வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அம்பும் அஸ்திரமும்.

 அம்பு அஸ்திரம் என்ற இருசொற்களையும் ஒப்பாய்வு

செய்தல்  தக்கது  ஆகும்.


அம்பு என்பது ஒரு சுட்டடிச் சொல். அ : இவன் 

( இங்கிருப்போன்) (அம்பு) அவனிடம் போகுமாறு,    (அ - அவன்பால்)

இடைவெளியில் பறந்து செல்லுமாறு அனுப்பப்படுவதே

அம்பு.   இதில் உள்ள பகுதி அல்லது முதனிலை "அ"

என்பதே.  பு என்பது ஒரு விகுதி. விகுதிக்கும் பொருள்

கூறவேண்டின்,  புகுவது, புகுத்தப்படுவது என்று விளக்கம்

செய்யலாம். எவ்வாறெனினும் அது ஒரு சுட்டடிச் சொல்

என்பது தெளிவு


அஸ்திரம் என்ற சொல்லும் அம்பு என்ற பொருளை

உடைய சொல்லே .  அப்பால் செல்லுமாறு இங்கிருந்து

ஏவப்படுவது அஸ்திரம்.  இதில் ஓர் ஐயமும் இல்லை

அ ( அங்கு செல்லுமாறு )  இங்கிருந்து ( இ)  திறமாக

ஏவப்படும் ஓர் ஆயுதம் அம்பு.   அ + இ + திறம் >

அயித்திறம் என்று வரும்.  இதில்,  யிகரத்துக்கு ஸ்

என்னும் மெய்யையும், திறம் என்பதற்கு திரம் என்ற

மாற்றுருவையும் இட்டால், அது அஸ்திரமாகிவிடு-

கின்றது.  திறம் பொதிந்த ஒரு செயலுக்கு வரும்

விகுதி திரம் என்று வருவது மிகுதியாம் என்பதுணர்க.


எடுத்துக்காட்டுகள்:

ஆ என்ற சினக்குறிப்புடன் எழுந்து எதிர்நிற்றலை

ஆ + திறம் >  ஆத்திரம் என்றதுபோலும் அமைப்பே

இதுவாகும். பாத்திரம் என்ற சொல்லையும் ஆய்வு

செய்யலாம்.   பர > பார் > பா  ( சற்று பரவலாக, 

அல்லது பரப்பளவு உள்ளதாகத் திரித்து அமைக்கப்

படும் ஓர் ஏனம்  அல்லது சிறுகொள்கலம் - பாத்திரம்

ஆகும். பரந்த வாயுடன் உட்குழிந்த கொள்கலம் என்க.

திரித்தல் என்பது செய்தல் என்றும் பொருளாம். 

திரி + அம் = திரம்  ஆகவே,  செய்யப்படும் எப்பொருட்கும்

இவ்விகுதி பொருந்தும்,  எச்செயலுக்கும் பொருந்தும்

என்று உணரவேண்டும்.  திரி, திரம் மற்றும் திறம் என்பன

ஒரு மூலத்தவை.


அ + இ + திரம் > அயித்திரம் பின் அஸ்திரம் ஆயிற்று. 

அப்பால் செல்லுமாறு இங்கிருந்து என்று கருத்து

மாறி அமைந்தது ஏன் என்று நினைக்கலாம். இது

தொடங்குநிலை பின் வைத்து அமைந்த சொல். இதற்கு

இன்னோர் எ-டு:  வாயில் என்பது. இல்லின் வாய்  என்பது

முறைமாற்றாய் அமைந்தது போலுமே இதுவாகும்.


எடுத்துக்காட்டு:  அனுப்புதல்.

அனுப்பினான் என்று பொருள்படும் "அயிச்சு" என்ற

மலையாளச் சொல்லும் அங்கிருந்து  முன்னிலையில் 

(இங்கு)  வந்தது  என்னும் கருத்து 

 அமைந்ததே.   ஆனால் இச்சுட்டடிச் சொல்லில்

தொடக்கம் சேர்வு ஆகியவை   நிரலாக

அமைந்துள்ளது.  அனுப்பு என்பது  அங்கிருந்து , (அ),

உ ( முன் என்னும் பொருள்)   முன்வருமாறு செய்வது

குறிக்கும்.   அ> அன்,    உ (முன்),  பு  - விகுதி.  ஆக,

அனுப்பு ஆயிற்று.  இங்கு பு என்பது வினையாக்கம்

குறிக்கும் விகுதியாயிற்று. அவண் உய்ப்பது என்று

சுருங்கக் கூறுக. இதுபின் இங்கிருந்து அங்கு 

செல்வதையும் குறித்தது ஒரு பொருள்விரி ஆகும்.

முன்னிடத்ததான ஒன்று அங்கு செல்வதென்னும்

பொருள்விரி.  இச்சொல் இருபாற் செலவையும்

பொதுவாய்க் குறிக்குமென்றும் வாதிடல் இயலும்.

 ஆதிகாலத்தில் அன் - அண், இன் > இண் என்ப

வெல்லாம் ஒன்றுக்கொன்று ஈடாக

வழங்கிய   தன்மையையே மொழிவளர்நிலை 

காட்டுகின்றது.


 அம்பு  அஸ்திரம் என்ற சொற்கள், கருத்தில் ஓர்

அமைப்பினவாய சொற்கள் என்பது முடிபு.

அங்கு சென்றது என்பது பொருள்.  இங்கிருந்து

என்ற கருத்து அம்பு என்னும் சொல்லில்

தொக்கு.   அஸ்திரம் என்ற சொல்லில்

அக்கருத்து உள்ளுறைந்து  அயலொலியால்

மறைக்கப்பட்டுள்ளது.


அஸ்திரம் என்ற சொல்லில் வரும் ஸ் என்ற

அயல் ஒலியை விலக்க, அங்கு தோன்றும் சொல்

தமிழ் எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும்.

இதுவே "வடவெழுத் தொரீஇ  எழுத்தொடு புணர்ந்த"

என்ற தொல்காப்பிய நூற்பாவின் கருத்து.

அவ்வாறே ஆயினமை ஈண்டு காட்டப்பெற்றது.


தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலா

 இவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவே

நம்பத்தகுந்த செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

அவருடைய உடல்நிலை தேறிவருகிறது என்பதே

நாமறிந்த உண்மை.


இதற்கு முரணான செய்திகளும் பரப்பப் படுகின்றன.

இவற்றில் உண்மை இல்லை என்று நாம் நம்புவோம்.


பொய்ச் செய்திகளைப் பரப்பி அவற்றால் என்ன

கிடைக்கிறது என்று தெரியவில்லை.


பாலா மிகவும் நல்லவர் என்பதே நம் கருத்து

ஆகும். எமக்குத் தெரிந்த  ஓர் ஐயப்ப சாமி

நன்றாகப் பாடுவார். பாலா சிங்கப்பூர் வந்த

போது அவரிடம் சென்று பாடிக் காட்டினார்.

பாலாவும் மிகவும் மகிழ்ந்து நம் சாமிக்குப்

பாராட்டுக்களைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். 

"உங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும்"

என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பாலா

அவர்கள். நம் சாமி அதனை அன்புடன்

நினைவு கூர்ந்து எம்மிடமும் பகிர்ந்துகொண்

டுள்ளார்.

பாலா அவர்கள் உடல்நிலை தேறி அவர்தம்

இசைத்தொண்டினைத் தொடர்தல் வேண்டும்

என்பதே இறைவனை நோக்கிய நம் இறைஞ்சுதல்

ஆகும்.


மேற்குறித்த நம் பூசை அன்பர்  ( ஐயப்ப சாமி )\

இசைஞானி  திரு  இளையராஜாவுடன் எடுத்துக்

கொண்ட படம் இதோ:: ( சொடுக்கவும் )


https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_88.html


பாலா அவர்கள் நலம்பெற்றுத் திரும்ப 

இளையராஜா அவர்களும் வேண்டிக்கொண்டுள்ளார்.

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

 மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?  என்பது 

சிலருக்குப் பெரிய கேள்வியாகத் தெரியலாம்.  

யாரோ ஒரு பாடலாசிரியர் இப்படி எழுதினார்:

" மந்திரத்தால் எந்த நாளும்

மாங்க்காயும் வீழ்வதில்லை;

தந்திரமும் தோற்பதில்லை

தாரணி மேலே"

இதுவே பாட்டின் பகுதி. ஒரு பாடல் மிக்க அழகுடன்

 மிளிர்ந்தாலும் அதன் பொருள் அனைத்தையும்  யாம் 

ஏற்பதில்லை. யாம் முழுப்பொருளையும் பேதப்படாமல் 

ஏற்றுக்கொண்ட சில பாடல்கள்  உள்ளன.  யாம்    ஒரு 

பகுதியையே ஏற்றுக்கொண்டு மறு பகுதியை 

ஏற்றுக்கொள்ளாத பாடல்கள் சில உள்ளன. யாம் 

முழுமையாக ஏற்றுக்கொண்டு, அப்பொருளழகில் 

தோய்ந்துவிட்ட சில பாடல்களும் உள்ளன. 

யாம் பொருளை ஏற்காதபோதும், அப்பாடலின் எதுகை 

மோனை சந்தம் என்ற பல வெளியழகுகளில் நின்று 

மயங்கிய பாடல்களும் உள்ளன.  எம் சொந்தக் கருத்துகளை

 வெளியிடாமல் ஒரு பாடலுக்குப் பொருள் கூறியதும் 

உண்டு.  பாடலின் பொருள் யாது என்பதுதான் அதில் விடயம். 

நம் சொந்தக் கருத்து யாது என்பது அதில் எழவில்லை.

 எம் சொந்தக் கருத்தை அப்பாடல் சொல்லவில்லையே 

என்று அப்பாடலை யாம் வெறுப்பதில்லை. எம் சொந்தக் 

கருத்தை அந்தப் பாடல் சொல்கிறதே என்று அதனைக் 

கொண்டாடுவதுமில்லை. எமக்கு ஒத்துப்போகும் கருத்து 

அதில் உள்ளது. அந்தப்பாடலைப் கேட்குமுன்  யாமும் 

அந்தக் கருத்தையே கொண்டிருந்ததால் அப்பாடல் எமக்கு 

அறிவுறுத்திய புதிய கருத்து ஒன்றுமில்லை. 

ஆனால் பிறன் ஒருவற்கு அது பயன்பாடு உள்ளதாகலாம்.  

அதை யாம் மறுப்பதற்கில்லை. அது அவனுக்குப் 

பயன்படுகிறதா இல்லையா என்பதை அவன் தான் 

தீர்மானிக்க வேண்டும்.


இப்போது தந்திரமும் தோற்பதில்லை என்ற பாடலின்

 பகுதிப் பொருளைப் பார்க்கலாம்.  தந்திரம் செய்து 

அது தோற்றுப்போன பல நிகழ்வுகள் உலகில் உள்ளன. 


ஒரு பெரிய மரக்குதிரைக்குள் படைவீரர்கள் பலர் 

ஒளிந்துகொண்டு போய் ஒரு பகைநாட்டினுள்

புகுந்தபின் அந்த நாட்டைத் தாக்குதலுக் குள்ளாக்கி 

அங்குள்ள படைஞரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட 

தந்திர நடவடிக்கையில் "தந்திரம்" பலித்தது.  ஆகவே 

தந்திரம் தோற்கவில்லை என்று கூறலாம்.  ஆனால் 

தந்திரங்கள் எப்போதாவது வெற்றி பெறலாம்.

பிற நிகழ்வுகளில் தோற்றுவிடலாம். எப்போதும் 

வெற்றி என்று எதிர்பார்க்கமுடியுமோ?


இப்போது இன்னொரு நிகழ்வினைக் காண்போம். ஒருவர்

மருத்துவரிடம்  நோய் விடுப்பைப் பெறுவதற்காக ஒரு 

தந்திரம் செய்தார். வாயை வெந்நீரால் கொப்பளித்து 

விட்டுக் கொஞ்சம் நேரத்துக்குள்ளாகவே உடல் வெப்பம்

 அறியுமிடத்தில் சென்று வெப்பமானியை வாய்க்குள் 

வைத்துக்கொண்டார்.  அந்த வெப்பமானி அவருக்குக்

காய்ச்சல் இருப்பதாகக்  காட்டியது.அங்கிருந்த தாதி

 அதைப் பதிவு செய்துகொண்டு அவரை மருத்துவரிடம் 

அனுப்பினார். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு,

 "காய்ச்சல் அதிகமாக இருக்கிறதே" என்றார்.

 உடனே மருத்துவர் அவரிடம் இருந்த வெப்பமானியை 

எடுத்து இந்தப் போலி நோயாளியின் வாய்க்குள் வைத்து 

வெப்பத்தை அளக்கவே அது உடல் வெப்பத்தைக் குறைத்துக் 

காட்டியது.  காய்ச்சல் ஒன்றும் இல்லை என்று சொல்லிய 

மருத்துவர், அவருக்கு வேலையிலிருந்து விடுப்பு

எதுவும் அளிக்காமற்போகவே,  போலி நோயாளியின் தந்திரம்

தோற்றது. இதை வைத்துப்பார்த்தால், தந்திரமும் 

தோற்பதில்லை என்ற கருத்தை ஏற்கமுடியவில்லை.

தந்திரமும் தோற்பதில்லை என்ற வாக்கியத்தில் 

மும் -  உம் என்பதற்கு ஏதும் பொருள் உள்ளதா?  

எந்த நாளும் மாங்காய் வீழ்வதில்லை, என்பதற்கு 

எப்போதும் வீழ்வதில்லை, ஆனால் எப்போதாவது

வீழ்வதுண்டு என்று பொருள் கொள்ளலாம். 

அப்படிச் சொன்னால் திறமுடையோர் மந்திரம் 

சொன்னால் அது பலிப்பதுண்டு என்று கூறி 

மந்திரத்தின் திறத்தை நிலைநாட்டிவிடலாம், சிலர் 

ஏற்காவிடினும்.  அதே " எந்தநாளும்" என்ற தொடரை, 

தோற்பதில்லை என்பதற்கும் வருவித்துரைத்து,

  " எந்த நாளும் தோற்பதில்லை, ஏதாவதொருநாள் 

தோற்பதுண்டு, எப்போதாவது வெல்வதுண்டு

என்று முடிவு கட்டிவிடலாம். அப்படியானால்

 பாடல் வரிகள் நிலைநாட்டிய கருத்து இங்குமில்லை, 

அங்குமில்ல்லை  என்று ஆகிவிடுகிறது. இவ்வாறு 

கூறவே, பாவலரின்  கருத்துக்கும் அவரெழுதிய 

நடப்பு நிலைக்கும் சுற்றுச்சார்புக்கும்,    

இவ்வுரைகள்பொருந்துமா என்பது இன்னொரு 

கேள்வியாய்த் தனித்து  நிற்கும்.


இனி, மந்திரம் என்பதென்ன?  அதன் சொல்லமைப்புப்

பொருள் யாது,  தந்திரம் என்பதென்ன, அதன் சொற்

பொருள், அமைப்பில் யாது, பயன்பாட்டில் யாது? என்று

விளக்கி, மந்திரமென்பதும் தந்திரமென்பதும் 

உண்மையில் யாது யாது என்று விளக்கி, பொருளைத்

 திறமுடையோர் திசைமாற்றிவிட்டுவிடலாம். நேரம் கிட்டினால் 

இதையும் வாதிட்டு நாம் ஒருநாள் மகிழலாம்.

நன்றி.


மெய்ப்பு பின்னர். 

எழுத்தில் திருத்தங்கள் வேண்டின்

சுட்டிக்காட்டினால் நன்றி.

இவை பின் கவனிக்கப்படும்.

உங்கள் கருத்துகளைப்

பின்னூட்டமிடவும்.


This post has been hacked, apparently after posting.

original restored

Some websites experienced downtime in

Singapore.

Edited again: 17.8.2020