வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

சுமங்கலிப் பூசைப் படங்கள்

அருள்மிகு துர்க்கையம்மன்





இவை கடந்த ஞாயிறு 15.8.2021ல் சிங்கப்பூர் சிவதுர்க்கா ஆலயத்தில் நடைபெற்ற சுமங்கலிப் பூசையின்போது எடுக்கப்பட்ட படங்கள். தந்துதவியவர் திருமதி சிவலீலா அவர்கள் குடும்பத்தார்.  நன்றி.

பூசை ஆலயத்தாரால் ஸ்ரீ  துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

அருள்மிகு துர்க்கையம்மன் திருமுன் நடைபெறும் பூசை காண்க.


அழகிய சிவதுர்க்கை  அருள்மழை பொழிகின்றாள்

இளகிய உளம்கொண்டே இன்னலற வந்துசிறு

குழவியை அணைத்தல்போல் குரல்காதில் கேட்டதுமே

உழைவந்து பிழைபொறுப்பள்  உலகினையே காத்திடுவள்


-   சிவமாலையின் கவி.


குழவி -  குழந்தை

உழை -  அருகில்


.


 

பரவசம்--- மனிதவசமும் தெய்வவசமும்

 பரமன் என்ற சொல்லுக்குப் பொருள் ஆயும் முகத்தான்,  பர என்ற  சொல்லின் அடிப்படைப் பொருளை நாம் அறிந்துகொண்டோம்.    1  இவற்றை நீங்கள் வாசித்தறிய ஆர்வம் கொண்டிருப்பீர்;  அவை கீழ் (அடிக்குறிப்பில் ) தரப்பட்டுள்ளன.  இது மிக்க விரிவாக ஆய்வு செய்யப்பட்ட சொல்லாதலின் பட்டியல் மிக்க நீளமே.  தலைப்பை நோக்கிச் சிலவற்றையாவது படித்து, பரம் பரத்தல் என்பவற்றின் சொல்லமைப்புப் பொருளை அறிதல் நலம்.

சுருங்கச் சொல்லின்,  பர என்பது எங்கும் விரிந்திருத்தல்.  இறைவனுக்குப் பரமன்  (ப்ரம்மன்) என்ற பெயர் இதனாலேயே ஏற்பட்டது.

ஆகவே பர வசம் என்பது இறைவனின்  வசப்படுதல் என்றும்  பொருள் கொள்ள இடமுண்டு.

பரம் முழுமைச்சொல் ஆதலின் பர எனற்பாலது எச்சச்சொல்லே ஆகும். இவ்வெச்சம் புணர்ச்சித் திரிபு என்பர் நம் இலக்கணியர்.

இன்னொருவனுக்கோ இன்னொருத்திக்கோ வயப்பட்டால், அதுவும் பரவசம் எனப்படுதலுக்கு வழக்கு அல்லது பயன்பாடு உள்ளது.

பரவசம் என்பது உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதலையும் ( சத்தியப் பிரமாணத்தையும்) குறிக்கும் என்பர்.  ஓர் உறுதிமொழி எடுத்தல், எங்கும் எடுப்பவனை உட்படுத்துவதால் இப்பொருள் எனலாம்.

பரவசத்திற்கு விவசம் என்பதும் ஒப்புமைச் சொல்லாகலாம்.  விவசம் என்பது விரிந்து வசமாவது.  விரிவசம்> விவசம்  இடைக்குறையாகும்.

பரவசம் எனின் பரந்து வசமாதல்.  விரிந்து வயப்படுதல்.

தெய்வப்பற்றினாலும் ஒருவர் வசப்பட்டு நிற்றல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.









------------------------------------------------------------------------------------------------------------------------

அடிக்குறிப்பு:

1.  முன்னர் நாம் அறிந்துகொணட பொருளின் பட்டியல்

பரமன்  https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_27.html

பரம், கடவுள், பரந்தாமன் https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_7.html

பராக்கிரமம்  https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_9.html

பணபரம்  ( சோதிடத்தில் )  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

பரம்பரை  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

பரவை https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_22.html

பரத்தல்  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_28.html

சூரியன் https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html

பனம்பாரனார் https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_30.html

இடைநிலைகள்  https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_7.html

மற்றும்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_64.html

சிவஞான போதம் பா.2  https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_11.html

அப்பரம் அப்புறம்  https://sivamaalaa.blogspot.com/2015/01/apparam-and-appuram.html

பரத்துவாசர் https://sivamaalaa.blogspot.com/2021/02/blog-post_27.html

தாவரம் தாபரம்  https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_7.html


புதன், 18 ஆகஸ்ட், 2021

வீட்டுக் கவிபாடி வெட்டிக்கிருமியை விரட்டி அடியுங்கள்.

 எப்போது வந்தாலும் தென்றல் தென்றல்

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம்

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி!

இதுநம்முள்  ஒட்டுவதால் நன்மை கம்மி.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே

நந்தமிழிற் கவிபாடி வாட்டம் இல்லாப்

பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். 


எப்போது வந்தாலும் தென்றல் தென்றல் - தென்றல் என்பது எப்போது வீசினாலும்  அது இனிமைதான்; முதல் சொல் தென்றல் என்பது தென்மென் காற்று என்பது.  இரண்டாவது தென்றல் இனிமைப் பொருளது.

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம் --- அடிக்கடி வராத புயல் என்பதில்

இனிமை இல்லை,  அது துன்பமே.  வேறாம் - இனிமையிலிருந்து வேறு படுவதாம்,  அதாவது துன்பமே.

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி! --  இக்காலத்தில் நம்மிடையே வந்துள்ளது  வைரஸ்

இதுநம்முள் ஒட்டுவதால் நன்மை கம்மி. --  இது  நம்மை ஒட்டிக்கொள்ளுமாயின் இதனால் நன்மை மிகக் குறைவு.  பிழைத்துவிட்டால் ஒருவேளை நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், அது ஒரு குறைந்த நலமே.  வழுக்கியும்  விழாதது போல.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே--  வருங்காலத்தின் நல்ல பொழுது உள்ளது; நீங்கள் வீட்டினுள்ளே இருந்து,

நந்தமிழிற் கவிபாடி -  நமது தமிழில் கவிகள் இயற்றி, 

 வாட்டம் இல்லா  - கெடுதல் இல்லாத,

 பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்  - இவ்வுலகத்தில் பொன்னான பொழுதாய் அதை மாற்றிவிடுங்கள்.

வருங்கால மக்களுக்கு நல்ல கவிதைகளாவது கிடைக்குமே!

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். ---  புன்மை மகுடமாகிய கொரனாவைப் பொன் மகுடமாக மாற்றி இன்பம் சேருங்கள்.

புன்மை-- இழிவு.

புன்முடி - இழிமுடி, கொரனா.

( If a compose copy of this post is in circulation anywhere, it is an error. Please reload to obtain the correct output )