வெள்ளி, 8 ஜூன், 2018

இல் மற்றும் அல் என்னும் சொற்கள்.

இன்று இரு சிறு சொற்களை ஆய்ந்து அவை எப்படி மாற்றமடைந்து புதிய பொருண்மை பெற்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இல் என்பது ஓர் அடிச்சொல். இதற்குப் பொருள் பலவாகும்,  இல் என்றால் வீடு என்றொரு பொருள் இருக்கின்றது.  இது அம் விகுதி பெற்று இல்லம் என்று வடிவு கொள்ளும். இல்லம் என்பதும் வழக்கில் குடியிருக்கும் வீட்டையும் குறிக்கும்.  முதியோர் இல்லம், அனாதை இல்லம் என்று சற்று வேறுபட்ட இல்லங்களையும் குறிக்கும் என்றாலும்,  அவையும் மக்கள் தங்கும் இடங்களே  ஆகும்.

இல் என்பது இவற்றினின்று வேறுபட்ட பொருளையும் குறிக்கும்.  அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.  அது இல்லை என்ற பொருள்.   ஒன்றை இல்லை என்பதானால் அப்பொருளின் பெயரைச் சொல்லித்தான் அதை இல்லை என்று சொல்லவேண்டும்.  வெறுமனே இல்லை இல்லை என்றால் எது இல்லை,  என்ன இல்லை என்ற கேள்விகள் எழுகின்றன.  ஆகவே பேய் இல்லை, பிசாசு இல்லை என்று சொன்னால் நீங்கள் சொல்வது என்ன என்பதைப் பிறர் புரிந்துகொள்ள முடிகிறது.

பிசாசு என்ற சொல்லை எப்படி உருவாக்கி உலவ விட்டனர் நம் முன்னோர் என்பதை இங்குக் காணலாம்:

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_20.html

பேய் என்ற சொல் பே பே என்றும் உளறும் அச்சக்குறிப்பு ஒலியினின்று அமைந்தது என்று தமிழறிஞர் பிறர் கூறியுள்ளனர்.  அது சரியாகவே தெரிகிறது.

இன்று இல்லை என்ற சொல் ஒரே முற்றுச்சொல்லாக வழங்குகிறது. எடுத்துக்காட்டாக:

அது இல்லை;
அவள் இல்லை;
அவன் இல்லை;
அவர்கள் இல்லை;
அவர் இல்லை;
கந்தன் இல்லை

என்று எல்லாவற்றுக்கும் பொருந்திவருகிறது.  பழந்தமிழில்  அது இலது;
அவள் இலள்; அவன் இலன்; அவர் இலர்; அவர்கள் இலர்; கந்தன் இலன் என்று பல முற்றுக்கள் வழக்கில் இருந்தன.  தமிழ் மொழியானது இப்போது மிக்க எளிமை அடைந்துள்ளது.  வேறு சில இறந்த மொழிகளில் இக்கடுமை இன்னும் தொடர்கிறது.

ஒன்று இல்லாமற் போவதானால் அது முடிவை எட்டியபின்புதான் இல்லாதது ஆகும்.  கஞ்சி இல்லை என்றால் கஞ்சி அளவில் தன் இறுதியை அடைந்து விட்டது என்று பொருள். இறுதி என்பது முடிவு.  இறு + தி = இறுதி.  இந்த இறு என்பது முடி ( முடிதல் ) என்ற பொருள் உடைய சொல்.  தன் முடிவுநிலை எய்தி இல்லாமல் போய்விட்டதைக் குறிக்கிறது.

சொல்வளர்ச்சியில் இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வந்துள்ளது.

இருக்கும் ஒரு பொருள் இல்லாமலாவதென்றால் இது இற்றது;  அல்லது இறுதி அடைந்தது என்பது நாம் அறிதற்குரியதாகும்.

பாட்டி பழைய சட்டியை எடுத்துவைத்துக்கொண்டு பேசுகையில் சட்டியில் தூர் இற்றுப்போய் விட்டது என்று சொன்னால்  இறு > இற்று ( வினை எச்சம்)  என்பதை உணரவேண்டும்.  பாட்டியிடம் தமிழைப் படித்துக்கொள்ள வேண்டியது கடனே.

" இற்ற மூவசைச்சீர்"  என்று இலக்கணப்பாவில் வந்தால் " அவ்வண்ணம் முடிந்த மூவசைச்சீர்"  என்று பொருள்.

இல் என்பதிலிருந்து இறு என்ற சொல் வளர்ந்து தோன்றிற்று.

இல் > இறு.

இதில் சொல் வளர்ச்சியும் கருத்து வளர்ச்சியும்  அறிந்து மகிழலாம்,.

இறு என்பது முதனிலை திரிந்து அதாவது இங்கு நீண்டு ஈறு என்றானது.
ஈறு எனினும் இறுதியாகும்.  ஈற்றசை:  கடைசி அசை.

இல் இறு என்பன சுட்டடிச் சொற்கள். இதனை பின்னொருகால் விளக்குவாம்.
( விளக்குவோம் என்பதை விளக்குவாம் என்றும் சொல்வோம்.  ஆம் ஓம் என்பன விகுதிகள்).

விளக்குவாம் என்று எழுதினால் தெரியாதவன் எழுத்துப்பிழை என்று எண்ணக்கூடும்.

இனி,  அல் என்பதும்  இல் போன்றே வடிவுகொள்ளும் சொல்லாகும்.

அல் என்பது இல்லை என்னாது மறுப்பது ஆகும்.   அது அல்ல நான் சொன்னது என்று இன்று புலவர் சொல்லலாம்.  ஒருவாறு இதுவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.  பழந்தமிழில் அது அன்று என்றுதான் சொல்லவேண்டும்.

அது அன்று; அவன் அல்லன்; அவள் அல்லள்; அவர் அல்லர்; நீ அல்லை; ஆய் அலன்; கந்தன் அல்லன்; என்றிவ்வாறு பலவடிவு கொள்ளும்.

 அறவிலை வணிகன் ஆய் அலன்;  இரவலை புரவலை
நீயும் அல்லை என்று வந்தால் எப்படி இருக்கிறது?

பழந்தமிழில்:  நீ ஓர் இரவலன் என்று சொன்னால் தப்பு ஆகிவிடும். 

நீ இரவலை என்றால்தான் சரி.  மறுப்பதாயின் நீ இரவலை அல்லை என்று
சொல்லவேண்டும்.  இந்தக் கடுமை இப்போது இளகிவிட்டது.

அது அன்று என்பது இப்போது சரி. ஆனால் இதிலும் ஒரு குழப்பபடி உள்ளது.
அது என்பதில் து என்ற அஃறிணை விகுதி வருகிறது,  அதே விகுதி அன்று என்பதிலும் மீண்டும் வருகிறது:  அல்+து = அன்று.  ஏன் இருமுறை இந்த அஃறிணை விகுதி வரவேண்டும்?   ஓர் அஃறிணைப் பொருளைப் பற்றித்தான் பேசினேன் என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன?  உலகில் உள்ள புது மொழிகளில் இத்தகைய ஏற்பாடு இல்லை.  விகுதிகளை அம்மொழிகள் முற்றிலும் அகற்றிவிட்டன அல்லது விகுதிகள் வளர்ச்சி பெறவில்லை,

எடுத்துக்காட்டாக:  நீங்கள் அறிந்த மலாய் மொழியில்  டியா டாத்தாங்க் என்பதில் டியாவிலும் விகுதி இல்லை;  டாத்தாங்கிலும் விகுதி இல்லை.
சீன மொழி பண்டைக்காலமுதலே சொற்களை நீட்டவில்லை.

அது அன்று என்பது  அது அல் என்றே இருந்திருந்தால் இந்தக் குழப்பம் இராது. ஆனால் அல் என்பது ஒரு முற்றுச்சொல்லாகத் தமிழில் வருவதில்லை. இது மொழிமரபு ஆகும்.

நம் மொழியே சிறந்தது என்று நாம் சொன்னாலும் வேறுமொழியும் வேறு காரணங்களுக்காக உயர்ந்தே நிற்கிறது.  யாவும் வாழ்க.

அது வந்தது என்பதில் வந்தது என்று ஏன் சொல்லமைகிறது.  அதில் மீண்டும் அது ஏன் வரவேண்டும்.   வந்து+அது!   இதைப் பவணந்தியார் நன்னூல் வேறுவகையாகக் காட்டும்.   த் என்பது இறந்தகால இடைநிலை என்னும்.

அது வன்னு என்ற மலையாளத்தில் மீண்டும் அது வரக் காணோம்.

சில மொழிகள் அ  வா என்று சுருக்கமாக முடித்துவிடும்.

எல்லாம் நல்லதுதான்.

அல் என்பதிலிருந்து அறு என்று சொல்லமைந்தது.  அல்> அறு.  இது இல்> இறு போன்றதே.  அல் >  அறு > அற்ற > அற்றது.  அறு என்பது அன்மையுடன் அறுத்தலையும் உணர்த்தும்.  ஒன்றை அறுக்கும் போது அது ஒன்றாக இருந்த நிலை மாறி அறுபட்டு இரண்டாகிவிடும்.  அது அப்புறம் ஒன்று அன்று; இரண்டு ஆம். ஒன்று அற்றது.

இச்சொற்களின் வடிவங்கள் பற்றிய உரையாடலை இத்துடன் நிறுத்தி நாம் மீண்டும் சந்திப்போம்.

அனைத்து மொழிகளும் வாழ்க வாழ்க.
 

வியாழன், 7 ஜூன், 2018

சுடர்தரும் திரம்ப் கிம் மாநாடு.சிங்கையில்

அமைதிக்  கனாக்காண  ஆர்நகரம் சிங்கை;
சுமையாய்  உலகுறுத்தும் குண்டை=== தமைக்கண்ட
மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் பாத்திரத்தில்
கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல்  ===நேர்த்திறமாய்
கிம்மை எதிர்கொண்ட கேடில்லா மாநாட்டில்
நம்முன் உலகின்முன் நன்மனத்தால் ==== செம்மையாய்த்
தூக்கி  எறிந்திடுவார்  தொல்லை களைந்திடுவார்
நாக்கில் செழுந்தேனர் நம்திரம்பும் ----நோக்குங்கால்
வெற்றியே கொள்வாரே வீரமாய் நின்றிடுவார்
சுற்றுலகில் எல்லாம் சுடர்.


இதன் பொருள் :

அமைதிக் கனா  காண  ---   சமாதானக் கனவு மேற்கொள்ள;
ஆர்  நகரம் --- நிறைவான நகரம்;   சிங்கை ---  சிங்கப்பூர் ஆகும்;

சுமையாய் -- -    ஒரு தலையின்பாரமாக;
உலகுறுத்தும் --  உலகத்தை உறுத்திக்கொண்டுள்ள;
குண்டை --- (  உலகை அழிக்கும் )  வெடிகளை;


தமைக்கண்ட மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் --
கிம் என்பவர்    டிரம்ப் தம்மைக் கண்டபொழுது  தம்
எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல்;


பாத்திரத்தில் கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல்--
ஓர் ஏனத்தில் அடியில் ஓட்டையானால் வீசுவதைப்போல;

தூக்கி எறிந்திடுவார் ---   வைத்துக்கொள்ளாமல் அப்புறப்
படுத்திவிடுவார்;

தொல்லை களைந்திடுவார் -  உலகிற்கு அதை
வைத்திருப்பதனால் வரும் தொல்லையைக் களைந்து
விடுவார்;

நேர்த்திறமாய் -   நேர்முகமாய்;

கிம்மை எதிர்கொண்ட - வடகொரியத் தலைவர் கிம்மைச்
சந்தித்த

கேடில்லா மாநாட்டில் --  கோளாறு இல்லாத கூட்டத்தில்;

நாக்கில் செழுந்தேனர்  திரம்பும்  --  இனிப்பாகப் பேசும்
ஆற்றல் வாய்ந்த அதிபர் டிரம்பும்;

நோக்குங்கால் --  நாம் கணக்கிடும் இவ்வேளையில்;

நம்முன் -  மக்களாகிய நம் முன்பாகவும்;

உலகின்முன் --  உலக  நாடுகளின்முன்னும்;

நன்மனத்தால் -  உலக அமைதி நாடும் நல்ல உள்ளத்தினால்;

வெற்றியே கொள்வார்  --  வெல்லும் தரமே அடைவார்;

வீரமாய் நின்றிடுவார்  -  பேச்சில் பின்வாங்குதல் செய்யார்;

சுற்றுலகில் --  நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில்;

எல்லாம் சுடர் --  அனைத்தும் ஒளியாகவே நிறைவாகும்.


பிற்குறிப்பு:  13 சூன் மாதம்:

நம் கவிக்கனவு போலவே திரம்பும் கிம்மும் இணக்கமான முறையில் அணுவாயுதக் களைவுக்கு ஒப்பிய நிலையில் மாநாடு முற்றுப்பெற்றது
உலகுக்குக்கும் மகிழ்ச்சி.  சிங்கைக்கும் மகிழ்ச்சி. இருதலைவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் உரித்தாகுக. வையகம் வாழ்க.






ஆத்தா - மாதா ஓர் ஒப்பாய்வு.

இங்கு முதலில் ஆத்தா என்ற சொல்லை ஆய்ந்துகாணுவோம்:

தமிழில் "ஆய்"  என்ற ஈரெழுத்துச் சொல்  அம்மாவைக் குறிக்கும்  இது சிற்றூர்ப் புறங்களில்   "ஆயி"  என்று நீண்டொலிக்கும்.  இதன் நீட்சி ஆய் என்பதனுடன் இறுதியில் ஓர் இகரச் சாரியை வந்து சேர்வதால் ஆவது. யகர  ஒற்று இல்லாமல் ஆ என்று மட்டும் வந்தால் அது பாலம்மையைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்ததே.

தாய் என்ற ஈரெழுத்துச் சொல்லும் அம்மாவைக் குறிப்பதே ஆகும். இதுவும் சிற்றூர்ப் பக்கங்களில் "தாயி" என்று நீண்டொலிப்பதே.  இகரச் சாரியை பெற்றது.  இது யகர ஒற்று இன்றித் தமிழில் தனிச்சொல்லாய் அமைவதில்லை.  எனினும் இணைச்சொற்களில் இறுதியில் நின்று "  அம்மா" என்று பொருள்படுவதாகும்.  எப்படி என்பதைப்  பின்னொருநாள் காண்போம்.

ஆய் என்ற சொல்,  தாய் என்பதனுடன் இணைந்து,  ஆய்தாய் அல்லது ஆய்த்தாய்  ஆகும்.  இதுபின் தன் யகர ஒற்றுக்களை இழந்து,  ஆத்தா என்று வரும்.  இருமுறை அம்மை என்று பொருள்தரும் சொல் அடுக்கிவந்தமையானது  தமிழர்களிடைத் தாய்க்கு மிகுந்த பணிவன்பைக் குறிக்கவருவது ஆகும்.

இப்படி யகர ஒற்றுக்கள் மறைந்து திரிந்து சொற்கள் அமைவது தமிழில் உண்டா என்று கேட்கலாம்.  கேட்பவர்  முதன்முறையாக இதை எதிர்கொள்பவராயின் அவர் நம் முன்இடுகைகளை நன் கு  கவனிக்கவேண்டும்.  இதன்மூலம் தமிழில் இஃது பெருவழக்கு என்பதை
உணரலாகும்.  சொல்லி முடித்தவற்றையே மீண்டும் குறிப்பிடுதல் நலமன்று எனினும் சில எடுத்துக்காட்டுகள்  இங்கு தரப்படுகின்றன:

வாய்ப்பாடம் சொல்லிக்கொடுப்பவர்:

வாய் + தி =  வாய்த்தி >  வாத்தியார் ( இது பணிவுப் பன்மை ஆர் விகுதி)

உப அத்தியாயி என்ற சொற்புணர்வில் தோன்றிய உபாத்தி ( உபாத்தியாய) என்ற சொல் வேறு.)  முன் இடுகைகள் காண்க.

இன்னொரு சொல்: 

வாய் + தி =   வாய்ந்தி  > வாந்தி.

தின்றது வாய்வழித் திரும்பி வருவது.  கக்கல்.

பூந்தி என்ற சொல் பூ + தி என்று புணர்ந்து  மெலிந்தது  ஆகும்.  யகர ஒற்று இல்லாததெனினும் வாந்தி என்பதனுடன் எதுகைபோல் அமைந்தது. (பூவைப்போல் பொரிந்து வருவது )

மற்றுமொன்று:

வேய்ந்தன் >  வேந்தன்.   முடி வேய்ந்துகொண்டவன்.

ஆனால் வேயி என்ற பெண்பால் சொல் பல அணிகளும் உடையும்  வேய்ந்து கொண்டு அழகு காட்டுபவள் என்றாலும்  அதில் யகர ஒற்று மறைதற்கு வழியில்லை. பின் அது வேசி என்று திரிந்தது.  யி>சி திரிபு.  வழக்கம்போல.

இவை எல்லாம் ஆய்த்தாய் என்பது ஆத்தா   என்பதில் யகர ஒற்று வீழ்ந்ததை
உறுதிப்படுத்தும்.  ஆத்தா என்பது பாட்டியையும் குறிக்க வழங்கக் கூடும்.

இனி மாதா என்ற சொல்லும் இப்படியே அமைந்துள்ளதை அறிந்து மகிழலாம்.

மா என்பது அம்மா என்பதன் இறுதி எழுத்து.

தா என்பது தாய் என்பதன் முதலெழுத்து.

இரண்டையும் சேர்க்க, மா+தா =  மாதா ஆயிற்று.

இரண்டடுக்கி வந்து பணிவுமிகுதல் குறித்தது.

ஆத்தா என்பது இறுதி  எழுத்துக்களை நீக்கி உருவாக, மாதா என்பது சொற்களின் இறுதி-முதலெழுத்துக்களை இணைத்து அமைந்துள்ளது. அதாவது மாதாவில் அம்மும் யகர ஒற்றும் முறையே வீழ்ந்தன.

புதுச்சொற்களைப்  படைக்கக் கையாண்ட உத்திகளை அறிந்து மகிழுங்கள்.

மறுபார்வையில் பிழைகள் இருப்பின் திருத்தம்பெறும்.