விஞ்சையர் என்பது பதினெட்டுக் கணங்களுள் அடங்குவோரைக் குறிப்பது என்பது நாம் மாணவர்களாய் இருக்கையில் அறிந்துகொண்டதாகும். மனிதர்களாய் வாழ்ந்தவர்களிற் சிலர் வாழ்வாங்கு வாழ்ந்து, பல்புகழும் பெற்று, மக்களால் இன்னும் எண்ணிப் போற்றப்படுபவர்களாய் உள்ளனர், அவர்கள் வாய்மொழி வரலாறுகளில் அறியப்பட்டாலும் நூல்களால் அறியப்பட்டாலும் கணங்களேயாவர். சிறப்பான வேளைகளில் அவர்கள் வீணை இசைபோலும் மீட்ட, பற்றன் கேட்டு இன்புறுகிறான். கனவிலோ அல்லது விழித்துக்கொண்டிருக்கும் போதோ இவ்விசை கேட்கிறது. இது எப்படி என்று ஆராய்வது வீண்வேலை. இத்தகையவை மனவுணர்ச்சியின் பால் எழுவன ஆகும்.
கணம் ( பன்மை: கணங்கள்) என்ற சொல் கண் என்பதிலிருந்து வருகிறது. உணர்ச்சி இல்லாதவனுக்குத் தெரியாதது, உணர்ச்சி அணைகடந்து நின்றவனுக்குத் தெரிகிறது. கண்+ அம் = கணம். கண்ணம் என்று வந்து இடையில் ணகர ஒற்று மறைந்து இடைக்குறையானது என்று கூறினும் இலக்கணம் பொருந்துவதே. ணகர ஒற்று இரட்டிக்கவேண்டும் என்று கவலைகொள்ளும் இலக்கணப் புலமை மிக்கவருக்கு அது விடையாகலாம். கண் என்பது இடம் என்றும் பொருள்படுமாதலின், சிலவிடங்களில் தோன்றி மறைவதாக அறியப்பட்ட உருவங்கட்கும் இது பெயராய் இருத்தல் கூடுமெனல் அறியற்பாலதாகும்.
கண் என்பது ஒரு வேற்றுமை உருபும் ஆகும். இதன் பொருள் "இல்" (வேற்றுமை உருபு) என்பதை ஒப்பதே. வீட்டின்கண் பந்து விளையாடாதே என்ற வாக்கியத்தில் கண் என்பது இடப்பொருளது, " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்று வரும் குறளில் கண் என்ற சொல், உருபு, இடப்பொருள் சுட்டியது.
இப்போது விஞ்சை என்னும் சொல்லின் தோற்றத்தை அறிவோம்.
செய் என்ற சொல் நிலத்தைக் குறிப்பது. நன்செய், புன்செய் என்ற சொற்களில் இந்த வழக்குகளை அறிந்துகொள்ளலாம். இது நஞ்சை, புஞ்சை என்றும் திரியும், பின்வரு இரு சொற்களும் பிசகுகள் அல்ல, திரிபுகளே. காவிரி ஆற்றால் தண்மை செய்யப்பட்ட தஞ்சை மாவட்டமும் தண்செய்> ( தஞ்செய்)> தஞ்சை என்றே உருவானதாகும்.
விண்ணில் நிலம் இருக்கிறதா? நிலவிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு அதில் செடி முளைக்கவைத்திருக்கிறார்கள் என்பது தற்போதையச் செய்தி ஆகும். பூமிக்கு அப்பாலும் மண்ணும் இருக்கலாம். அதில் மேடு பள்ளங்களும் இருக்கலாம். ஆகவே, விண்செய்> விஞ்சை என்பதும் முறைப்படி அமைந்த திரிபுச்சொல்லே. இறந்தவர்கள் மேலே சென்றுவிட்டதாகக் குறிப்பிடுவது எல்லா இனத்தவர்களிடமும் ( சீனர், மலாயர், தமிழர், யப்பானியர், ஆங்கிலர் என எவரிடமும்) காணப்படுவதே. விஞ்சையர் என்பது பெரும்பான்மையர் வழக்கில் தோன்றிய வழக்குச் சொல் ஆகும்.
விண்ணில் உள்ள கிரகங்களிலும் நிலம் அல்லது மண் இருக்கலாம். சந்திரனில் உண்டு . (தண்திறன்> சந்திரன், இது தகர சகரத் திரிபு.) [ தண்திரள் > சந்திரன் எனினுமாகும்].
சில சொற்கள் நம்பிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ளன. மனம் என்ற ஓர் உறுப்பு உடலில் காணப்படவில்லை, இருதயம் அல்லது இதயம் என்பது இரத்தத்தை ( அரத்தத்தைக்) செயலாக்கம் புரியும் கருவியுறுப்பு, மனவுணர்வினால் எவ்வுறுப்பும் பாதிப்பு (தாக்கம்) அடையலாம் எனினும் உணர்வு என்பது மூளையிலிருந்து வெளிப்படுவதாகக் கூறுகின்றனர், ஆயினும் மனம் என்பது மூளையன்று, மூளையென்பது ஒரு குழைவுறுப்பு, விஞ்சையர் என்பது மறைந்து நம்மால் தொழுதகு மேன்மக்கள் என்று அறியப்படுவோரைக் குறிக்கும் சொல்லாகும், விண்செய்+ அர் என்பது உயர்ந்த செயலுக்கு உரியோராய் இருந்து மறைந்தவர்கள் என்றும் சொல்லலாம்,
உலகின் பொருள்கள் மனிதனின் நம்பிக்கையினால் இருப்பன இல்லாதன என்று கொள்ள இயலாது, விண்செய்யர் அல்லது விஞ்சையர் - தமிழில் உள்ள சொல். திரிசொல். இலக்கணம் அவ்வளவே.
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக