திங்கள், 23 ஏப்ரல், 2018

அகவை, வயது.

வை -  வைத்தல் என்பது  தமிழில் உள்ள வினைச்சொற்களில்
நல்ல பல சொற்களைப் படைத்துத் தந்த தாய்  ஆகும்.

வை > வையம் என்பது பூமியைக் குறித்தது. தமிழன் உலக நோக்கு
உள்ளவன் ஆதலின், அவன் தான் மட்டும் வாழவேண்டும்
என்று நினைக்காமல், கடிதம் ஏதேனும் எழுதும்போதெல்லாம்
"வாழ்க வையம்" என்று பிள்ளையார் சுழிக்குக் கீழே எழுதி
மகிழ்வான்.   வை+அம் = வையம் ஆனது.  அம் விகுதி
இல்லாமல் அகம் என்ற சொல்லும் சேர்த்து. வையகம்
என்ற சொல்லையும் படைத்தான். தமிழ் என்பது செய்யுளில்
வளர்ந்த மொழியாதலின், வேண்டியாங்கு வையம் என்றோ
வையகம் என்றோ இரண்டில் எதையும் பயன்படுத்திக்
கொள்ளலாம். இப்போதெல்லாம் கடிதம் என்பது
அரசுக்கோ குழும்பு அலுவலகத்துக்கோதான் எழுதுவோம்.
நண்பர்களுக்கு எழுதுவதெல்லாம் குறுஞ்செய்தி ( எஸ் எம் எஸ்)
யாகவோ மின்னஞ்சலாகவோ இருக்கும்.  வையகம் வாழ்க
என்ற நல்ல எண்ணம் இப்போது உள்ளதா ஒழிந்துவிட்டதா
என்று தெரியவில்லை.

வையத்தை விட்டுவிட்டால் வேறோர் இடம் உள்ளது.  அதுதான்
வையாபுரி.  சிங்கப்பூர் கோலாலம்பூர் மணிலா போன்றவை
மனிதன் கட்டிய நகரங்கள்.  வெறும் நகரங்களா? உல்லாச
புரிகள். மகிழ்வு தரும் நிகழ்வுகள் இந்நகரங்களிற் பல.  ஆனால்
மனிதன் கட்டாத வானத்தில் உள்ளதாக நம்பப்படும் நகரமே
வையாபுரி. இங்கே உள்ளவை எல்லாம் மனிதன் வைத்த
நகரங்கள்.  வான் நகரோ மனிதன் வைக்காத =  வையாத
புரி.  மனிதன் வைக்காதது மட்டுமன்று, அங்கு எல்லோரும்
நித்திய இன்பத்தில் திளைத்திருப்பதால் யாரும் யாரையும்
வைவதும் இல்லை.  மொத்தத்தில் அது ஓர் அமைதிப்
பூங்கா என்று சொல்லலாம். ஒரு பெரிய வீட்டை வைத்து
மகிழ்ந்திருக்கும் வேளையில் வையாத புரியையும் எண்ணி
மெய்யான இன்பம் அடையத்  தடைகள் யாவையும் இல்லை.

நீங்கள் எதையும் வைத்திருக்கலாம்.  வை என்பது வய்
என்றும் திரியும்.  பை> பையன்.  பை>பய்>பயல்
என்று திரிபுகள் காண்க. அதுபோலவே  வை>வய்>
வயம்.  எதை எவன் வைத்திருக்கிறானோ அது அவன்
வயம் உள்ளது.  பின் பயல் > பசல்> பசன் என்று ய-ச
திரிந்ததுபோல வயம் என்பதும் வசம் ஆனது.

நாமெல்லாம் காலத்தின் வயப்பட்டு நிற்கிறோம்.
நாம் பிறந்த தேதி முதல் காலத்தின் வயமாவதால், இந்த
வயமாகும் கணக்கே "வயது" ஆகிறது.  வயது என்றால்
காலத்தால்  வைக்கப்பட்ட கணக்கு. வயப்பட்ட கணக்கு.\
இன்னொரு வகையிற் சொன்னால் நாம் காலத்துள்
அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.காலத்தின்
அகத்தே பட்டுக்கொண்டதால் அல்லது வைக்கப்
பட்டிருப்பதால்    நாம் அகவையை ஆண்டுதோறும் கூட்டிக்
கொண்டிருக்கிறோம். அகவை: காலத்தின் அகத்து
வை!  அக+வை.

இன்னும் பருவங்களும் புவியில் ஏற்படுகின்றன.  எல்லா
உயிர்களும் இப்பருவங்களின் வயப்பட்டுக் கிடக்கின்றன.
அவற்றுள் தென்றல் வீசியும் பூக்கள் பூத்தும்  சுனைகள்
நீர்வழங்கியும் எல்ல உயிர்களை யும் வயப்படுத்தும் காலம் :
வயந்தகாலம்.  அது  ய-ச திரிபால் வசந்த காலம் ஆயிற்று.
வசந்தத்தின்போது கிட்டிய - கட்டிய மாலை வயந்தமாலை>
 வசந்தமாலை.  அதை அணியும் குமரி - குமாரி :  வசந்த குமாரி
ஆகிறாள்.

எதை எங்கு வைக்கிறோமோ அது  வை> வாய் ஆகிறது.
வாய் என்பது இடம்.  எதை எங்கு இடுகிறோமோ அது  அதற்கு
இடம் ( இடு+ அம்).

இப்படி வை என்ற சொல் பல சொற்களுக்குத் தாய்.  அவற்றுள்
நாம் இங்கு அறிந்தவை சில.  அறியாதவை பல,

திருத்தம் பின்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

Visit to Greenland பசுநிலப் பயணம்


கிரீன்லாந்து என்பதொரு நாடு. அங்கு காணக்கிடைக்கும்

இயற்கைக்காட்சியைச் சுருங்கக் கூறுவது இக்கவிதை.




0000000000-----------------------00000000

இரவு பன்னிரண்டில்
எல்லோன் விழித்தொளியே
பரவும் வகைபணியே
பார்க்கும் வியப்பினையே ----(1)



அறவே காண்பதில்லை!
ஆசியத் தென்பகவில்;
பறவை ஊர்தியிற்போய்ப்
பார்ப்பீர் பசுநிலத்தே.                 (2)

இரண்டொரு நாட்களுக்காம்
இரவுகண் திரக்குவதால்
வரண்டிடும் கண்ணுறக்கம்;
வாழ்க்கை பலவிதமே.              (3)

கட்டிப் பனிமலைகள்,
காணும் இடமெங்கிலும்;
ஒட்டிச் செலவியலா
ஒப்பில் குளிர்வதையே.           (4)

பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரியே
தனிமைத் துயரறியா
தலைமை விலங்கினமோ?     (5)

விலக்கி வீடுகட்டி
விரல்விட் டெண்ணும்படி
கலக்கப் பரந்துறையும்
கடனார் வளமக்களே.                (6)

மீனே மேலுணவாய்
மேலாம் வாழ்நரிவர்.
மானும் மயிலுமில்லா
மாவண் திறத்தினிலே.              (7)

பொருள்:

ன்னிரண்டில்:   மணி பன்னிரண்டு நள்ளிரவில்.
எல்லோன்:  சூரியன்
பணியைப் பார்க்கும்:  வேலை செய்யும்.
ஆசியத் தென்பகவில்:  தென் கிழக்காசியாவில்
(ஆசியாவின் தென்பகுதிகளில் என்பது 
கவியில் சொல்லப்பட்டது )
திரக்குவது -  தேடுவது.
பசுநிலம் -  கிரீன்லாந்து,
பறவை ஊர்தி:  வானூர்தி (  விமானம்)
வாழ்க்கை பலவிதம்: உலகில் வாழ்க்கை பலவகை
செலவியலா -  பயணம் போக முடியாத
ஒப்பில் =  இணையில்லாத.
குளிர்வதை -  கடுங்குளிர்
தலைமை விலங்கினமோ:  வேறு விலங்குகள் உள்ளனவோ?
தனிமைத் துயர்:  இவ்விலங்கு ஒண்டியாய் இருப்பதுபோல்
உள்ளது.
விலக்கி வீடு கட்டி -  சேர்த்தபடி கட்டாமல் எட்ட எட்டக் கட்டி
கலக்க -  அங்கொன்று இங்கொன்றாக.
பரந்து உறையும் -  விரிந்த நிலப்பகுதியில் வாழும்.
கடனார் -  கடமை மிக்க;  கடன் -  கடமை.
வளமக்கள் -  செழிப்பாக வாழும் மக்கள்.

மேலுணவு -  முக்கிய உணவு.
மானும் மயிலும் இல்லா :  இவ்விலங்குகள் இங்கு இல்லை.
மாவண் திறம்:  இவை இல்லாவிட்டாலும் அழகுதரும்
இயற்கையைப் புகழ்ந்து பாராட்டுதல்.

மெது, மித, மிதம், அமிதம்

எடையில்லாதது தண்ணீரில் மிதக்கும்.  எடையுள்ளது
அதில் அமிழ்ந்துவிடும்.

உண்மையில் இது எடையற்ற காரணத்தால், ஆங்கிலத்தில்
" லைட்"  ( ஹெ வி அல்லாதது)  என்பதுபோன்ற கருத்தே
ஆகும்.

உணவு உண்பதில் எப்போதும் மிதமாக இருங்கள் என்று
சிலர் கூறக்கேட்டிருப்பீர்கள்.

எடைக்குறைவைக் குறித்த இந்தச் சொல் பின்னர்
"மூழ்கிவிடாதிருக்கும் அளவில் "  என்று பொருள்பட்டு.
பின்னர் அதிகமற்ற, மிகையில்லாத என்ற பொருளுக்கு
வந்தடைந்தது.

மித + அம் =  மிதம்.

மித என்பதில் இறுதி அகரம் கெட்டது (  மறைந்தது).

மிதத்தல்;  மிதம்.

அமிதம் என்பது எதிர்ச்சொல்.  அ என்பது அல் என்பதன்
கடைக்குறை.    அல் > அ.

அ+மிதம் =  அமிதம்.

மெது என்பது மித (மிதத்தல் ) என்பதனுடன் தொடர்புடைய
சொல்.  சொல்லாலும் பொருளாலும் தொடர்பு உண்டு.

மெது > மெதம் >மிதம் எனினுமாம்.

மெதமாக வாய்ப்பேச்சு இருக்கட்டும்; வெற்றி பெறுவீர்
என்பர்.

மெது என்பது தொடுகையில் மெதுவாயிருத்தலையும்
எடையில் மெதுவாய் இருத்தலையும்  வேகத்தில்
மெதுவாய் இருத்தலையும் ஊர்வழக்கில் தழுவும் என்பதை
அறிக.