புதன், 3 ஏப்ரல், 2019

கலியாணம் விவாகம் ரத்து

இன்று வீடு என்ற சொல்லுக்கும் அகம் என்ற சொல்லுக்கும் ஒரு ஒப்பீடு எழுதலாம் என்று எண்ணினாலும் கல்யாணம் என்ற சொல் வந்து குறுக்கிட்டு என்னை எழுதென்றது. அதற்கு ஒப்பி இச்சொல்லைப் பற்றி இன்று சிந்திக்கின்றோம். ஒப்பீட்டு ஆய்வை இன்னொரு நாளில் கவனிப்போம்.

கல்யாணம் என்பது உண்மையில் கலியாணமே ஆகும். இதற்குக் காரணம் கல்லுக்கும் கல்யாணத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இச்சொல் பல இந்திய மொழிகளில் வழங்கி வருகிறது. அங்கெல்லாம் அது கல் என்றுதான் தொடங்குகிறது. நாம் கலியில் தொடங்குவதானது பிற மொழி வழக்குகளுக்கெல்லாம் இசையாமல் நம்மைக் கல்லாக்கிக் கொண்டு தொடங்குவதுபோலச் சிலரால் உணரப்படுதலும் இயல்பே ஆகும்.

தமிழ்ச்சொற்கள் பிற மாநிலங்கட்குச் செல்லுங்கால் இவ்வாறு சுருக்கப்படுதல் இயல்பு. கைலாசம் என்பதை கைலாஷ் என்றுதான் பிற மொழிகள் சுருக்கும். சுருங்கிய நிலையில் வந்து சேர்ந்த சொற்களை விரித்துப் பலுக்குதலும் காணப்படுவதே. எடுத்துக்காட்டு: ப்ரட் என்ற ஆங்கிலச் சொல் பிரட்டு என்று தமிழரிடை மாறுவது காண்க. எக் (முட்டை) என்பது எக்கு என்று ஒலிப்புறுகிறது. இதை நாம் மறந்துவிடவில்லை.

கல்யாணம் கலியாணம் என்பவற்றை விளக்கி யாம் எழுதியது
இப்போது கிட்டவில்லை.

இப்போது புதிதாகவே சிந்திப்போம்.

சங்க காலத்தின் பின்பு பெண்கள்மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்கள் பலர் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுதல் கூடுதலாக நிகழ்ந்தமையால் இவை விதிக்கப்படவேண்டி நேர்ந்தது.
கலி என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். ஆணுடன் பழக அனுமதி பெறும் சடங்கே கலி + ஆண் + அம் ஆகும். சிற்றூரார் இன்றும் கலியாணம் என்றே சொல்வர். ஆணுடன் சேரும் நிகழ்வு என்பதே கலியாணம் என்பதன் பொருள். ஆண் என்பது யாண் என்று வருவது யகர உடம்படு மெய். அம் விகுதியாகும், இவ்வாறு அறியவே இது தமிழ்ச்சொல் ஆகிறது.

வாழ்க்கை விழுமிய நிலையை அடையத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இதனடிப்படையில் எழுந்தது விவாகம் என்ற சொல்: வி+ வா + ஆகு + அம் : விவாகம், விழுமிய வாழ்வு ஆகும் தொடக்கச் சடங்கு. இது ஒரு சொற்சுருக்கப் புனைவு ஆகும். இரத்து என்பது இறத்து: இறு+ + து: இறத்து > இரத்து > ரத்து, இறுதல்: முடிதல்; இறுதி என்ற சொல்லும் இதில் வந்ததே. ஆக விவாக ரத்து என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சேனை

சேனை என்னும் சொல் முன்னர் விளக்கப்பட்டது.  அதை இங்குக் காணலாம்:


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html

 சேனை என்பது பல்வேறு பொருளுடைய சொல் என்பது இங்குத் தெளிவாக உள்ளது.

ஐயப்பாடுகள் யாவையேனும் இல்லாவிடின்  உங்கள் சிறுசேனைகளையும் கூட்டிவைத்துச் சொல்லிக்கொடுக்கலாம்.

சிறு சேனைகள் :  உங்கள் குழந்தைகள்.

சிறிசேனா என்பவர் இலங்கை அதிபர்.   அவர்பெயரும் இச்சொல்லுடன் தொடர்புபட்டிருப்பது மகிழ்வு தருவதே.

வீதியில் போய்வந்து கொண்டிருப்பவர்களும் சேனை எனப்படுவர்.  பலர் சேர்ந்த கூட்டமே சேனை.

சேர் >  சேர்நர்  .  சேர்நன்.

சேர்ந + ஐ =  சேர்நை >  சேனை.  என்று இலக்கணப்படி செல்லும்போதும் இதை இப்படி அமைக்க ஒரு கருத்து வாக்கியம் உதவி இருக்கக் கூடுமென்பதையும் மறுத்தற்கில்லை.

விளக்கம்:

வாக்கியம்:  அனைவரும் சேர்ந்து  செல்கிறார்கள்.

சேர்  ( சேர்ந்து )
அனை  (அனைவரும்  )

சேர் + அனை  =  சே +னை  =   சேனை என்று அழகாக சொல் வடிந்து வருகிறது.
என்றாலும் தமிழிலக்கண மரபு நோக்கி  சேர்ந் + ஐ  என்று சொல்வதும் பின் ரகர ஒற்று  கெடுதலும் ஐ கார விகுதி காட்டுதலும் பொருத்தமாக இருக்கும்.

இதனைப் பஜனை என்ற சொல்லுடன் ஒப்புவைக்கலாம்.

பாடு + அனைவரும்.
அனைவரும் பாடுவதுதான் பஜனை.  வேறு என்ன பஜனை.  சில மாதிரி பாட்டுக்களைத்தாம்  பாடுவார்கள். இது பாடல் தேர்வு முறையன்றி இதனால் ஒன்றும் சொல் அமையவில்லை.

டகர வருக்கத்துக்கு ஜ, ஷ முதலியன மாற்றீடாக வரும்.

பாடு + அனை >  பாஜ் + அனை >  பஜனை.

நெடில் குறில் குறுக்கம்.  பாடனை > படனை > பஜனை.
அனைவரும் என்பதில் அனை என்பதை விகுதியாக்குதல்.

அயற்சொற்களும் இப்படிக் குறுகும்:

ராஜா >>  ரஜினி. ( பெண் ).  ரா> ர.    அப்புறம் ஜ்+ இன் + இ.

தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல் உள்ள உணவு மூச்சுக் குழல்.
தோ > தொ குறுக்கம்.

பாடனை(வரும்)  என்பது குறுகி பஜனை என்று வந்தாலும் சேனை என்பது குறுக வழியில்லை.  குறுகிச் செனை என்பது நன்றாக இல்லை.

அறிந்து மகிழ்வீர்.





  
 

ஞாயிறு, 31 மார்ச், 2019

ரொக்கமும் ரோடாவும் (ரோதையும்)

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ "வெற்றுரு"வோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவன் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது? உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.

பின்னாளில் இது  காசோலையாக இல்லாமல் பணத்தாள்களாக இருத்தல் என்ற பொருளைத் தழுவியது. இதை ஆங்கிலத்தில் "கேஷ்" என்பர்.  ஆயின் "கேஷ்" என்பதோ காசு என்பதன் திரிபு ஆகும். காசினெட்டு என்ற மலையாள வழக்கும்  "காஷியுனட்"  என்று திரிந்தது காண்க.


அதனுடன் இன்று ரோடா அல்லது ரோதை என்பதையும் நுணுக்கி அறிவோம்.

உருண்டு ஓடுவது ரோதை அல்லது ரோடா.

இது எப்படி அமைந்தது என்றால்:

உருள் + ஓடா.
=  ரு + ஓடா    ( உகரமும் ளகர ஒற்றும் கெட்டன).
=  ரோடா.

இது அருமையாய் அமைந்த சொல்.  எடுத்தெறிந்தது இரண்டு எழுத்துக்களைத்தாம்,. ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது.

ஆ என்பது ஒரு சொல்லிறுதி.    எடுத்துக்காட்டு:  வில் > விலா ( வில்போல் வளைந்த எலும்புள்ள பகுதி ).  பல் > பலா ( பல பழங்கள்  பதிவான ஒரு பொதிவினைக் காய்க்கும் மரம் ). உல் > உலா  ( வளைந்து செல்லும் பயணம்).
கடு > கடா:  ( கடுமை சார்ந்த மாட்டுவகை, ஆண்மாடு;  கேள்வி).

இர் > இரா (  இரவு)  ( ஆ விகுதி).
இர் > இருள்  (  உள் விகுதி)

உல் > உரு> உருள் > உருளை   ( வளைவு).

ரோட்டா, ரோட்டேட் முதலிய இந்தோ ஐரோப்பியச் சொற்கள் திராவிட மூலத்தன.

அமைதியுடன் ஆய்ந்தமைக்கு நன்றி..

பிழைகள் புகின் செப்பம் பெறும். 
ஒரு சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பெற்றன: 2.4.2019