வியாழன், 2 மே, 2019

பிடரி

இன்று பிடரி என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது இரு சொற்களால்   அமைந்த ஒரு கூட்டுச்சொல். அந்த இருசொற்களாவன:  பிடு என்பதும் அரி என்பதுமாம்.

பிடு என்பது ஒரு வினைச்சொல்.  இதன் பொருள் வேறாக்கி எடுப்பது என்பதே.

"கோயிலில் கிட்டிய வடையைப் பிட்டு  அவளுடன் பகிர்ந்துகொண்டேன்" என்ற வாக்கியத்தில் பிட்டு என்ற வினை எச்சம் பிடு என்ற வினையினின்று வந்தது ஆகும்.

பிடு > பிட்டு ;  இது கெடு > கெட்டு,   விடு > விட்டு என்பவை போல.

சில விலங்குகட்குப் பிடரி என்பது உடலினின்று பிட்டுத் தூக்கியது போல எழுந்து நிற்பது ஆகும் . இது கழுத்தின் பின்புறம்.  இவ்வாறு மேலெழுச்சி இல்லாத  விலங்குகட்கும் மனிதனுக்கும் இந்தச் சொல் பயன்பட்டது.  இதற்குக் காரணம் சிறப்புப் பொருளில் அமைவு கண்ட இச்சொல் பிற்காலத்து தன் சிறப்பை இழந்து பொதுப் பொருளில் வழங்கியதே  ஆகும்.

கழுத்து என்பது உடல்போலும் அகலமின்றி அருகிய பகுதியே ஆகும்.  இது நன்றாகத் தோன்றுமாறு  அருகுதல்:   அரு >  அரி ( அரு + இ )   என்ற சொல்லும் இணைக்கப்பட்டது.

பிடு +  அரி =  பிடரி.

பீடம் என்ற சொல்லும் இவ்வாறு ஒரு மேலெழுந்த பகுதியைக் குறிப்பதுவே  ஆகும்,   பிடு+ அம் = பீடம்,  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  பீடு என்பதும் இவ்வாறு பிட்டெழுந்த நிலையையே குறிக்கும்,






செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சிங்குதல் என்ற சொல் அமைதல்.

சிங்கிவரும் விலங்கு சிங்கு+அம் = சிங்கம் என்பது கண்டோம்.  இச் சிங்குதல் என்னும் கருத்து அரிமா என்பதிலும் உள்ளுறைந்து அமைந்து கிடக்கின்றதென்பது ஓர் இடுகைக்கு முன் தானே கண்டோம். அதனால் நம் நேயர்கள் இதனை மறந்திருத்தலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

சிங்குதல் என்ற வினைச்சொல் இன்னும் நம் அகரவரிசைகளில் காணப்படுகின்றது.  சொல்விளைந்த வினைச்சொல் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழிக்குரியதே அதனின்று பிறந்ததாக அறியப்படும் பெயர்ச்சொல்லும் என்பது பிற ஆய்வாளர்களாலும் ஒப்பப் பட்டதே  ஆகும்.  அரிமா என்பதும் அதே பொருளுடைத்தாதல் அறிக.  அதற்கு இன்னொரு சொல் தேவைப்பட்ட ஞான்று அதே பொருளில் அதனை அமைத்தது ஒரு சிந்தனைச் சிக்கனமே ஆகுமென்பதை அறிந்தின்புறுவீர்.

இனிச் சிங்குதல் என்ற வினைச்சொல்லை ஆய்வோம்.

சிறுகுதல் > (சிகுதல்) > சிங்குதல் என்றமைந்ததே இச்சொல் ஆகும்.

இவ்வாய்வில் வழக்கொழிந்த வடிவங்களையும் கண்டெடுக்கலாம்.  அவை சிகுதல், சிறுங்குதல்.

ஒன்று இன்னொன்றில் மாட்டிக்கொண்டு ( எ-டு: நூல், தைக்கும்போது ) இரண்டு ஒன்றாகி எண்ணிக்கை குறைதலும் சிங்குதலே ஆம்.  இது சிக்குதல் என்ற சொல்லினைப் பிறப்பித்தது.

இதனை அறியத் தொடங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

தொடு >  தொடர்.
தொடு > தொடகு ( கன்னடம் ) > தொடங்கு (தமிழ்).

இதனுடன் இலகு> இலங்கு என்ற தமிழ் வடிவங்களையும் ஒப்பீடு செய்யுங்கள்.

நடுவில் ஒரு ஙகர ஒற்றினைப் பெற்றுச் சொல் விரிதல் தமிழிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் காணப்படுதாகும்.

பகு என்ற வினைச்சொல் ஒரு ஙகர ஒற்று ப் பெற்று விரிந்து பெயராதலும் அறிக.  பகு> பங்கு.  பகுக்கப்பட்ட ஒரு பகுதியே பங்கு.

தகுதி உடையாரே தங்குவர்; தகுதி இல்லார் வெளியேறுவர். இது உலக இயல்பு.

தகு > தங்கு  என்ற சொற்களின் தொடர்பும் அறிக.

அ என்ற சுட்டடி ஓரெழுத்து ஒருசொல் கு என்ற சேர்விடம் குறிக்கும் உருபினை இறுதிநிலையாகப் பெற்று,  அ+ கு =  அங்கு என்று புணர்ச்சித் திரிபு அடைதலும் இதன் இயல்பைக் கோடிகாட்டுவதே.  கு என்பது ஈண்டு உருபாக வராமல் ஒரு விகுதியாய் நின்றது.

சொல் மிகுதற்குத் துணையாவதே விகுதி:  மிகுதி> விகுதி. இது இறுதிநிலை எனவும் படும்.

சிறு > சிறுகு ( வினை)
சிறு > சிறுகு > சிறுங்கு ( இது இடைமிகை).
சிறுங்கு > சிங்கு   ( இது இடைக்குறை).

இத்தகைய திரிபுகளும் வழக்கொழிவும் நடைபெறக் காலம் சென்றிருக்கும். சில இடைவடிவங்கள் இல்லாதொழிதலும் இயல்பே.

பிழை காணின் பின் திருத்தம்,
சில திருத்தமும் சில சேர்க்கையும் செய்யப்பட்டன:  1.5.2019

நிலைபெற்றவை: நிலம் முதல் நிறம் வரை

நிலம், நிலவு என்ற சொற்கள்  "நில்" என்ற சொல்லினடியாகப் பிறந்தவை என்பதை முன் சில அறிஞர்கள்  அறிவித்திருந்தனர்.  நிலம் என்பது மனிதனும் ஏனைப் பொருட்களும் "நிற்பதற்குரிய இடம்" என்பதே பொதிந்த பொருளாம்.  பண்டைத் தமிழனோ நிலவும் நிலம்போல நிற்கும் கோள் என்றே கருதினான்.  அதனால் அதையும் நில்> நிலா என்று அறிந்து சொல்லை அமைத்தான்.  அதாவது வானத்தில் நிலை கொண்டிருக்கும்  கோள்களான   சூரியன், நிலவு  ஆகும் இவை ஏன் " உதயம்" ஆகின்றன,  ஏன் மறைகின்றன என்பவற்றை  அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விளக்க இன்னும் ஒரு கலிலியோ பிறந்துவிடவில்லை.

நில் > நில் + அம் > நிலம்    நிற்பதாகிய நிலம். மண்.

நில் > நிலா.  இதில் ஆ என்ற இறுதி ஒரு விகுதி ஆகும்.

ஆ என்ற விகுதி பெற்ற வேறு சொற்கள்:

பல் > பலா  :   பல சுளைகள் உள்ள ஒரு பெரிய பழம் ,  அதைத் தரும் ஒரு மரம் அதன் உறுப்புகள்.

கல் >  கலா  .  இதன் பொருள் கலை.  இது ஒரு தமிழ்ச் சொல் என்பதை அறிந்து கூறினார் பேராசிரியர் அனவரத விநாயம்பிள்ளை.  கல்லுதல் :  தோண்டுதல். கல் = கற்றுக்கொள்ளுதல்.  இளமையில் கல் என்றார் ஒளவைப்பாட்டி.

இனி இன்னொரு முடிபையும் சொல்லக்கடவது.  அதாவது:

மன் :   நிலைபெற்றது.

மன் >  மண் என்பது திரிந்தமைந்தது.  இரு சுழி எழுத்து முச்சுழி எழுத்தினும் முந்தியது ஆகும்.  இவற்றின் பொருளமைதி ஒப்புமை காண்க.

இனி இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.  இப்புவியில் நிலையான பொருள்களில் நீரும் ஒன்றாகும்.   இதுவும் நில் என்ற வினையடிப் பிறந்த சொல்லே.

நில் > நீல் > நீர்.   முதனிலை என்ற முதலெழுத்து நீண்டது. லகரம் ரகரமாவது தமிழில் மட்டுமன்று பிற சில மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு திரிபு ஆகும்.  இத்தகு திரிபு விளைந்த சொற்களைப் பழ இடுகைகளில் காண்க.

நில் > நீல் > நீலம்.  வானத்தின் கருமையே நிலையானது ஆகும்.  அது நிற்பது என்று சொன்னால் அது மாறாதது ஆகும்.   மாறாத இந்த நிறம் நீலம், ஓர் அடிப்படை நிறம்.

நில் > நிறு > நிறம்.   நிறம் என்னும் வண்ணம் நிற்பது.  அது பொருளில் நிற்கின்றது,  இலையில் பச்சை நிறம் போலும்.

இங்கு காணப்பட்ட சில பொருள்கள் வேறு இடுகைகளில் விளக்கமும் ஒப்புமையும் தெளிவுறுத்துவன  ஆகும்.  அறிந்து மகிழ்க.


 இது மீள்பார்வை பெறும்.