செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

கழிப்பிடத்துக்கு வரும் சில வேறுபெயர்கள்.

 இன்று கப்புரை என்ற சொல்லைக் கவனித்தறிவோம்.

இந்தக் கப்புரை என்ற சொல்லை,  "சலக் கப்புரை" என்ற தொடரிலிருந்து கொண்டுவருகின்றோம். இதைப் பிட்டு எடுத்துப் பார்த்தால் இது ஓர் அழகிய சொல்லாகவே தோற்றமளிகிறது..  ஆனால் இச்சொல் இருப்பதாக நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காண இயலவில்லை.. யாம் அறியாது எங்காவது வழக்கில் இருக்கலாம் என்றாலும்,  இங்கு இல்லை என்றே கொண்டு, அடுத்த கட்டத்தினுள் நுழையலாம்.

கப்புரை என்ற சொல் இல்லை என்றால் அப்புறம்  சலக்  கப்புரை என்று பிரித்து எழுதுவது வழுவாகிவிடும்.  ஆகவே, இனி   " சலக்கப் புரை" என்று வைத்துக்கொண்டு அதன் பொருளை அறிய முற்படுவோம்.

சலம் என்ற சொல்லில் ஒன்றும் இடக்கு ஏற்படவில்லை.  அதற்கு "நீர் " என்ற பொருள் உள்ளது.  அது  ஜலம் என்றும் வழங்குகிறது.  இது நீர் சலசல என்று ஓடுவதால் " சலம் " என்று பெயர் பெற்றதாக மறைமலையடிகள் கூறியுள்ளார்.  எனவே  சலசல, ஜலஜல எல்லாம் ஒலிக்குறிப்புகளே.   இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகளை மொழிப்பாகுபாட்டினுள் இருத்த வேண்டியதில்லை.  அவை பொதுவொலிகள். காகா என்று காக்கை கத்துவதுபோலுமே ஆகும். இதைக் காக்கா அம் (காகம் ) (க் இடைக்குறை);  காக்கா  ஐ (காக்கை) எனினும் ஒன்றே. அம் விகுதி அமைதல் குறிக்கும் விகுதி.   ஐ விகுதி உயர்வு என்று பொருள்பட்டுப் பின் வெறும் இறுதியாய் நின்றதொன்றாகும். உண்டனம்,  உண்டனை ( யாம் உண்டனம், நீ உண்டனை) என வினைமுற்றுக்களிலும் வரும்  விகுதிகளே இவை.    இவை உண்மையில் பல்பயன் காண்பன.

சலக்கம் என்பது கழிப்பிடத்துக்கு இன்னொரு பெயர்.   காலையில் சலக் கடன் களை நிறைவேற்றிக்கொள்வதற்கான இடம்.  இது சலக்கடம்  என்று அமைந்த சொல். கடம் என்பதும் கடன் என்பதும் மகர 0னகர ஒற்றுப் போலி.  அறம் - அறன், திறம் - திறன் என்பது போல.  இந்தச் சலக்கடம் என்ற சொல், சலக்கம் என்று திரிந்துள்ளது.   டகரம் கெட்டு, சலக்கம் ஆகி,  கழிப்பிடம் குறித்தது.  சலத்தைக் கடத்துமிடம் என்று கொண்டு,  சலக்கடம் > சலக்கம் எனினுமது.

கட என்பதற்குப் பதில் கழ (கழற்று, கழட்டு) என்று இட்டு நோக்குவானும் காண்பது அதுவேயாகும்.  பாழை - பாடை  என்று திரிபுண்மையால், வேறுபடுதல் இலது.

கப்புரை என்பதை கழிப்புரை என்று கண்டு, கப்புரை என்று முடிபு கொளுத்துதலும் அஃதே.  ழிகரம் இடைக்குறை.  பண்டுபோல் காணுமது.

புரை என்றல் இடம் என்று பொருள்தருவதே.  கழிப்புரை என்ற கூட்டுச்சொல் காணப்படவில்லை எனினும், அதனை இல்லை என்று கொள்ளுதல் இயலாது. கழி என்றொரு சொல்லும்  புரை ( இடம் ) என்ற சொல்லும் தமிழில் உண்மையின் எனக்காண்க.

சலக்கம்,  சலக்கப்புரை என்பன கழிப்பிடத்து வேறு பெயர்கள்.

இனி இது வாக்கியமாதலும் உரியது.  சலக்கு -  சலம் கழிப்பதற்கு,  அப் புரை - அந்த இடம் என்று  வாக்கியமாகி, " சலக்கப்புரை" என அமைதலுமாம்.  சலக்கு என்பது சலத்துக்கு என்று அம் விகுதி இழந்தபின் அத்துச்சாரியை மிக்கு நின்று வருதல் மகிழ்தரும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


குறிப்பு:

புரை -   இடம்,  துவாரம்.






கருத்துகள் இல்லை: