வேதம் என்ற சொல் தமிழில் வழக்குப் பெற்ற சொல்.
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
திருஞானசம்பந்தர்.
வேதம் நிறைந்த தமிழ்நாடு---- நல்ல
வீரம் செறிந்த தமிழ்நாடு.
பாரதியார்.
இவை நீங்கள் அறிந்த சொல்லாட்சிகள். இவை போல்வன வழக்கு என்ப்படும். வழக்கு என்றால் இயல்பான சொற்பயன்பாடுகள். தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்து, மூன்று வேதங்களே இருந்தன என்றும் நாலாவது இன்னும் இயற்றப்படவில்லை என்றும் கூறுவதுண்டு (நச்சினார்க்கினியர்) . நாலை முன்வைத்து நூல்கள் எதையும் எண்ணுதல் முற்காலத்து முறை. எடுத்துக்காட்டு: அகநானூறு, புறநானூறு, களவழிநாற்பது, நாலடியார்.
வேதம்: இதற்குத் தனித்தமிழில் சரியான சொல் எது என்றால், மறை என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும். "நான்மறை" ( நால் + மறை, இங்கு நிலைமொழி இறுதியில் -- ஈற்றில் ஒற்று வர, வருமொழி மகரம் இயல்பாய் நிற்க, லகர ஒற்று னகர ஒற்றாக மாறும் என்பது இலக்கணம்.) மகரம் வர 0னகர மாகும் என்பது மட்டுமன்று, ககரம் (க) வந்தாலும் லகர ஒற்று ( ஒற்று என்றால் மெய் எழுத்து ) 0னகர ஒற்றாகவே மாறும். இதற்கு எடுத்துக்காட்டு, நால்+ கு = நான்கு என்பது காண்க. எழுத்துமொழியில் வழங்கும் நான்கு , பேச்சுமொழியில் நாலு என்று வழங்குகிறது.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டினருள் தமிழறிந்தோர், "நாலு" என்பது கொச்சை என்றனர். கொச்சை என்றால் திருந்தாத பேச்சு, இழிசொல் என்று பொருள் கூறுவர். நாலு என்பது திருந்த வேண்டியது என்றோ, இழிவு உடையது என்றோ யாம் நினைக்கவில்லை. சொல்லின் ஆய்வுக்கு இத்தகைய கருதுகோள் உதவுவதில்லை. ஆய்வாளன் என்பவன், எல்லா வடிவங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். நாலு நான்கு என்பவற்றில் எது முதலாவது என்றும் முடிவு செய்யவேண்டும். நாலு என்பது எப்போது நடப்பில் வந்தது என்பதை அறியவேண்டும். நான்கு என்பது எப்போது வந்தது என்று அறியவேண்டும். அறிந்து முடிவு செய்யவேண்டும், ஆனால் அறிந்தவை அனைத்தும் வெளியில் சொல்லவேண்டும் என்று எதுவும் கட்டாயம் இல்லை, தேவை என்று கருதுவதை மட்டும் வெளியில் கொணர்ந்தால் போதுமானதாகும். திருந்திய வடிவம் என்பது பின் வருவது, திருந்தாத வடிவம் என்பது முன் இருப்பது. இன்னும் சொல்லப்போனால், ஒன்றைத் திருந்தாத வடிவம் என்பதே சரியான குறிப்பு அன்று. எது திருந்தியது எது திருந்தாதது என்பது ஒருவனின் சொந்தக் கருத்து மட்டுமே. இவற்றைப் பேச்சுமொழிச் சொல், எழுத்துமொழிச் சொல் என்பது இன்னும் சரியான வருணனை ஆகும். நான்கு என்ற சொல் அமைந்த காலை, முன்னிருந்தது நாலு என்ற வடிவம்தான். அது மக்கள் வடிவம் ஆகும். அதைத்தான் தொல்காப்பியம் வழக்கு என்று சொல்லும். அப்புறம் செய்யுள் என்பதில் எந்த வடிவம் உள்ளது என்று கண்டுகொண்டால், நான்கு என்பது இருந்திருக்கலாம். "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது பழமொழி. நாலு என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதும் முந்துவடிவமும் ஆகும். அடிச்சொல், இறுதி உகரம் நீக்க, நால் என்பதே. மன்னராட்சி நீண்டகாலம் நடைபெற்றமையால், நாலு என்பது போலும் வடிவங்களை அப்போதிருந்த அரசவைக் கல்வியோர், ஏற்புடையனவல்ல என்று கருதியிருந்தனராய் முடிபுறுத்தல் உண்மைக்கு உடன்பாடு ஆகும். பலவும் அறிந்தவர் என்பதற்கு " அவர் நாலும் அறிந்தவர்" என்ற ஊரார் வாக்கியத்தில், நாலும் என்பது இப்பொருளதே. நாலுமென்பது நாலடியாரைக் குறிக்குமென்பது இரண்டாவது பொருட்காணல் ஆகலாம். இலக்கியங்களை அறியாதார் பேச்சில் இஃது பொருளாகமாட்டாமை உணர்க. பேசுவோர் என்ன சொல்கிறார் என்பதும் அறியவேண்டும்.
