வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கூகிள் கூடுதலால் பெற்ற கடந்தகாலப் பயன்`கள்

கூகிள் நிறுவனம் கூடுதல் அச்சேவை
பாகினது பாத்திரம் ஆங்குதர ---- ஆகினவே
உட்புகுந்  துள்ளன ஓங்க நுகர்தலும்
கட்பகிர்ந்  தன்ன கருத்துகள்---- கொட்புறலும்
நற்பயன் பெற்றோமந் நாள்.

பெற்ற பயன் நினைவு கொள்ளுதல் பற்றிய கவி.
வெண்பா. நேரிசை.


பொருள் ( உரை)


கூகிள் நிறுவனம் கூடுதல் சேவை -  கூகிள் ப்ளஸ்
என்ற மென்பொருட் சேவை;
பாகினது -  காய்ச்சின பாகினுடைய
பாத்திரம் -  உண்கலம்
ஆங்கு தர -  விரைவாகத் தேடிக் கொணர்ந்து கொடுக்க;
உட்புகுந்து -  வலைத் தளத்தினுள் நுழைந்து;
உள்ளன ஓங்க நுகர்தலும் -  இருக்கும் இடுகைகளை
விரிவாக அனுபவித்தலும்;
கட் பகிர்ந்தன்ன  --  கண்களே பாகுபடுத்தி எடுத்துக்கொள்ளுதல்
போலவே;
கருத்துகள்:  எண்ணி எழுதிய பலவும்;
கொட்பு உறலும் -   மேற்கொள்ளுதல் மிகுதலும் ஆன;
நற்பயன் -  நன்மைகள் விளைந்திடுதலை;
பெற்றோம் அந்நாள்:  முன்னாளில் பெற்றும் மகிழ்ந்தோம் அல்லோமோ?
பெற்றோம் என்றபடி.

கூகிள் சேவை,  பாகுப் பாத்திரம் கொணர்ந்தளித்தலுக்கு உவமையாக
இங்கு சொல்லப்பட்டது.

மறுபார்வை செய்யப்பெறும்.



அரிமா சிங்கம் குறைந்துவருதல் பொருண்மை

அரிமா சிங்கம் என்ற இரு சொற்களையும் இன்று நுணுக்கமாக நோக்குவோம்.

அரிமா என்ற சொல்லின்  பொருள் அரிதல் - அரித்தல் ( தன்வினை - பிறவினை ) என்ற வினையடிப்படையில் தோன்றிய தென்று அறிஞர் கூறியதுண்டு.  சிற்றுயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இல்லாதனவாக்கும் கொடிய வலிமை பொருந்திய விலங்கு என்பது இதன் பொருள் என்பர்.

இஃது சரியான சொல்லாய்வு என்று ஒப்புவோம்.  நீருள் பாசியைச் சிறிது சிறிதாக அரித்தெடுத்தல் போல உயிர்களை அது  ஒழித்துவிடுகிறது  என்பது அருமையான கருத்தே.

அரி என்ற வினைக்கும் அப்பால் சென்று அதனடியைக் காணின்,  அது அரு என்ற வடிவமே என்பது புலப்படும்.

அரு >  அருமை.
அரு >  அருகு >  அருகுதல்.   எண்ணிக்கையில் குறைவாதல் இதன் பொருள்.
அரு > அரி  ( அரியது;  குறைந்த எண்ணிக்கையே உடையது )

ஓர் இடத்திற்கும், இன்னோர் இடத்திற்கும் உள்ள இடைத் தொலைவு சுருங்குதலும் அருகுதலே ஆதலின்,   " அருகில் ( உள்ளது)" என்ற வழக்கு உண்டாயிற்று.

காணற்கு அரியனவான இவ்விலங்குகளை அரிமாக்கள் என்று பெயரிட்டது
அற்றை நிலையுடன் மிகப் பொருந்தியதாகும்.  இன்று அருகிவரும் விலங்குகளைக் காப்பதற்குப் பல நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல அரசுகளும் எடுத்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.  அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன என்று தமிழன் அன்றே கவலைப் பட்டிருக்கின்றான். 

சிங்குதல் என்பதும் அழிதல், தேய்தல் , மீந்துபோதல் என்பன போலும் பல பொருளுடைய சொல்லே.  சிங்கம் பல நாடுகளில் இல்லை. ஆகவே அழிந்துவரும் ஓர் விலங்கினம் அது.  மனிதனால் பாதுகாக்கப்படவேண்டிய இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றது.  அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு உள்ளது.  

அருகிவரும் விலங்கு. அழிந்துவிடுமோ என்ற அஞ்சத் தக்க விலங்கு. சிங்கிக் கொண்டு வரும்  விலங்கு சிங்கம்.

அரு+ இ = அரி > அரிமா.
சிங்கு + அம் =  சிங்கம்.

விலங்குகளின் அரசனுக்கு இந்தக் கதியா? 

சிங்கம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொல்.  சிங்கு என்ற வினையின் அடியாகத் தோன்றிய பெயர்.  மேலும் எங்கும் பரவித் தமிழுக்கும் பெருமை சேர்த்த சொல்.

சிங்கிப்போன சிங்கத்தையும் அருகிப்போன அரிமாவையும் கண்டு சொல்லுக்கு இன்புற்றோம், கருத்தடிப்படை கண்டு கவலைகொண்டோம், பொருளடிப்படை ஒன்றுதான்.


பழமொழி:  பன்றி பத்துக்குட்டி சிங்கம் ஒற்றைக் குட்டி. குறைவுக்கு இதுவும் காரணமாகுமோ?

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிராந்தியம்

இன்று பிராந்தியம் என்ற சொல்லை ஆய்வோம்.

இந்தத் திரிசொல் தமிழ்ச் சொல் போல் தெரிகிறதா என்றால் இல்லை. செந்தமிழ் ஒலிமரபை இச்சொல் வெளிப்படுத்தவில்லை.

ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது அவனுடைய  நாடு எனப்படும். அவனுடைய நாட்டைச் சுற்றியுள்ளனவும் பதிலரையர்களை  ஆட்சியர்களாகக் கொண்டவையுமான மற்ற நிலப்பகுதிகள் "பிராந்தியங்கள்" எனப்பட்டன.

இந்தச் சுற்றுவட்ட நிலப்பகுதிகளை இந்த மன்னன் கைப்பற்றி அவற்றினின்று நீங்கியவனாய் அந்த ஆட்சியர்களிடமிருந்து இவன் பொருளைப் பெற்றுக்கொண்டபடியால் அவையும் இவனின் நேரல்லாத ஆளுகைக்கு உட்பட்டவையே ஆயின.

இந்த மன்னனின் மக்கள் அந்தச் சுற்றுவட்டங்களை " பிறவாம் தேயம்" என்றுதான் சொல்லமுடிந்தது.  பிரிட்டீஷ் மக்கள் இந்தியா முதலிய நாடுகளைக் "காலனி"கள்  ( குடியேற்றங்கள் )  என்று கூறியது போலவே யாம்.

பிறவாம்தேயம் >  பிறாந்தீயம் >  பிராந்தியம்.

பிறவாம் :   பிராந்   ( ற  - ர;   வா: கெட்டது;   அல்லது விலகிற்று.    ம் >ந்  புணர்ச்சித் திரிபு. )
தேயம் :  தீயம் > தியம். >  த்யம்   ஏகார ஈகார மாற்றம்.

எலாம் திரிபுமயமே.

சங்க காலத்தில் தேயம் என்ற சொல் தேம் என்று இருந்தது.

தேம் >  தேயம் ( ய என்பது எழுத்துப்பேறு )  >  தேசம்  ( ய ச போலி ) > தேஷ்.

பிற என்பது சொல்லில் பிரா என்று மாறுவது:  எடுத்துக்காட்டுகள்:

பிற அணி >  பிறாணி > பிராணி. ( மனிதரல்லாத மற்ற அணி உயிர்கள் ).
பிராணியின் உள்ளிருப்பது:  பிராணன்  > பிராணா.

பிறகு ஆர் அம் =  பிரகாரம்.
பின்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில்  சுற்றியுள்ள இடம்.  ஆர்தல்: சுற்றியிருத்தல். மூலத்தானத்தின் பின்னர் சுற்றுவட்டம் முதன்மையான இடம்.
ஒரு பூசாரி கோவிலின் மூலத்தானத்திலிருந்து வெளிப்பட்டுப் பின் பிரகாரத்துக்கு வந்து அப்புறம் வெளியிற் செல்லுகின்றனன்.

புறக்கட்டு:    புற + கு + ஆர் + அம் = புறகாரம் > பிரகாரம் எனினுமாம்.

புறம் : புற (எச்சச்சொல்.)

இவ்வளவுதான். மீண்டும் கண்டுரையாடுவோம்.