வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நோய்கள் பரவினாலும் தமிழ்ப்பற்று.

நோயணுக்கள் விஞ்சி  நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும்‌  மகுடமுகி ---- தூயரையும்

விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து   காக்கதனை
குட்டறிந்  திந்நாள்  குலவாமல்  ----- மட்டுறுத்திப்


பட்டறிவா   ளர்வாழ்வார்  பாட்டும்  தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும்   -------ஒட்டியிங்கு

வந்தே மகிழ்கின்றார்  வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள்  இங்கு.


பொருள்

நுழைவரும் எவ்விடத்தும் --  புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும்.  (நுழைவு அரும்)

பாயடைவு -  பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.

மகுடமுகி  -  கொரனாவைரஸ்.  (கோவிட் 19)


காக்கதனை -  தன்னைக் காத்துக்கொள்க.


குட்டறிந்து  -   மறைதிறவுகளை அறிந்து

குலவாமல் -  நெருங்கிப் பழகாமல்.

பட்டறிவாளர்  -   அனுபவசாலிகள்

எட்டுவதால் -  (வருவோரைச் ) சென்று சேர்வதால்;

தந்தேம்  -  தந்தோம்

நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து.  வாழ்க தமிழ்


புதன், 1 ஏப்ரல், 2020

தேகமென்றாலே அது பழுதுதான்.

வயப்படு வயதும்
அகப்படு அகவையும்


உலகம் வயதாகிக் கொண்டு வருகின்றது.  வயது என்ற துகரவிகுதிச் சொல்லை  ஆய்ந்து  சில முறை வெளியிட்டுள்ளோம்.  இதற்குமுன் வெளியிட்டது இன்னுமுள்ளது. நாமெல்லாம் காலத்தின் வயப்பட்டுக் கிடந்து மூப்பு அடைவதனால்  " வயம் > வய > வயது"  என்பது எவ்வளவு பொருத்தமான அமைப்பு.

வயது என்ற கால ஓட்டத்தைப் பற்றி நாமெதுவும் செய்ய முடிவதில்லை. ஊட்டச் சத்து, உயிர்ச் சத்து என்று இருக்கும் எதைத் தின்றாலும் காலம் ஓடிக்கொண்டு நம்மையும் அதில் இழுத்துக்கொண்டு தான்  சென்றுவிடுகிறது.
கால ஓட்டத்தில் நாம் அகப்பட்டுக் கிடக்கிறோம்.  அதனால் " அகவை " என்ற இன்னொரு சொல்லும் நம்மிடம் உலவுகின்றது..

வயப்பட்டதனால்  அது வயது.
அகப்பட்டுக் கிடப்பதனால் அது அகவை. இதை மேலும் அறிய:



தேகமும் திரேகமும்


குழந்தையாய் இருந்து இளமை பெற்ற ஒருத்தி  முழுவளர்ச்சி அடைந்தபின்,  அவள் உடல் தேய்ந்து இல்லாமை அடைகிறது.   அதற்குத்   தேய் >  தேய் + கு+ அம் =  தேய்கம்,  >  தேகம்,   திரை(தல் )  > திரை  +  ஏகு + அம் >  திரேகம்,  என்று சொற்கள் வருதல்,  பொருத்தமே.  ஆன்மா  இவ்வுடலை உடுத்துக்கொண்டு உள்ளது.  அதனால் உடல்.    இது பிடிக்கவில்லையென்றால்,  உள்ளுறுப்புகள் இவ்வுடலை உடுத்துக்கொண்டுள்ளன எனினும் அமையும். இறையிருப்புக் கொள்கையருக்கும் இறைமறுப்புக் கொள்கையருக்கும் பொருந்துமாறு உடல் என்ற சொல் அமைந்திருக்கிறது. எக்கொள்கையரையும்  இணைத்துச்செல்லும் இனிமைத் தமிழின் ஏற்றம்தான் என்னே என்போம்


சரீரம்:

 உடல் என்பது திடப்பொருள் ஆனாலும் அதன் பாதி நீர்கலந்து உள்ளதே. ஆகவே உடலின் சரிபாதி ஈரம் என்னலாம்   நீர் குன்றிவிட்டால் மருத்துவமனைகளில் உடலுக்குக் குழாய்கள் மூலமாக நீரூட்டுகிறார்கள் மருத்துவர்கள்.  Dehydratiion   தொல்லைதருமே.  சரி + ஈரம் உடையதுதான் இவ்வுடல்.  ஈரம் சரியாகவும் இருக்கவேண்டும்.  இவ்வுடலைச் சரி+ ஈரம் = சரீரம் என்றதும் எத்துணைப் பொருத்தமடி தோழி!.

சற்று விரிவாக ஈண்டு  காண்பீர்.



தேகமும் பழுதும்:


பழுது என்ற சொல்லும்  உடல் நாளடைவில் பழுதடைவதை உடையதென்பதை விளக்குகிறது.  இச்சொல்லுக்கு நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காணப்படும் பொருள்விளக்கம் காண்க.  தேகம் (தேய் + கு+ அம்) என்னும் யகர ஒற்று இடைக்குறைச்சொல்லும்  பழுது என்ற சொல்லும் தமிழர் யாக்கை நிலையாமையை ஒர் வாணாட்கோட்பாடாக வைத்திருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றது.   இலக்கியத்தும் கண்டுமகிழ்க.


தட்டச்சுத் திருத்தம் பின்


 [இன்று மகுடமுகி என்னும் கொரனா நோய்நுண்மி  யாண்டும் பரவிவிட்டது. இன்று ஒரு துக்க நிகழ்வுக்கும் வீட்டிலுள்ளோர் சென்றுவந்தனர்.  எமக்கு மீண்டும் அதுபற்றிய சொல்லமைப்புகள் நினைவுக்கு வந்துவிட்டன. அதனால் இவ்வரைவு.  இதில் பழுதே புதிது.]



ஞாயிறு, 29 மார்ச், 2020

முன்னுக்கும் பின்னுக்கும்.

கட்டுரை முதலியன எழுதுங்கால்  முன்னுக்கு, பின்னுக்கு என்று எழுதுவதில்லை.   வகுப்பு வாத்தியார் பார்ப்பதற்காக எழுதிய கட்டுரையிலும் " முயற்சி செய்து ஒவ்வொருவரும் முன்னுக்கு வரவேண்டும்" எழுதினால், அவர் முன்னுக்கு என்ற பதத்தின் மேல் ஒரு வட்டம் போட்டு, இது பேச்சுமொழிச் சொல் என்று கூறி அவ்வாறு எழுதுதல் கூடாது என்று அறிவுறுத்துவார்.

மாணவனும் தான் செய்தது தவறு என்று " அறிந்து" கொள்வான்.

மூச்சை நிறுத்தும்போது எழுப்பும் ஒலியை முக்குதல் என்பர். எப்படி அமைந்தது இச்சொல்?    மு என்பது முன் இடம் குறிக்கும் ஓர் அடிச்சொல்.
கு என்பது சேர்தல் குறிக்கும் சொல். இன்று பெரிதும் உருபாக வழங்குவது.

முக்கு என்பது முன்னிடம் கொண்டுவா என்று சொல்வதாகும்.

தொடர்பினைக் காட்ட,  முன் +கு என்று எழுதி,   முன் கு >  முற்கு என்ற காட்டுவதே சரியாகும்.  முற்கு என்பது பின்னர் முக்கு ஆனதென உரைப்பதே விளக்கும் எளிய வழியாகும்.

முன்னுக்கு என்ற உருபேற்ற சொல்லுக்கும்  முற்கு என்ற சொல்லுக்கும் அடிப்படையில் சொற்புனைவு  வேறுபாடாவது ஒன்றுமில்லை.   வாத்தியார் முன்னுக்கு என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும்,  முற்கு என்று அமைந்து பின்னொரு அம் விகுதிபெற்று  "முற்கம்" என்றாகி  மொழியில் இடம்பிடித்துவிட்ட சொல்லுக்கு அவரென்ன எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறார்?
முற்கம் > முக்கம் என்பது ஒலி  குறிக்கும் சொல்.

இன்னொரு பதத்திலும் மு என்ற அடிச்சொல்லும் சேர்விடம் குறிக்கும்  கு என்ற துணுக்குச்சொல்லும் இணைந்து இறுதியில் ஓர் அம் விகுதியையும் இட்டுக்கொண்டு சொல்லமைப்பைச் செய்துள்ளது காண்க. அது மு+ கு+ அம் = முகம் என்ற சொல்லே.  முக்கம் என்ற சொல்லிலும் இம்மூன்றுமே  இணைந்துள்ளன என்றாலும் ஒன்றில் ககர ஒற்றுச் சந்தி எழுத்து வந்துள்ளது; இன்னொன்றில் சந்தி இல்லை. இவ்வாறு ஒன்றில் சந்தி வைத்தும் இன்னொன்றில் அஃது இல்லாமலும் ஆக,  இருசொற்களைத் தோற்றுவித்துள்ளமை ஒரு சீரிய அமைப்புத்திறனே ஆகும்.  இத்திறன் மொழியில் வளர்நாட்களிலேயே நன்கு  வெளிப்பட்டுள்ளது பல சொல்லமைவுகளில் காணலாம்.  எடுத்துக்காட்டுக்கு ஒன்று:   அறு + அம் = அறம்.   அறு+ அம் = அற்றம். இவை இருவேறு பொருண்மைகளை உணர்த்த முன் நிறுத்தப்பட்ட சொற்கள் ஆகுதல் காண்பீர்.

இவ்வாறாக, முன் உள்ளதாகிய முகம் என்னும் சினைப்பெயர் ,  மு+ கு +  அம் = முகமென்றே வந்ததல்லால் முக்கம் என்று வந்திலது அறிக.

முன் என்ற சொல்லிற் போலவே,  பின் என்ற சொல்லிலும் அமைப்புத் திறத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.   பின்+ பு =  பின்பு என்றும் இதனின் பேதமாக பின்+ பு + அம் =  பிம்பம் என்றும் வந்துள்ளமை அறிக. இதற்குக்  காரணமும் கூறுதல் கூடுவதே.  பின்பு என்பதிற் பின்மைக் கருத்து வெளிப்பட்டு நிற்றல் வேண்டும்.  பிம்பம் என்பதில் அக்கருத்து உள்ளுறைவாக மட்டுமிருந்தால் போதுமானதாகும். நிலவுக்குப் பின்னால் என்று யாரும் சொல்வதில்லை,  நிலா கோட்டை கட்டியுள்ளது என்று சிற்றூரார் கூறுவதிலிருந்து இதன் சொல்லமைப்புப் பின்மைக் கருத்து அடியிற் படுத்துவிட்டது.

இவ்வாறு சொல்லாக்க நுட்பங்களை அறிந்திடில் தமிழினிமை தக்கவாறு பளிச்சிடுமென்றறிக.

சொல்லமைப்புக் கருத்து பின்புலத்தில் ஒடுங்கிவிடில் அது நிகழ்ந்த சொல்லைத் திரிசொல்லெனலே தகும்.

இப்போது முன்னுக்கு என்ற உருபேற்ற வழக்குச்சொல்லை மட்டும் வைத்துச் சொல்லமைப்போம்.

முன்னுக்கு
மு என்பதும் முன் என்பதும் ஒரே சொல்லின் இரு வடிவங்கள்.
முன்னு என்பதில்  னு என்பது:    0ன்  என்பது சந்தி. உ என்பது சாரியை.
க்கு என்பதில் க் என்பது சந்தி;  கு என்பது  இடம் அல்லது சேர்விடம்.
ஆகவே அடிப்படை உள்ளிருப்புகள்  மு என்பதும்  கு என்பதும். மற்றவை தள்ளுபடி,
மு + கு,
இப்போது அம் விகுதி சேர்த்துச் சொல்லாக்கம் நிகழ்த்துக.
மு + கு + அம் =  முகம்  ஆயிற்று.
முகம் என்றால் முன்னில் அல்லது முன்னுக்கு உள்ள உறுப்பு என்பதே.
இன்னொரு வகையாகச் சொல்லவேண்டின்
முகம் என்றால் முன்னுக்கு.
முன்னுக்கு என்றால் அது முகம், ஆனால் முன்னுக்கு உள்ள பிறவும் குறிக்கும்

முகம் என்பதை முன்னுக்கு என்பதினின்று அமைத்ததில் முன்னுக்கு உள்ள ஓர் உறுப்புக்குச் சிறப்பான பெயர் வைத்தோம்.
மூஞ்சி என்பது முன் + சி=  மூஞ்சி.  முதனிலை நீண்டு சொல் அமைந்தது.  சி என்பது விகுதி.  இடப்பெயரினின்றும் தோன்றிய ஒரு சினைப்பெயர்.

தட்டச்சு சரிபார்ப்பு பின்,