வியாழன், 18 பிப்ரவரி, 2021

குணம் குணித்தல்

 குணமென்ற சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

மனித உடலுக்குள்ள வாசல்களில்  கண், காது, மூக்கு, வாய் ஆகியவை உட்புகவுக்கான உறுப்புகள்.  கண் வழியாகக் காட்சியும் ( ஒளி ), காதின் வழியாக  ஒலியும்,  மூக்கின்வழிக் காற்றும் வாயின்வழி உணவும் உடலுக்குள் புகுவன ஆகின்றன. தோலும் ஓர் உறுப்புதான். அதன்மூலம் உற்றறிகிறோம். 

உள் என்ற மூலத்திலிருந்து,  பக்கம் குறிக்கும் உள் என்பதும் மற்றும் உண் என்ற சொல்லும் வருகின்றன.  ளகர  ஒற்று இறுதிச் சொல் ணகர ஒற்றிறுதியாக மாறும்,  பொருள் திரிதலும் ஏற்படும்.    எ-டு:  ஆள் -  ஆண்.  பள் -  பண். உள்-உண் என்பதும் அது போல்வதே  ஆகும்.  

கண் என்ற சொல்,  உள் >  உண் > குண்>  என்று வந்தது. எனவே, உள் வரப்பெறுவது  குண் என்பதறிக.  குண் என்பதிலிருந்து குணம் என்ற சொல் வந்துற்றது.

"திண்ணம் பன்றியொடும்

சேர்ந்த கன்று கெடும்"

என்று பண்டை மக்கள் எண்ணினர்.  தந்தை, தாய் ஆகியோரின் குணங்களும் கருவிலிருக்கும் காலத்திலிருந்தே குழந்தை உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்வதுண்டு. குழந்தையின் வளர்ச்சியில் அது தக்க காலத்தில் வெளிவரும் என்பர்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி"  என்று தொடங்கும் குறளில் "குன்றேறி" என்ற அதனால்,  நல்ல குணமென்பது ஒரு மலை,  ஒருவன் தானே முயன்று ஏறுதற்குரியது , அடைவதற்குரியது என்று நாயனார் கருதியமை தெளிவாகின்றது.

குணம் என்பது இவ்வாறு அடையப்பெறுவது ஆயினும்  அது பிறரால் அறிந்து கணிக்கப் பெறுவதும் ஆகும். ஒருவன் உள்வாங்கிக்கொண்டது எவ்வளவு, அது உள்ளமைந்தபின் வெளிப்படுவது குணம். அதைப் பிறர் அறிந்துகொள்வர் அல்லது குணிப்பர்.    குணித்தல் எனற்பாலது பின் கணித்தல் ஆயிற்று..

உகரச் சொற்கள் அகரமாதலும் மொழியிற் காணப்பெறுவதே. இதுபோலும் திரிபுகளை இங்குப் பழைய இடுகைகளில் காண்க.

குண் என்பது கண் எனத்  திரிந்து  விழி என்று பொருள்கொண்டது. கணக்கு முதலியவை மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படுவது.  இதிலிருந்து கண் > கணித்தல் என்ற சொல் பிறந்தது.

கண் > கண்+ அ + கு = கணக்கு

கண் >  கணி > கணி+ இது+ அம் = கணிதம்.

அது இது என்பன சொல்லாக்க இடைநிலைகளாக வரும்.  பரு+ அது + அம் என்பதில் அது என்ற இடைநிலை வந்தது.  புனிதம் என்பதிலும்  இது என்பது சொல்லாக்கத்தில் இடைநிலையாய் வந்தது. புனிதம் என்பது நீரால் நன் கு கழுவப்பெற்றது என்ற பொருளைத் தரும்  இதன் அடிச்சொல்: "புன்" என்பது.

புல்லுதல் -  பொருந்துதல்.

புல் என்பது புன் என்று திரியும்.  இது லகர 0னகரப் போலி.

புன் > புனல்.  பொருள் நீர்.  நீரென்பது எதிலும் பொருந்தும் தன்மை கொண்டது.  எதையும் ஈரமாக்கிவிடும்.. திரளும் தன்மையும் உள்ளது.  திரள்:  அடிச்சொல்  - திர.  திர- திரை;  திர+ அம் > திரவம்.  வகர உடம்படுமெய்.

புன் > புனல்  ( நீர்)

புன் >  புன் + இது + அம் >  புனிதம். ( புனிதம் எதற்கும் பொருந்தும் குணம். யாரும் ஏற்கத் தக்க குணம். புனலால் கழுவித் தூய்மை செய்தால் புனிதமாம் ).

ஒன்றுடன் ஒன்று இணைவதே திரட்சியும் ஆகும்.

ஆதலின்.  இது அது என்பன இடைநிலைகளாய் வந்து சொல்லமைதல் கண்டுகொள்க.

இகரம் உகரம் இரண்டும் சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதிகளாய் வரும்.

எடுத்துக்காட்டு:

குண் > குணித்தல்.  இங்கு இகரம் வந்தது.  (குணி,  கணி )

பொறு,  வறு,  இறு ( முடிதல்) இவற்றுள் உகரம் இறுதியாய் வந்தது.

பொல்  > பொறு.  (பொருந்துதல்  அடிப்படைக் கருத்து).

வல் > வறு   (தீயிட்டு வன்மை செய்தல்)

இல் > இறு.  ( இல்லையாவது).

இருத்து,   பொருத்து,  அழுத்து என்பதிலும் உகர இறுதி வினையாக்கம் உளது.

இவையும் இன்ன பிறவும்  உகர இறுதி வினையாக்கம்.

இதுகாறும் உரைத்தவற்றால்,  கணித்தல் குணித்தல் என்பவற்றை  உணர்ந்து, கூறிய பிறவும் அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்னர்.






கருத்துகள் இல்லை: