புதன், 3 பிப்ரவரி, 2021

ஒலி செய்து தொடங்கும் வழக்கம். - சொல் : ஆரம்பம்.

 மனிதர்களிடையே பலவித ஒலிக்கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பம் என்ற சொல் முதன்முதலாய்ப் புனையப்பட்டு வழக்கிற்கு வந்த காலத்தில் எந்த எந்த ஒலிக்கருவிகள் இருந்தன  என்றோர் ஆய்வுக் கட்டுரை வரையும் முகத்தான் "பண்டைத் தமிழர் ஒலிக்கருவிகள் " என்று ஒரு தலைப்பைப் போட்டுக்கொண்டு ஆய்வு செய்யலாம்.  ஆர்வமுள்ளவர்கள் இதை ஆய்வு செய்வார்களாக.  இன்று நாம் சொல்லிற் பொருந்திய பொருளை உணர்த்தச் சில சொல்லி முடிக்கும் நோக்குடையோம்.

ஆரம்பம் என்றாலே "ஓலி" என்றுதான் பொருள்.  ஒலிசெய்து ஒன்றைத் தொடங்கினால் அத்தொடக்கத்துக்கும் "ஒலி" என்ற அடிப்படைப் பொருள்தரும் ஆரம்பம் என்ற சொல்லே பயன்படும் தகுதியை இன்று மொழியில் அடைந்துள்ளது.

ஆரம்பம் என்பதற்கு உள்ள பொருள்கள் ஆவன:

ஒலி

தொடக்கம்

கொலை

பாயிரம்

பெருமை

முயற்சி.

மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பொருள்களாய்த் தோன்றும்.  அப்படித் தோன்றுவது சரிதானா என்று சற்று பார்ப்போமே!

இப்போது செய்வது போலவே பழங்காலத்திலும் ஓர் ஒலியைச் செய்து சில காரியங்களைத் தொடங்கினார்கள். பெரும்பாலும் பெருந்திரளாகக் கூட்டமுள்ள நிகழ்ச்சிகளில் ஓர் ஊதுகருவியோ  அல்லது அடி தோற்கருவியோ பயன்படுத்தப்படும். அப்பால் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்று கூடியுள்ளோர் தெரிந்துகொள்வார்கள்.

பயன்படுத்துவது அடித்தொலி செய் கருவியாயின்,  "அம், பம், அம், பம்" என்று அடிப்பார்கள். படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதற்கு இவ்வொலி இன்றியமையாதது.  எந்தக் காலை எப்போது எடுத்துவைத்து எப்படிச் செல்வது என்பதற்கு இவ்வொலி துணைசெய்வது.

ஆர்தல் என்றாலே ஒலிசெய்தல் என்று பொருள்.  அவ்வொலி எத்தகைய ஒலி என்பதை அடுத்த ஈரசைகளும்  தெரிவிக்கின்றன. ... படைவீரர்தம் நடை தொடங்கிற்று  என்பதற்கு  ஒலி நல்ல அறிவிப்பு ஆகும்.

ஆர் + அம் + பம்.

மற்ற நாடுகள் போலவே  தமிழ்நாட்டிலும் சுற்றுப் புறங்களிலும் படைநடை பழகுதல் இருந்திருக்கவேண்டும் என்பது நல்லபடி தெரிகிறது.

ஒவ்வொரு மொழியிலும் ஒலிக்குறிப்பில் தோன்றி அமைந்த சொற்கள் உள்ளன.  காக்கை என்ற தமிழ்ச்சொல்லும் குரோ என்ற ஆங்கிலச்சொல்லும் இவ்வாறு தோன்றியன என்பது நீங்கள் அறிந்தது.  ஆரம்பம் என்பதும் ஒலிக்குறிப்பு அல்லது ஒலிக்குறிப்பும் ஓர் இயற்   சொல்லும் கலந்த  கலவைச் சொல் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது தெளிவு. முழு ஒலியாதிய சொல்லா கலவையா என்பது முதன்மையன்று.  நேரமிருக்கையில் கூர்ந்து உணர்ந்துகொள்ளுங்கள். யாம் வேண்டுமென்றே இதற்குள் செல்லவில்லை.

எப்போதாவது உங்களுடன் அதை நோக்குவேம்.

அம் பம் அம் பம் என்று அந்தக் காலத்தில் நடைபழகினர் என்று தெரிகிறது. இப்போது இடம் வலம் என்பதற்குரிய ஆங்கிச் சொற்கள் பழக்கத்தில் உள்ளன. ஏக்தோ ஏக்தோ என்றுமிருக்கலாம். இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இவ்வாறு ஒலியுடன் நடப்பதை மக்கள் கருதினர்.  அதனால் அதற்குப் பெருமை என்னும் பொருளும்  மற்றும் தொடக்கம் என்பது ஒரு முயற்சி ஆதலின் இச்சொல்லுக்கு முயற்சி என்ற பொருளும் பெறுபொருள் ஆயின.  பாயிரம் என்பது நூலின் தொடக்கத்தில் வைக்கப்படுவதால்  அது பாயிரத்தையும் குறித்தது.

அம்பினால் அறுக்கப்பட்டு இறத்தலும் கொலையே.  அறு + அம்பு + அம் > ஆறு + அம்பு + அம் >  ஆறம்பம் என்றிருந்திருக்கவேண்டிய சொல்,  ஆரம்பத்தில் வந்து சேர்ந்துகொண்டது.  அறு (வினைச்சொல்).   ஆறு  - முதனிலை திரிந்த தொழிற்பெயர். நதி குறிக்கும் ஆறு என்பதும் நீர் அறுத்துக்கொண்டு செல்வதால் ஏற்பட்ட சொல்லே.  ஆறு என்பது ஆர் என்று பிறழ்வாகி,  அம்பு என்ற கொலைக்கருவியை உள்ளடக்கி அம் விகுதி பெற்று,   கொலை என்ற பொருளில் வந்துள்ளது.  இப்பொருளில் இது பழநூல்களில் இருந்தாலும் இப்போது வழக்கில் இல்லை. சில சொற்கள் ரகர றகர வேறுபாடிழந்து வழங்கும்.  அத்தகைய சொற்களை இலக்கண் நூல்களில் காண்க.


மற்றவை பின் விளக்குவோம்.

மெய்ப்பு பின்னர்.

நோய்க்கு இடந்தராதீர்கள்.






கருத்துகள் இல்லை: