திரிபு அடைந்து சொல்லாகும் என்பதை பல இடுகைகளில் (ad nauseam) சொல்லி இருக்கின்றோம்.  அதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

இருத்திக்கொண்டு அந்த இருதி ( ரீதி) யிலேயே இதையும் நோக்குக.

உகந்த >  சுகந்த >  சுகந்தம்.

மிகவும் இனிய நிலை, சுற்றுச்சார்பு,  நுகர்வு.

சுகந்தம் என்ன அரிய சொற் படைப்பு தெரியுமா

உடலுக்கு உகந்த நிலை - சுகம்

சுகம் என்பது உடலுக்கு ஏற்றதொரு நிலையைக் குறிக்கும் .சொல் .  நல்ல தமிழில் இதை "நலம் " என்கிறோம். ஆங்கிலத்தில் உள்ள health என்பது,  heal  புண் ஆறுதல் என்பதிலிருந்து  தோன்றிய சொல் அன்றோ?   ஆறாத புண் தேறாத உடலைக் குறிப்பது.  அதாவது நலமின்மை.

சுகம் என்ற சொல் எப்படித் தோன்றியது?   உகந்த என்பதில் உள்ள "உக " என்பதன்  திரிபே சுகம் என்பது

உயிரெழுத்தில் தொடங்கிய சொற்கள் அவற்றுக்கேற்ற  சகர வருக்க எழுத்துக்களில் ஒன்றில் தொடங்கும் திரிபுகளை முன்பு   நாம் கவனித்துள்ளோம்.  அந்த அறிவினை இப்போது நாம் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.  நினைவு கூரவேண்டும். அல்லது அந்த இடுகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.

உக > உகத்தல்
உக > உகம் > சுகம்.
உக + அம் =  உ (க் +அ)  +  அம் =   உக் + அம் =   உ (க் +அ ) ம் =   உகம்.
இதை நிலைமொழி ஈற்று அகரம்  கெட்டது என்பர் இலக்கணியர். 

எனவே சுகம் என்பது உகந்த உடல் நிலை என்று பொருள் படும்.

உகத்தல் - விரும்புதல் , தேர்ந்து எடுத்தல் என்றும் பொருள்

"காக்கை உகக்கும் பிணம்" என்ற வரி நினைவில் உள்ளதா?

சுகம் > சுகா  : இது மலாய் மொழியில் .விரும்புதலையே குறித்தது.. தமிழில் உடல் நலம் குறித்தாலும், உகத்தல் என்ற சொல்லின் நேரடிப் பொருளில் மலாய் சுகா உள்ளது என்பதைக் கவனித்தல் வேண்டும். So the Malay word is closer in meaning to the original word  'uka".

sukAmamfn. Sanskrit:    having good desires