ஒரு சொல்லின் பொருளை அறிய முற்படுங்காலை, எந்த மொழியில் வினைச்சொல் உளதோ, அந்தச் சொல் அம்மொழிக்கு உரியது என்று முடிவுசெயல் வேண்டுமென்பது மேலைநாட்டு ஆய்வாளர் கருத்தாகும்.இக்கருத்து ஏற்புடையது. பெரும்பால் சொற்கள் வினையில் தோன்றினவாயிருக்க, இது சிறப்பான முடிவாம். இதற்கு, வினை எது, எங்கு உள்ளது என்பதை அறியவேண்டும். வேதம் என்பது ஓர் அறிவுநூல், அறியார்க்கு அறியத்தக்கதை கொணர்ந்துதரும் நூல். அதைப் பாடியவர்களில் பலரும் உள்ளனர். பாடலின்பொருளை அறிந்தபின் இதைப் பாடியோன் வாயிற்பாடகனாய் இருத்தல் கூடும் என்று கூறுதலும் இன்ன பிற கூறுதலும் கூடும். ஒரு முனிவனாய் இருந்திருப்பான் என்று கூறுதலும் கூடும். இவற்றுள் பாடியவர் பிராமணரா, அல்லரா என்று குறிப்பு எதுவும் அறியப்படவில்லை. இப்போது நிலவும் எந்தச் சாதியும் அதில் குறிக்கப்படவில்லை, எடுத்துக்காட்டு : இருக்கு ( ரிக்) வேதம். வேதங்களைப் பிராமணர் உண்டாக்கினர் என்பதற்கு அதிலேதும் இசைந்த செய்தி இல்லை.
வேதம் வித் என்ற சொல்லினின்று வந்தது என்பர். வித்துதல் என்ற வினைச்சொல் தமிழ் ஆகும். இதன் வெட்டுண்ட வடிவமே வித் (வித்து). விதைத்தல் எனின், இந்நூல் மேற்கொண்ட முயற்சி அதுவே ஆகும். அறிவை விதைத்தல். ஆனால் மறைமலைஅடிகளார், வேய்தல் என்ற சொல்லினின்று சொல் ஏற்பட்டது என்றார். வேய்+ து + அம், இதில் ய கர ஒற்று மறைய, வே து அம் எனவாகி, வேதமானது என்றார். இதுவும் ஏற்புடைமை கொண்டதே ஆகும். இஃது ஓர் இருபிறப்பிச் சொல் என்று முடிவு செய்யலாம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடி உள்ள சொற்கள் பல. Bards என்று குறிக்கப்பட்ட சில வேதபாடகர்கள் உண்மையில் பாணர்களே. பாணர்கள் இந்தியாவில் பல இடங்களிலும் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உளவென்று ஆய்வறிஞர் சிலர் கூறியுள்ளனர். இவர்கள் அரசர் தந்த பட்டங்கள் பெற்றுப் பல வேறு சாதிப்பெயரினராய் மாறிவிட்டனர். போர்களின் இயல்பான விளைவுகளில் இத்தகு குமுக மாற்றங்களும் அடங்கும். எதிரிப் படைஞர்களால் சிறுமைப்பட்ட பெண்கள் பெற்ற குழந்தைகள் வேறு குலப்பெயர்கள் தழுவுதல் உலக வரலாற்றில் இயல்பு ஆகும். புலம்பெயர்வும் இயல்பே ஆகும். இற்றைச் சாதிப்பெயர்கள் பல வேதங்களில் இல்லை.
வைசியர் என்ற சொல், வாய்+ இச்சி + அர் > வாயிசியர் > வைசியர் என்றும் அமைக்கப்படுதற் குரியது. இச்சி இசி ஆனது தொகுத்தல் அல்லது இடைக்குறை. வைசியர் எனின் வயிற்றுணவு விரும்பி விளைச்சல் பொருட்களை வாங்கி வணிகம் செய்தோர் என்பதாம். போதிய பூவைசியத்தின் பின்புதான் தனவைசியம் தோன்றக்கூடும். தாமும் உண்டு மற்றோருக்கும் உணவு வியனீகம் செய்தோர். ( வியன் - விரிவு. ஈகு - தருதல். அம் விகுதி). வியனுலகு , குறள்: விரிந்த உலகு ). distribution.
வாய் என்பது இடம் என்று பொருள்தரும் ஆதலின், இடங்களைக் கையகப் படுத்துதல் வணிகத்துக்கு இன்றியமையாதது ஆகும். இது மேலும் பொருத்தமாகும். வைசியர் நிலமுடையோர்.
வயிறு என்ற சொல் வாயின் இறுதியில் இருப்பது என்ற சொற்பொருள் உடையது. வாய்- உணவுகொள்வழி, இறு - இறுதி என அறிக. வாய் என்ற நெடின்முதல், வயி என்றானது கண்டுதெளிக. இதுவேபோல் வாயிசியர் என்பது வைசியர் எனவாகும்.
மக்களிடைப் பிரிவுகள் அமைத்தோர் அரசர்கள். இதன் நோக்கம், ஆள்தொழில் எளிதாக்கம் ஆகும்.
இவ்வாறு வேதம், வைசியம் ஆய சொற்களின் பிற பரிமாணங்கள் அறிக.
குறிப்புகள்
மேலும் அறிய:
1. இடைநின்ற யகர ஒற்று மறைதல்:
https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_4.html
2 வேதவியாசன்
https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_7.html
3 வேதம், வேவு
https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக