சனி, 6 பிப்ரவரி, 2021

பூமனைத் தொண்டு.

 இந்தக் கவிதை,  அங்குச் சுட்டப்பெற்ற பூமனைக் காட்சிகளை முன்வைத்துப் பாடப்பட்டது.   அக்காட்சிகளை நீங்கள் இவ்விடுகையில் கண்டு உவகை கொள்க.  சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2021/02/the-beauty-of-nature.html


பூமனைத் தொண்டு.


இயற்கை விளைத்த இன்பூக் கவின்தனை

செயற்கை மனைக்குள் செவ்வனே வைத்தல்

முயற்கொம் பன்றது முடிந்தது முற்றும்

அயற்கண் ஆனதை அழகினைக் காண்க.


வணமலர்க் காட்சி வருக காண்கென

உணத்தேன் உன்னும் ஈக்களை வரச்செய்

மணப்பூங் காவினை மனைக்குள் அமைத்தனர்.

கணம்கடன் மறவா இயற்கைக் காவலர்


கண்களை வருடி மனத்தினை மகிழ்த்தி

பண்பொடு மலர்போல் மணத்தொடு வாழ்கென

விண்கொடை ஒப்பதோர் விழுமிய செய்தி

தண்பெறத் தருவதிப் பூமனைத் தொண்டே.


அரும்பொருள்:


பூமனை - மலர்கள் வளர்க்கும் ஒரு கூடம்.

கவின் - அழகு.

முயற்கொம்பு - இயலாதது.

அயற்கண் - அடுத்த ஒரு தேயம். அல்லது நாடு

வணமலர் - வண்ணமலர் ( தொகுத்தல் விகாரம்)

உணத் தேன் - உண்ணுவதற்குத் தேன் தொகுத்தல் விகாரம்)


உன்னும் - நினைக்கும்

கடன் - கடமை

இயற்கைக் காவலர்

விண்கொடை - மழைபோலும் குளிர்ந்த கொடை

தண்பெற - குளிர்ச்சி பெற


கருத்துகள் இல்லை: