செவ்வாய், 11 ஜூலை, 2017

Terror attack on Amarnath pilgrims.

யாத்திரையாய் அமர்நாத்து நோக்கிச் சென்றார்
யாதொன்றும் யார்க்கெனினும் தீங்கே இன்றி
ஈத்துவக்கும் நெஞ்சினராய் பேருந்  துக்குள்
இனிதாக  ஊர்ந்துகொண்டே இருந்த வேளை
கூர்த்தகொடு தீவிரவா தத்தோர் சுட்டுக்
கொலைசெய்தார் எழுவரையே பல்லோர் காயம்;
ஆர்த்தபிற பயணிகளும் அஞ்சா நெஞ்சில்
அற்றுவிடாப் பற்றுடனே தொடர்ந்து வென்றார்.

இதைச்செய்து முடித்துவிட்டால் காசு மீரம்
இம்மென்று வந்திடுமோ மூட நோக்கில்
பதைபதைக்கப் பலர்செத்த போதும் என்ன‌
பயனையா  பாரிலென்ன கைக்குள் சேரும்;
எதைஎதையோ செய்வதெலாம் ஏறிச் சொர்க்கம்
இயன்றிடவே செய்திடுமோ மூளைக் கேடே!
வதைசெய்து பாவத்தின் வாய்ப்பட் டார்க்கு
வாய்த்திடுமே எரிநரகே அரனே வாழ்க.



ஈத்துவக்கும் = ஈந்துவக்கும், கொடையால் மகிழும்.
இங்கு எதுகை நோக்கி வலித்தல்.

இம்மென்று =  உடனே.

அரனே = கடவுளே







கருத்துகள் இல்லை: