சனி, 13 நவம்பர், 2021

ஆராதித்தல் வினைச்சொல்

தோற்றுவாய்:  ஆய்வு நலம்  

ஆராதித்தல் எனபது பூசை செய்தல் என்று பொருள்படுகிறது. உபசரித்தல் என்றும் இன்னொரு பொருள் உள்ளது.   ஆயினும் இதன் சொல்லமைபுப் பொருள் சற்று வேறுபட்டது.  மணம் என்ற சொல் வாசனை என்றுகூடப் பொருள்கொள்ளத்  தக்கதாய் இருந்தாலும், அது மண்ணுதல் ( நீரால் தூய்மைசெய்துகொள்ளுதல் ) என்ற வினையினின்று புறப்பட்ட சொல்லே.  வானவூர்தி ஓரிடத்தில் வானிலேறி இன்னொரு நாட்டில் போய் இறங்கிவிடுவதுபோல, சொற்களும் சில புறப்பட்ட இடம் வேறாகவும் இறுதி அடைவு வேறாகவும் இருத்தல் தெளிவு.  சில சொற்களுக்கு இருபதுக்கு மேற்பட்ட பொருள்கள்கூட இருக்கின்றன. நீங்கள் ஓய்வாக இருக்கையில் அவை எவ்வாறு இத்தனை பொருள்வேறுபாடுகளை அடைந்தன என்ற ஆய்வைச் செய்யலாம். இதனைச் செய்தால், தமிழுலகு உங்கட்குக் கடப்பாடு உடைத்தாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


வினைச்சொற்கள்

ஆராதித்தல் என்பதில் உள்ள வினைச்சொற்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஆர்தல் -   நிறைதல்.  ஆர என்ற எச்சவினை.

ஆதல்   -  ஆகுதல் என்ற வினை.   

தி என்னும் இடைநிலை. அல்லது வினையாக்க விகுதி எனினுமாம்.

~ தல் என்பது தொழிற்பெயர் விகுதி.

எனவே,  ஆர +  ஆதி   =  ஆராதி   ஆகின்றது.  "நிறைவாகு" என்ற பொருள்.

இது இரு வினைச்சொற்களை இணைத்து ஆக்கப்பட்ட கூட்டுவினை ஆகும். ஒரே சொல்லிலிருந்து இன்னொரு புதுவினை ஏற்பட்டதுமுண்டு.

அதனை இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நிறைவாக்கும் ஒரு பூசையைத் தொடங்கி  அதைத் தெய்வத்துக்குச் சாத்துதல் என்பதே இதன் பொருள் ஆகும்.

ஆமோதித்தல் என்பதில் ஆம் + ஓது + இ என, இறுதி இகரம் மட்டுமே வினையாக்க விகுதி ஆயிற்று. மூழ்கு, பழகு என்பவற்றில் கு வினையாக்க விகுதி.

நிறைவுக்கருத்து உள்ளபடியால் உபசரித்தல் அல்லது ஓம்புதல் என்பதும் மற்றொரு பொருளாயிற்று.

ஆர்தல் என்பது கலந்த மற்ற வினைகளும் உள்ளன. அவற்றைப் பின்பு காண்போம்.  பணிவும் கவனிப்பும் அலங்காரங்களும் நிகழ்வுடன் ஒன்றித்திருத்தலும் எனப்  பலசாயல்கள் இவ்வினையில் உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வியாழன், 11 நவம்பர், 2021

தாம்பூலம்

 இன்று தாம்பூலம் என்ற சொல்லினைக் காண்போம்.

இச்சொல்லில்  பூலம் என்பது புல்லுதல், புல்குதல் என்ற வினைகளுடன் தொடர்புடைய சொல்.

புல்லுதல்  -  ஒன்றுபடுதல்.  

புல்குதல் என்பதும் இதற்கிணையான பொருள் உடையது.

அடிச்சொல் புல்  என்பது.

புல் + அம் =  பூலம்  என்பது ஆடவர் பெண்டிர் ஒன்றுபடுங்கால்,  அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து வருங்கால் வாய் நாவு முதலியவை தூய்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ளும் அடைகாய் முதலியவற்றைக் குறிக்கும் சொல்.  பூலமென்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உருக்கொள்ளும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் என்பர். இலக்கணக் குறியீடு.  தொழில் என்றது வினைச்சொல் எனற்பொருட்டு.

இது பெரிதும் மங்கல விழாக்களில் பயன்பாடு கண்டது. பண்டையர் இயற்கையில் கிட்டும் வெற்றிலை முதலியவற்றைக் கையாண்டு தங்களை தூய்மைப் படுத்திக்கொண்டனர்.  இதுபோதுள்ள செயற்கை மருந்து வகைகள்  அக்காலத்தில் இல்லை.  Chlorhexdine, betadine  எனல் தொடக்கத்து இக்காலத்து மருந்துகள் முற்காலத்திலில்லை அல்லது பயன்பாடு காணவில்லை.

ஒரு வாய்ப்பு அந்நிலையைத் தருங்கால் இட்டுக்கொள்வது "தரித்தல்"  ஆகும்.  தரு> தரி > தரித்தல்.  தரி என்பதில் இகர ஈறு வினையிலிருந்து இன்னொரு வினையைப் பிறப்பித்தது.  ( தரு- இ- த்தல் ).  தருவித்தல் என்பது பிறவினை. இவ்வாறு ஒன்றிலிருந்து பலசொற்களை மொழிக்குப் படைத்துக்கொண்டது அறிவுடைமை.  முயற்சியின்றிக் "கடன்"கொள்வது சோம்பல் ஆகும். 

தாம் என்ற முன்னிணைப்பு, ஒருவருக்கொருவர்  அல்லது தம்மில் தாம் பதிந்து வாழத்தொடங்கும் இல்லற வாழ்வு நிலையைக் குறிக்கவரும் அழகிய சொல்லமைப்பு.

தம் + பதி > தம்பதி என்பதும் இத்தகைய நிலை உணர்த்தம் சொல்லாகும்.  தம் என்பதும் பதி(தல்) என்பதும் தமிழே.

பதிவுத் திருமணம் என்ற தொடரில் பதிவு வருகிறது.

எனவே  தாம் புல்லி மகிழத் தேவையான ஒன்று தாம்பூலம் என முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 10 நவம்பர், 2021

வெற்றிலைக்கு இன்னொரு பெயர்.

 நம் வலைப்பூவில் வெற்றிலை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதியுள்ளோம்.   அவை இங்கு உள்ளன.  படித்து மகிழவும்:

வெற்றிலை:   https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

சருகு பிளகு  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

குரங்குக்கு மறுபெயர்கள்  ( வெற்றிலையைக் குறிப்பிடுகிறது)

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

வெற்றிலை இல்லா வினை: https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html  (கவிதை)

வெற்றிலை---  - - வேறு பெயர்கள்  https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

வெற்றிலை பெரும்பாலும் பல், நாவு முதலியவற்றை __ தூயதாக்குகிறது என்று வெற்றிலை போடுகிறவர்கள் சொல்கிறார்கள்.   போயிலை ( புகையிலை) யும் பலர் போடுகிறார்கள்.  நம் வீட்டுப் பாட்டிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் சிவகிரிப் போயிலை கிட்டாமல்  சிறிது இன்னலுற்றார்.  பின்பு கொண்டுவந்து அது கடைகளில் கிடைத்தது.  என்ன மகிழ்ச்சி!  ஆனால் போயிலைக்கு விலை அதிகம்.  போயிலையினால் புற்று நோய் வருகிறது என்று ஐயப்பாடு இருப்பதால்,  அது அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தபடுகிறது.  .  

வெற்றிலைக்கு "நாவிலை"  என்பது மற்றொரு பெயராகும்.  ஆகவே நாவு தூய்மைப் படுவதற்கு வெற்றிலை இன்றியமையாதது என்று நம்  பாட்டி பூட்டிகள் காலத்தில் நம்பினர் என்று நாம் கருத இடமுண்டு.

தாம்பூலம் என்பது வெற்றிலையை மட்டும் குறிக்காமல்,  பாக்கு அல்லது சீவல்,  சுண்ணாம்பு, கத்தக்காம்பு  (கற்றைக்காம்பு) என வாயில் போடுவதற்குரிய பொருள்களின் தொகைச்சொல் என்று தெரிகிறது.   இதைத் தாம்பூலம் தரித்தல் என்பர்.

தாம்பூலம் என்பது பூலம் என்றும் குறுக்கம் அடையும்.

முகபூசணம்,  தக்கோலம், சுருளமுது, அடைக்காய்  என்பனவும் தாம்பூலம் என்பதற்கு மறுபெயர்கள்.

உதடுகள் சிவந்து சாயம் பூசியது போலும் தோன்றுதலால் முகபூசணம் ஆயிற்று. முகம் என்றது உதட்டைக் குறித்தது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

If you entered the compose mode please do not move your mouse over published material. You may be making unwanted changes . Please help by exiting the compose mode quickly.