வெள்ளி, 22 மார்ச், 2019

இடுகைகள் சேமிப்பு - பதிவிறக்கம்.

கூகிள் + என்பதில் உள்ள நம் இடுகைகள் அனைத்தையும் வேறிடத்திற்கு
மாற்றவேண்டியுள்ள படியால் இந்த மாத இறுதியில் வேலையதிகமாய் இருக்கும். இயன்றவரை நம் நேயர்களையும் வலைப்பூவின் மூலம் சந்திக்க முயற்சி செய்வோம். இயல்வில்லை என்றால் மன்னிக்க வேண்டும்.

சிவமாலா வலைப்பூவகம் வழக்கம்போல் நேயர்களுக்குக்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இறைஞ்சுதலும் இலஞ்சமும்.

இலஞ்சம் என்ற சொல்லைப் பார்ப்போம்

இதை "ரான்ஸம் "  என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு
என்று சிலர் கூறியதுண்டு.  ஒருவனைப் பிடித்து
வைத்துக்கொண்டு அவனை விடுவிக்க வேண்டப்படும்
தொகையே இவ்வாங்கிலச் சொல்லால் குறிக்கப்படுகிறது.

ஆனால் தொகை தரப்படும் ஆள்கடத்தல் கைது முதலிய
 இல்லாத  நிலைமைகளே பெரும்பாலும்  இலஞ்சம் என்ற
 சொல்லால் குறிக்கப் படுகிறது.  ஆகவே ரான்சம் என்பது
இலஞ்சம் என்று  திரிந்திட வாய்ப்பில்லை. கைதானவனை
விடுவிக்கவும் சில வேளைகளில் இது நடைபெறும் என்றாலும்
இலஞ்சத்தில் ஒரு சிறு பகுதியே அதுவாகும். மேலும் ரான்சம்
என்பதில் ஆளைப் பிடித்துவைத்திருப்போர் அதிகாரம்
இல்லாதவர்கள். இதுவும் ஒரு பொருள்குறுக்கீடாகிறது.

பணம் வாங்கிக்கொண்டு இடையில் நிற்பவன் பிறருக்காக
இறைஞ்சுதல்  நாளும்  பல இடங்களில் நடைபெறுகிறது.
பெரும்பாலான பெரிய அதிகாரிகள் நேரடியாக
வாங்குவதில்லை. கீழதிகாரியே வந்து இறைஞ்சுவான்.
ஆதலின் இப்படிப் பட்டவனைக் குறிக்கவே இறைஞ்சு
 என்ற சொல்லிலிருந்து இலஞ்சம் என்ற சொல்
அமைந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரகரம் றகரம் முதலியவை லகரமாகத் திரியும்.  றை என்ற
ஐகாரம் கலந்த எழுத்தும் றகரமாதல் உண்டு. இது ஐகாரக்
குறுக்கம் எனப்படும்.  அகரம் இகரம் முதலிய தலையெழுத்து
நீங்கிய சொற்களும் பல. ஆதலின் :

இறைஞ்சு  >  இலஞ்சு > இலஞ்சம் > லஞ்சம்.

என்பதே சரியானதாகும்.

இறை என்பது பணம் செலுத்துதலையும் குறிக்கும்.  இறைஞ்சு
 என்பது வேண்டிக்கொள்வதையும் குறிக்கும்.  இதுவே ஒப்புடைய மூலச்சொல் எனக் கொள்க.  பணம் செலுத்துதல், காரியம் நடை
பெற வேண்டிக்கொள்ளுதல் இரண்டும் இலஞ்சத்தின்
உள்ளமைப்புக் கருத்துகள்.

பிழைத்திருத்தம் பின்.

வியாழன், 21 மார்ச், 2019

கர்நாடகத்தில் லஞ்ச லாவண்யம் கட்டிட வீழ்ச்சி

எவனெங்கு போனாலும் என்ன காசை
என்பைக்குள் போடென்று வாங்கும் கட்சி,
கவைக்காகாக்  குற்றங்கள் பிறர்மேல் சாட்டிக்
காலத்தை வீணாக்கும் காங்கி   ஆளும்
நவைகூடும் கர்நடமே அன்றோ அங்கே
நாட்டியெழும் கட்டிடமும் வீழ்ந்த தன்றே
சுவைதேடி வாழ்கின்றார் ஆளும் மட்டும்
சொல்வதற்கும் இல்லாத துன்பம் உண்டே.

Building collapses are frequent in India. Many firms use cheap materials and bribe officials to evade regulations, while on-site safety is lax.
Read more at https://www.channelnewsasia.com/news/asia/11-dead--50-rescued-after-india-building-collapse-11366616

பொருள்:

கவைக்கு ஆகாக் குற்றங்கள் -  பயனற்ற குற்றச்சாட்டுகள்
நவை  -  தீமைகள்
கர்நடம் :  கருநாடக மாநிலம்
நாட்டி -  அடிக்கல் நாட்டியபின்
எழும் கட்டிடம் -  கட்டப்படும் கட்டிடம்
அன்றே -  அல்லவோ
சுவைதேடி -  இன்ப வாழ்க்கைக்காக 
வாழ்கின்றார் -  வாழ்கின்றவர்.