செவ்வாய், 12 ஜூன், 2018

மா, மகா, இர்> இரு பெரிது கருமைப் பொருள்.

கருமை:

ஒளி இல்லாத விண்ணிலே இருப்பது கருமை மட்டுமே.  விண் எவ்வளவோ பெரியது.  மாணப் பெரிது.  ஆரளவில்லாதது. எங்கும் கருமை. எதிலும் கருமை. இதைத்தான் விண் என்றனர் தமிழர்.  விண் என்பது இயற்கை இருள். ஒன்றுமற்ற இடம்.  பெரிதாகிய விண், தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பெற்றது.  இது பிற்காலத்தில்   விண்ணு > விஷ்ணு ஆனது.

விண்ணில் சூரியனும் உடுக்களும் தோன்றின. ஓளி தந்தன.  சூரியன் ஒளியும் வெம்மையும் தந்து உயிர்கள் குளிரில் வாடுவதை விலக்கிற்று.  இது செவ்விய ஒளி. செம்மை சிவப்பு. செங்கதிரோன் எனப்பட்டான் சூரியன்.  விண்ணும் சூரியனும் தோற்றமளித்த காலை நாமில்லை.  ஆகையால் இவை எப்படித் தோன்றின என்பதை நாம் அறியோம்.  நாம் பிறந்த் பின் நோக்குங்கால் இவை இருக்கின்றன.

விண்ணு  -  விஷ்ணு - அகண்ட ஆகாய வெளி. கருமை அல்லது நீலம் அதன் வண்ணம்.

செங்கதிர் -  சிவப்பு - சிவம்.  ஒளி.  ஆகாயத்தில் தோன்றும் ஒளி.

இவற்றைத் தமிழர் வணங்கினர்.

இவற்றுள் மிக்க விரிவானது விண்ணு என்னும் விஷ்ணுதான்.  இது மகா விஷ்ணு எனவும் பட்டது.   மக -  பிறத்தல்.   மக -  மகன்; மகள்;  மகார் - பிள்ளைகள்; மக்கள்.   மகம் என்ற உடு அல்லது நட்சத்திரம்.  பிறந்தவற்றுள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்பது விண்ணு என்ற விஷ்ணுதான்.  இது இயற்கை.  மிகப் பெரிதும் பரிதுமாதலின் மகாவிஷ்ணு ,  (மகவிண்)  ஆனார்.
இது இயற்கையை உருவகப்படுத்தியது ஆகும்.

பிறந்தவற்றுள் விஷ்ணுவே விரிவாதலால் மக (பிறத்தல்)   என்ற சொற்கு பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   மக - பிறந்தது; மக >  மா: பெரிது; மக > மகா:  பெரிது.  

இருளே எங்கும் பரந்து கிடப்பது.  தாமேயாய் எங்கும் பரந்து கிடந்த இருள்,  பரந்தாமன் ஆனான். (தாமே எங்கும் பரந்து கிடந்த இருள் -   தாமே பரந்து > பரந்தாமன். 

(தாமம் : கயிறு.  கயிற்றால் உரலில் கட்டப்பட்டவன் என்பது தொன்ம விளக்கம்.)

சிவமென்பது இருளில் ஒளி.  ஒளியும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு எங்கு தன் கதிர்களைப் பரப்பி,  இருளை விலக்கிற்று.  ஒளி மறைந்தக்கால் இருள் கவியும்.  இருள் கப்பிக்கொள்ளும்.  இப்படி செவ்வொளி பரப்பி நிற்பது, இருள் கடிவது  சிவமே.  சே என்றாலும் சிவப்பு.  சேயோன்.  சிவப்பன். சிவந்தான். சிவன்.

எல்லாம் அழகுதான். அழகே முருகு.  முருகன் எனப்பட்டான்.

விண்ணு, சிவம். முருகு என்பன மனிதர்களல்லர்.  இருந்தாலும் அன் விகுதி கொடுத்துச் சொல்வது மொழிமரபு. அல்லது உருவகம்.

பரந்து நிற்போன் பரமன்.  விண்ணு என்னும் விஷ்ணு பரமன்; சிவம் பரமன்.

இருளே பெரிதாதலின்  இரு என்ற அடிச்சொல்லுக்கு: பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   இர்> இருள். உள் என்பது விகுதி. கடவுள், இயவுள் என்ற சொற்களிலும் உள் என்பது விகுதியே. அடிச்சொல் வினையாயினும் அன்றாயினும் வரும்.

மக என்ற அடிச்சொல் மா என்றும் திரிந்தது.  தலையெழுத்தை அடுத்து நிற்கும் ககரத்தால் தலையெழுத்து நீளும்.  பகு > பா என்று திரிந்தாற்போலும்.  பகுதி> பாதி. மிகுதி > மீதி.  இதுபோலவே மக என்பது மா ஆனது. பிறந்த விண்ணு பெரிதாதலின்,  மக என்பது மகா என்றும் திரிந்தது.  பெரிது என்பதே பொருள். பொருள் மாற்றம் ஏதுமில்லை. ஒலித்திரிபுகள்தாம்.

இரு பெரிது.  இருள் பெரிது.
மக பெரிது; மா பெரிது.  மகா பெரிது.

விண் கருமையாதலின்   மா என்பது  பெரிதென்றும் பின்னும் கருமை என்றும் இருபொருளும் தரும்  என்பதுணர்க.

மா என்பது கருமை.  அழுக்கும் கருப்பு.  ஆகையால் மா என்பதிலிருந்து ஒரு சு விகுதி சேர்ந்த சொல் உருவாகி மாசு என்று அழுக்கைக் குறித்தது.   அழுக்கு கருப்பு என்றால் கருப்பெல்லாம் அழுக்கன்று.  அழுக்கு வகைகளில் கருப்பு அழுக்கு மாசு எனப்பட்டது.

மா> மை:  கருப்பு நிறமான ஒரு பொருள்.

மை > மை+ இல்:  மயில். ( ஐகாரக்குறுக்கம்).  இல் = இடப்பெயர்.  கருப்பிடங்களை உடைய பறவை மயில்.

மை> மையில் > மயிலை.     (  மயிலைக் காளை).  மயிலைநாதன்:  மயிலை நிறத்தோனாகிய பரம்பொருள். 

இவற்றிலிருந்து விண் மா மகா இர் என்பவை உணர்க. இதில் சொல்லப்பட்டாதவை இன்னும் உள.  அவை விடப்பட்டன.




மன்மதன் ....நிறைச்சொற்களான குறைச்சொற்கள்.

ஒரு சொல்லின் எழுத்துக்களில் ஒன்றையோ இரண்டையோ சிலவற்றையோ எடுத்துவிட்டு மீதமுள்ள எழுத்துக்களைக் கொண்டு ஒரு சொல்லை அமைப்பதென்பது தமிழ் இலக்கணியர் பண்டைமுதல் அறிந்தும் பின்பற்றியும் வந்த ஓர் உத்தியே ஆகும்.  முதற்சொல்லில் எழுத்துக்கள் கெட்டிருந்தால், அச்சொல்லை குறைச்சொல் என்பர்.  சொல்லின் எப்பகுதியில் எழுத்துக்கள் கெட்டன என்பதுபற்றி ஒன்றை முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்று வகைப்படுத்துவர்.  தமிழிலக்கணியர் போற்றிய இவ்வுத்தி, பிறமொழியாரும் பின்னர் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பது யாவரும் ஒருவாறு உணர்ந்ததே ஆகும்.

மழுங்குதல் என்பதில் இடையெழுத்தாகிய ழுகரத்தை எடுத்துவிட்டால் அது மங்குதல் ஆகிவிடுகிறது.   ஒளிமழுங்குதல் >  ஒளிமங்குதல் என்ற சொல்லாட்சியில் இதனை உணர்ந்துகொள்ளலாம்.

மயங்குவது  என்பதில்  "யங்குவ" என்ற இடையில் நிற்குமெழுத்துக்களை நீக்கிவிடில் அது ம~து என்றாகி ஒரு புதிய சொல்போல் தோன்றுகிறது. மேலும் மது என்பது வேறுசொல்போலும் தோன்றும். உலகவழக்கிலும் செய்யுள்வழக்கிலும் இத்தகு குறைச்சொற்கள் நன் கு பயன்படுவனவாகும்.  இனிக்  குறைச்சொல்லை மீண்டும் விகுதி முதலியவற்றால் நீட்டித்துப் புதுச்சொற்களையும் படைத்துக்கொள்ளலாம்.  மது> மதம் என்று அம் விகுதி புணர்ந்து புதுச்சொல் ஆனது.

ஒரு கொள்கையில் ஊறி நிற்பவர்,  அதனில் நீங்காது நிற்பவரே.  "கள்ளால் மயங்குவது போலே, அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டு நிற்போம்"  என்று பற்றின் மயக்க நிலையைப் பாரதி பாடியது முற்றிலும்  ஒப்புதற்குரித்தே ஆகும்.  இத்தன்மையாலே சமயத்தை மதமென் `கின்றோம்.  மயங்குதல்:  பழம்பொருள் கலத்தல் என்பது. தன் சொந்தக் கருத்தின் நிலையினின்று திடமிழந்து நெகிழ்வுற்றுப் பிறர்கூறு நிலையில் சென்று கலத்தல்.

மதம் என்ற சொல்லின் அடிப்படைச் சொல்லமைப்புப் பொருள்:  மயக்கம் என்பதே.  மதம்: பற்றுமயக்கம்;  கொள்கைப்பிடி.

மயங்குவது என்பது மது என்று குறுக்கம்பெற்று மீண்டும்  ஒரு பு என்னும் விகுதி பெற்று மதப்பு என்று வந்து இன்னொரு சொல்லானது.  எனினும் பொருள் பெரிதும் மயக்கம் தொடர்பான நிலையிலே நின்றது. மயக்கம் மட்டுமின்றி, கொழுப்பு என்றும் செருக்கு என்றும் வழக்கில் புதிய பொருண்மை பெற்றது. மது என்பது மீண்டும் ஓர் அர் இறுதி பெற்று மதர் என்றாகி   செருக்கு, மகிழ்ச்சி , மிகுதி என்ற பொருண்மைகளையும் அடைந்தது.  இந்நிலையில் நின்றுவிடாதபடி அது ஒரு வினைச்சொல்லாகி  "  மதர்த்தல் " ஆனது.  இது செழித்தல், களித்தல் (கள்ளுண்ணுதல் ) மிகுதி என்று பொருள் விரிந்தது.

இனி மதர்ப்பு என்பதும் அமைந்தது.  மது > மதப்பு.   மது>  மதர்ப்பு.   மதர்வு என வடிவ வேறுபாடுகள் காண்க.  இன்னொன்று:  மதர்வை ஆகிற்று.

மதனா என்பது எவ்வளவு அழகிய சொல்.    மது > மது+ அன் > மதன் > மதனன். இங்கு மது + அன்+ அன் என்று அன் விகுதி இரட்டித்து மக்களை மயக்கிற்று.

எண்ணம் நிறை மதனா,  எழில்சேர் ஓவியம் நீர் மதனா, பஞ்ச பாணன் நீரே என் மதனா ---- என்றெல்லாம் கவிஞர் கண்ணதாசன் பாடலில் சொற்களைப் புகுத்தியுள்ளார்.

மதன்+  மதன் = மன்மதன் என்ற வடிவும் வழக்கில் திண்ணிய இடனுள்ளதே ஆகும்.  முதல் அசையாகிய மதன் என்பது தன் தகரத்தை இழந்து மன் என்று நின்றது.   மன்னுதல் எனில் நிலைபெறுதல் என்று இன்னொரு சொல்லுமிருப்பதால் நிலைமொழி "மன்" என்பது  நிலைபெற்ற என்று பொருள்படுமென்றும் விளக்குதல் கூடும்.

மது+ மது + ஐ  என்று புணர்த்தி,   மதுமதை ஆக்கி,  இடையில் உள்ள து எழுத்தை விலக்கி மமதை என்று முன்வைத்தால் அது இனிதாகவே உள்ளது.  ஏனை மொழிகளில்போல  மது+ மது + இ என்று புணர்த்தி மதுமதி என்றால்     மிகுந்த மயக்கம் என்றும்  மயக்கத்தைத தரும் நிலவு என்றும் இருபொருளும் தமிழால் கூறலாம்.

உன்:  முன்னிருப்பது என்னும் சுட்டடிச்சொல்.  உன் என்னும் வேற்றுமைப் பொருளிலும் வரும்.   உன் மகன் எனக்காண்க.  உன் - உன்னுதல் என்னும் வினையடியாயும் கொள்ளுதல் கூடும்.  உ என்பது முன்னுள்ளது என்று பொருள்படுவதால்  உன்+ மது+ அம்=  உன்மத்தம்  ( மயக்கத்துக்கு உள்ளான அறிவு )  எனக்காண்க.   மத்தம் என்பது மயக்கம்,  வெறி, செருக்கு, பைத்தியம், களிப்பு அல்லது கள்ளுண்ணுதல்.   வெறி முன்வருமாயின் அதுவே உன்மத்தமாகும்.  உன்னுவதெல்லாம் வெறியாகிவருதல்.

தமிழ்ச்சொற்களையே மேற்கொண்டு தமிழ் விகுதிகளையே புணர்த்தி புதிய இனிய பல சொற்களைப் படைத்துக்கொள்ளும் வசதியைத் தமிழ் தனக்கும் பிற அயன்மொழிகட்கும் வழங்கியுள்ளமை கண்டு மகிழ்வு அடைவீராக. 

திங்கள், 11 ஜூன், 2018

வரும் தேர்தலில் தமிழ்நாடு நிலை.

மனிதன் எப்போதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படுபவனாகவே இன்றுவரை புவியில் வாழ்ந்துவந்துள்ளான்.  இந்த எதிர்காலக் கணிப்பென்பது ஒரு தனிமனிதன் பற்றியதாக இருக்கலாம்.  இதை "ஜாதகம்" என் கிறோம்.  ஜாதகம் என்பது சோதிடத்தின் ஒரு கூறு.  அதேபோல்  ஊருக்கு என்ன நல்லது நடக்குமென்றும் அரசுக்கும் நாட்டுக்கும் என்ன நல்லது நடக்குமென்றும் அறிந்துகொள்வதிலும் பலர் ஈடுபாடு காட்டுவதில் வியப்போன்றுமில்லை.  ஒரு சிறுபான்மையினர் சோதிடம் பொய் என்று கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களிலும் பலர் இவற்றைப் பார்த்து மகிழ்வதுமுண்டு.

எதிர்காலத்தை முற்றாக அறிந்துகொள்வது இயலாத காரியம் என்றாலும் ஓரளவாவது தெரிந்துகொள்வது நலம் என்போர் பலராவர்.

தேர்தல் முன் கணிப்புகள் இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டன,  அந்த வகையில் தமிழ் நாட்டு அரசியலில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்ளப் பலருக்கும் கொள்ளை ஆசையிருக்கலாம்.

தமிழ்நாட்டில் அரசு மாற்றம் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்று அதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://www.nationalheraldindia.com/india/election-survey-suggests-tamil-nadu-will-favour-dmk-punish-aiadmk

யார் அரசு அமைப்பார்கள் என்று முன்னுரைக்க இயலாது என்றாலும் ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வெற்றிவாகை சூடக்கூடும் என்பதையாவது இக்கணிப்புகள் நமக்குக் காட்டவல்லவை ஆகும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வு  சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.