பச்சைக் கிழங்கைப் பிடுங்கித் தின்றுகொண்டு, விலங்குகட்கு அஞ்சிக்கொண்டு மரத்தின்மேல் வீடுகட்டிக்கொண்டு ஏறத்தாழ இலைகளால் தழைகளால் தன்னை மூடிக்கொண்டு குளிரிலிருந்து அல்லது வெம்மையிலிருந்து விடுபட வழியில்லையோ என்று வாடியவனே மனிதன். அன்று அவனைக் கண்டு அப்பால் மறைந்துவிட்ட அவனின் கடவுள் இப்போது வந்து கண்டாலும், வியப்பில் ஆழ்ந்து மலைத்து நிற்பார் என்பதில் ஐயமொன்றில்லை. அன்று அவனிடம் இருந்த சொற்கள், அ, இ, உ, பின்னும் சொல்வோமானால் எ, ஏ, ஓ எனச் சில இருக்கலாம்.
அதனால்தான் உ - உள்ளது என்று தமிழிலும் ஊ - இருக்கிறது என்று சீனமொழியிலும் அடிச்சொற்கள் பொருளொற்றுமை உடையவாய் உள்ளன.
அதனால்தான், அடா ( அங்கிருக்கிறது) என்ற அகரச் சுட்டில் மலாய் மொழியில் உள்ளது. அட் ஆ > அடா. அதே காரணத்தால் ஆங்கிலத்தில் அட் என்பது இடத்திலிருப்பது குறிக்கிறது.
உலக மொழிகளை ஆராய்ந்து எத்தனை சுட்டடிச் சொற்கள் கிடைக்கின்றன என்று நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது. செய்து நீங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்; அல்லது எங்காவது வெளியிடலாம். ஆனால் பிறருக்கு உரைப்பதால் தெளிவு மேம்படலாம் ஆயினும் உங்களுக்கு அதனால் பயன் குறைவுதான். பிறன் போற்றினும் போற்றாவிடினும் நீங்கள் இருந்தபடி இருப்பீர்கள். மாற்றமெதுவும் இல்லை.
விள் என்பது ஓர் அடிச்சொல். அதிலமைந்த வினைச்சொல்தான் விள்ளுதல் என்பது. இது சொல்லால் வெளியிடுதலைக் குறிக்கும். விள் திரிந்து வெள் > வெளி ஆனது. விள் திரிந்து விண் ஆதனது. இதுவும் ஆள் திரிந்து ஆண் என்று ஆனது போலுமே. விள் திரிந்து அய் இணைந்து விளை ஆனது. ஒரு விதை முளைப்பது விள் ( தரையிலிருந்து வெளிவருதல் ). அப்புறம் அது செடியாய் மேலெழுவது ஐ. இது அருமையான பழைய விகுதி. அதே மேலெழுதற் கருத்து இன்றும் ஐ - ஐயன் - ஐயர் என்ற பல சொற்களில் உள்ளன. அந்தக் காலத்தில் மனிதன் தனிமையை வெறுத்தான். அங்கிருப்பவர் இங்கு வந்து நம்முடன் நின்றால், நமக்கும் உதவிதான். கரடி வந்துவிட்டால் அவருடன் சேர்ந்து நாமும் கரடியை எதிர்க்க வலிமையில் மேம்பட்டுவிடுவோம். அதுதான் ஒற்றுமை: அது ஐ+ இ + கு + இ + அம் : அங்கிருப்பவர் இங்கு வந்துவிட்டார், இங்கு அமைந்தது ( நம் வலிமை) என ஐக்கியம் உண்டாகிவிடுகிறது. கழிபல் ஊழிகள் சென்றொழிந்திட்ட காலையும் நம் தமிழ் அடிச்சொற்கள் இன்றும் கதிர்வரவு போல இலங்குகின்றன.
இவ்வடிச்சொற்களால் ஒரே சொல்லை பல்வேறு வழிகளில் பொருளுரைக்கும் வழி தமிழ் மொழிக்கு உரித்தாகிறது. பிறமொழிகளிலும் மூலம் காணுதல் கூடும். ஆனால் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல்போலும் ஒலிகளை விலக்கிவிட வேண்டும். எடுத்துக்காட்டு: ஹியர் (ஆங்கிலம்). இ = இங்கு. அர் - ஒலி உள்ளது குறிக்கக்கூடும். அருகில் என்பதிலும் அர் உள்ளது. இ என்பது ஹி என்று வீங்கி நிற்கிறது. என்றாலும் முயன்று பொருள்கூற இயலும் என்றே கூறவேண்டும்.
இனி விளை என்பதில் து விகுதி இணைத்தால் விளைத்து ஆகிவிடும். து என்பது பெரிதும் "எச்ச விகுதி" யானாலும் ( தோலை உரித்து என்பதில் உரித்து போல , ஆனால் விழுது என்னும் பொருட்பெயர் அல்லது சினைப்பெயரில் து போல ) அதில் ளை என்பதை விலக்கி இடைக்குறையாக்கினால் வித்து ஆகிவிடும். ஒன்று பெயரெச்சம், மற்றது பெயர்ச்சொல். (பொருட்பெயர்). இவை பயன்பாட்டுக் குறிப்பெயர்கள். வேறொன்றுமில்லை. விளைத்தல் போலும் அறிவும் கல்வியும். ஆகவே ஒப்புமையாக்கம். விளைத்து > வித்து > வித்துவம் > வித்துவன் > வித்துவான் எல்லாம் விளக்கம் அடைகின்றன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக