சனி, 27 பிப்ரவரி, 2021

ஜகதாம்பாவும் பரத்துவாசரும்.

 அத்து என்ற சாரியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  

பெரும்பாலும்  அம் என்ற இறுதிபெற்ற சொற்கள் வருமொழிச் சொற்களுடன் புணர்கையில்  அத்துச் சாரியை வரும்.  இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக   மடம்+ சாமியார் =  மடத்துச் சாமியார் என்று அத்துச் சாரியை வரும்.  அதுபோலவே இடம்+ பெரியவர்  என்று புணர்த்தின் இடத்துப் பெரியவர் என்று வரும்.  இதில் கவனிக்கவேண்டியது இன்னொன்று.   அத்துச் சாரியை இல்லாவிட்டால்  " மடச் சாமியார்" என்றும்  இடப்பெரியவர் என்றும் வந்து  வேறு பொருண்மை காட்டும் சொற்றொடர்களாக மாறிவிடக் கூடும்.  மடத்துச் சாமியார் என்பது மடச் சாமியார் என்று வரின் அறிவில்லாத சாமியார் என்று வேற்றுப்பொருள் விரவுதல் கூடும்.  இடப் பெரியவர் என்பது ஐயமிடப் பெரியவர் என்று பொருடருதலும் கூடும்.  ஆதலின் அத்துச் சாரியைக்கு பொருள்விளங்க நிற்குமாற்றலும் உண்டு என்று தெரிகிறது.

ஆயின் அத்து எனற்பாலது,  அது என்ற சொல் இரட்டித்துப் பிறந்த சொல்லே என்று அறிக.



ஜகதாம்பாள் என்ற பெயரின் பொருள் உலகின் அன்னை என்பதுதான். ஜக +அம்பாள் என்ற இரு சொற் புணர்வில், ஓர் அது என்ற சுட்டுப்பெயர் இடைப்புகுந்து, ஜக + அது + அம்பாள் என்று தோன்றி, பின்னர் அகரம் ( அது என்பதன் முதலெழுத்து) மறைந்து, தகரம் இரட்டித்து, ஜகத்து அம்பாள் ஆகி, உலகின் அன்னை என்று பொருள் பயந்து, ஜகத்தம்பாள் என்பது ஜகதாம்பாள் என்று தகர ஒற்றுக் கெட்டும் தகர உயிர்மெய் தாகாரம் ஆகி நீண்டும் இனிமை தோன்ற அமைந்துள்ளது. ஜகத்தம்பாள் எனின் நாவிற்கு ஓர் தடையுணர்வு தோன்றியவதனால் ஜகதாம்பாள் என்று இனிது அமைதல் காண்க. இஃது உண்மைநெறி விளக்கமே அன்றிப் பிறநூலார் அமைப்புரை அன்று என்று அறிக. மாற்று விளக்கம் வந்துழி நோக்கக் கடவது.




அது இது உது என்பன யாண்டும் விரவியுள்ளமையும் தமிழ் மொழியின் பரந்த பயன்பாட்டு எல்லையை ஆய்வார்முன் நிறுத்தவல்லது.



பரத்துவாசர் என்ற சொல்லிலும் அது வந்துள்ளது. பரம் என்ற அம் ஈறுபெற்ற சொல்லானது, அத்துச் சாரியை தமிழ் முறைப்படி பெற்றாலும் அயற்செலவில் பரத்துவாஜ் என்று மாறியபோது அத்து என்பது த் என்று குறுகி நின்றதே அன்றி அதன் தாக்கம் முற்றும் நீங்கிற்றில்லை என்று உணரவேண்டும். தகர சகரப் போலி: ( பதி >) வதி > வசி > வசி+ அம் = வாசம்> வாசர் எனற்பாலது முதனிலை நீண்டு விகுதி பெறல். பரத்து என்பது பரத் ஆனது. பரத்துவாசர் எனில் பரந்த மண்டலங்களில் வாழ்பவர் என்று தமிழில் பொருள்படும். பரத்து என்பது பரத் என்று நின்றமைபோலும் ஜகத்து என்பது ஜகத் என்று குறுகி மிளிரும்.

சொற்களின் அயல் உலாவில் பொருள் சற்றே திரிதலும் ஒலித்திரிபுகள் போலுமே அமைந்திடும்.

மாவிலிட்ட கருப்பஞ்ச்சாறு போலுமே தமிழினிமை யாண்டும் பரவிற்று காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

நோய் வருமிடர் தவிர்த்து

நலமே வாழ்வீர்.




குறிப்புகள்

அத்து ( உத்து ) என்பதும் சொல்லிறுதியிலும் வரும். அப்படி வந்த ஒரு சொல்தான் ரத்து என்ற தலையிழந்த சொல். இது இறு + அத்து என்பதிற் பிறந்தது. இறத்து > இரத்து > ரத்து. இதை விளக்கிய இடுகை இங்குக் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_8.html

இதை அத்து என்று இணைத்துச் சொல்லாமல் அ+ து என்று பிரித்து, அ - சொல்லாக்க இடைநிலை, து விகுதி என்று கூறினும் அதுவே. ஒன்றைப் பல்லாற்றானும் விளக்குதல் கூடும்.


 


கருத்துகள் இல்லை: