சனி, 7 ஏப்ரல், 2018

தமிழ் மன்னன் என்ன சாதி?



தமிழ் மன்னன்  என்ன  சாதி?
தமிழரசர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசனின் சாதி “அரசன்” என்பதுதான்.
பிராமணர் அல்லது பார்ப்பனர் தவிர,  பிற சாதிகளெல்லாம் குடிமக்கள் சாதிகளே ஆகும்.  குடிகளின் சாதிகள் அரசர்களை உட்படுத்த மாட்டா.
அமைச்சர்கள், தளபதிகள் என்று இருந்தவர்கள் அரசனின் உறவினர்களாக இருந்திருத்தல் கூடும். அல்லது தம் திறமையை வெளிப்படுத்தி அவ்வலுவலைப் பெற்றவர்களாய் இருந்திருத்தல் கூடும்.
அரசர்களுக்குள் சூரிய குலம், சந்திர குலம் என்பனபோல் பிரிவுகள் இருந்தனவென்று தெரிகிறது,  இவை குடிமக்களிடை இல்லாதவை.
வணிகர். வேளாளர், பிற தொழிலாளர்கள் -  அரச குலத்துக்கு வெளியில் உள்ளோர் ஆவர்.




ஆய்வுக் குறிப்புகள்:

சாதி என்பது தொல்காப்பியத்திலும் பதிவான சொல்.  " நீர்வாழ் சாதி" என்று
தண்ணீரில் வாழவனவற்றைக் குறிக்கும்.  சாதி -  இது சார்பானது, சார்ந்தது என்று பொருள்தரும்.  செட்டியார் சாதி என்றால் செட்டியார் சார்பினர்  என்று பொருள்.  அதாவது செட்டியாரைச் சார்ந்தவர்கள். இதுவே சரியான சொல் தரவு ஆகும்.  அமைச்சர்களுக்குத் தேவர் என்ற பட்டம் இருந்தது. அவருடைய உறவினர் அவரைச் சார்ந்தோர் என்பதே சரி.  ஓரிருவருக்கே பட்டம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் அவரைச் சார்ந்தவர்கள்.  சார்தி > சாதி.  ரகர
ஒற்று மறைவு.   கொள்வனை கொடுப்பனைகளால் பிற்காலத்தில் அது குலமானது.   ஜா-  பிறந்தது என்று பொருள்படுவதிலிருந்து ஜாதி என்ற ஒலி ஒற்றுமைச் சொல் homonym  படைக்கப்பட்டு சமத்கிருதத்தில் வழக்குக்கு வந்தது.  அது (ஜாதி) பிற்கால குமுக அமைப்புக்குப் பொருத்தமான சொல்லானது.  அதனால் சாதி (சார்தி) வேறு,  ஜாதி வேறு.
பிராமணர் என்போர் பிரமனை வணங்கினர்.  அவனை உணர்ந்த தகைமையால் "பிராம்மணர் " எனப்பட்டனர்.  அப்போது பிறப்பினால் சாதி இல்லை. ஜாதியுமில்லை. பின் நூலணிந்து பூசாரித் தொழிலில் ஈடுபட்டனர். இது அடையாளத்துக்காகவே தொடக்கத்தில் இடப்பட்டது. பின்  அகமணமுறை ஏற்பட்டபோது அது ஒரு குலமாக வளர்ந்து,  நூலணிதல் பிறப்பினைக் குறிக்கத் தொடங்கிற்று. அப்போது சாதி ஜாதியாகிவிட்டது.  பூசாரித் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குப் போனால் சாதி மாறுமென்ற நிலை ஒரு காலத்திலிருந்தது. இதற்கும் நூல்களில் ஆதாரமுண்டு.   ஒழுக்கம் தவறினால் சாதி இழக்கப்படும் என்ற விதி திருவள்ளுவர் காலத்தில் இருந்தது. இப்போது தொழில்மாறினாலும் ஒழுக்கம் கெடெய்தினாலும் சாதி அப்படியே இருக்கிறது.  இதற்கும் நூலாதாரம் உள்ளது.  இவை அமலற்ற விதிகள் ஆயின. (unenforced or unenforceable rules)   (obsolete)  குமுகாயம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சட்ட திட்டங்களை கடந்து வந்துள்ளது என்று உணரவேண்டும். ( Rules have varied from time to time).


பண்டைக்கால அரசர்கள் பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் உடையவர்களாய் இருந்தனர். ( polygamous) . 500 அல்லது 600 என்று வைத்திருந்தவர்களும் உலகில் பல நாடுகளிலும் உண்டு. இதை இப்போது இணையமூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். முன்னர் அந்த வசதி இல்லை.  நூல்நிலையங்களே துணை நின்றன.


பன்மனையம் என்ற பொலிகமி  (polygamy ): அந்தக் காலக்கட்டத்துக்கு அதுவே சரி. பிற்காலத்தில் அது மாற்றம் அடைந்தது. கடவுளால் ஒன்றாக வைக்கப்பட்ட தம்பதியினரைப் பிரித்தலாகாது என்று ஏசுநாதர் கூறினார்.  ( What God hath put together, let no man put asunder ). அது கிறித்தவ நாடுகளில் அமல்செய்யப்பட்டது.  இருமனைவிகள் அல்லது அதற்கும் மேலென்பது குற்றமாகச் சட்டம் கருதியது.  இந்தச் சட்டத்தையும்  அதற்கான பண்பாட்டுப் பின்னணிகளையும் வைத்துக்கொண்டு இராசராச சோழனை எடைபோடுதல் கூடாது.  அவன் காலத்தில் குமுகம் community  அப்படி இல்லை. அவனும் அத்தகைய சட்டத்தைப் போடவில்லை. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எந்த மன்னனும் போடவில்லை.  அது வெள்ளைக்காரன் அரசு மூலம் வந்த சட்டம்.

இராச இராசன் பல மனைவிகள் உள்ளவன்,  ஏனை எல்லா மன்னர்களும் குறு நில மன்னர்களும்  அதையே செய்தனர்,  குடிகளும் அப்படியே முடிந்த அளவு செய்தனர்.  ஓர் அரசனுக்கு எத்தனை பிள்ளைகள்; ஒரு குறுநில மன்னனுக்கு எத்தனை பிள்ளைகள்!  அவன் போருக்குப்போன இடங்களில் ஒவ்வொரு மன்னனுக்கும் எத்தனை பிள்ளைகள்........ஓர் அரசனுக்கு ஒரு பெண் வேண்டுமென்றால் அவள் எந்தச் சாதியாயினும் ஒப்பியே ஆகவேண்டும்.
ஒப்புவதென்ன! பலர் அதனாலேயே தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டனர்.

கலிங்கத்துப்பரணியில் "கடை திறமினோ! கடை திறமினோ!" என்று பாடல் முடிகிறது. மன்னன் குலோத்துங்கனே  உன் அழகில் மயங்கி வந்துவிட்டான்! கதைவைத் திறவாய்!"  என்பதன்/றோ பாடலுக்குப் பொருள்.  இது ஒன்றும் பொய்யன்று. வெற்றி வீரனான மன்னன் எந்த வீட்டிலும் புகுந்து எந்தப் பெண்னோடும் இருப்பான்.  இந்தியாவில்,  சீனாவில், ஐரோப்பாவில்.... எங்கே இல்லை?  அட்டிலா -த - ஹன் செய்த அட்டகாசத்தில் ஒரு நாட்டின் வெள்ளை நிற மக்களெல்லாம் மஞ்சள் நிறமாக மாறிவிட்டனரே....  அந்த நாட்டின் பெயர் கூட " ஹன்-கேரி" என்றன்றோ ஆகிவிட்டது!   இன்னும் இன்னொரு நாட்டில் பழுப்பு மஞ்சள்  நிறத் தோலர்களெல்லாம்  கருவலாகிவிடவில்லை?  அரசன் மட்டுமா?  படைஞர்களும்தாம்  களிப்பில் ஈடுபட்டவர்கள் .  விவரிக்காது விடுவோம். ஒன்றிரண்டை அரசன் கொள்வான்.  மற்றவை படைவீரர்களுக்குப் பலி.

தமிழரிலும் அரசக் குருதி உடையோர் பலர் இருக்கலாம்.  பிற மாநிலங்களிலும் இருக்கலாம்.

மனித வளர்ச்சி வரலாற்றுக் காலங்களில் அண்ணன் தங்கைகள்கூட கல்யாணம் பண்ணி வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள குமுகம் வேறு. அவர்களை ஏசுவது உணராமை ஆகும்.  ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் உடன்பிறப்புக்கள்தாமே. மணம்செய்ய வேறு யாரும் இல்லையே.... என்ன செய்வார்கள் பாவம்.

சாதி என்பதற்கு நேரான டச்சு போர்த்துக்கீசியச்  சொல் காஸ்டா என்பது, இது
1498ல் இருந்து  இந்திய சாதிகளைக் குறிக்க வழங்கிவருகிறது.  இதற்குரிய ஆங்கிலச்சொல் 1613ல் இருந்து வழங்குகிறது.

பின் திருத்தப்பெறும்.
மறுபார்வை செய்த நாள்:  3.4.2019



ஒன்றும் இரண்டும் அமைந்த விதம்.

ஒன் என்ற சொல்லை இதற்குமுன் ஆய்ந்துள்ளோம். ஒன் என்பது ஊ, உன் என்பவற்றிலிருந்து திரிந்து அமைந்த சொல்.  உ என்பது முன்னிலைச் சுட்டு என்பது உங்களுக்குத் தெரியும்.  உங்கள்முன் ஒரு பொருள் இருந்தால் அது அங்கு உள்ளது எங்கிறீர்கள் அன்றோ? உள்ளது என்பதில் உள்,  உள் என்பதில் உ எல்லாம் குறைவின்றி இருக்கின்றன. இவை எல்லாம் ஊ என்பதனுடன் தொடர்புற்றவை.  சீனமொழியிலும் ஊ என்றால் உள்ளது என்றுதான் பொருள். இப்போது:

ஊ > உ > உள்> உள்+ அ+ து :  உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும்  சேய்மைச் சுட்டு என்றாலும் இச்சொல்லில் அது தன் பொருளை இழந்து வெறும் இணைப்பொலியாய்ப் பயன்படுகிறது.  இது முற்காலத்தில் உள் உது என்று அதாவது உள்ளுது என்று இருந்திருக்கவேண்டும்.  உது என்பது அது என்று திரிந்திருக்கவேண்டும்.  திரியவே அ என்பது பொருளிழக்க து என்பதுமட்டும் ஒன்றன்பாலை உணர்த்த நின்றுள்ளது என்பது காணக்கிடக்கின்றது.

எல்லா மொழிகளிலும் திரிபே இல்லையென்றால் ஆய்வுகள் மிக்க எளிமையாய் இருந்திருக்கும்.  குழப்படியான உலகில் எதுவும் எளிதில் கிட்டுவதில்லை, அறிதருவதும் இல்லை.

மீண்டும் ஒன் என்ற வடிவத்துக்கு வருவோம்.

ஊ > உ > உன் > ஒன்.

முன்னிருப்பது; அதாவது ஒன்று என்ற எண்ணிக்கையில் உள்ள பொருள்.

இதில் து என்ற அஃறிணை விகுதி புணர்த்த, ஒன்+து = ஒன்று என்றாகிறது.

இனி, ஓரு, ஓர் என்பனவெல்லாம் உள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வோம். எம் வலையொளியில் நின்றுகொண்டிருங்கள். தக்க
தருணத்தில் அதையும் கண்டறியலாம்.

முன்னிருப்பது ஒன்று முன்னே இருக்க,  அதை அண்மிக்கொண்டிருக்கும் இங்குள்ள பொருளும் அதனுடன் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு ஆகிவிடுகிறது.

இரு+அண்+து.

இங்கு இருந்தது ( இரு)  முன்னிருந்த பொருளை அண்மியது. (அண்).

து என்பது அஃறிணை விகுதி.

உண்மை இதுதான். அறியாதவனுக்கு இது ஒரு விளையாட்டுக்கதை போல் தோன்றும்.  மொழியில் புலவர்கள் ஏற்படாத காலத்தில் அமைந்த சொற்கள் இவை. மிக்க எளிமையுடன் அமைந்திருத்தலை
 நுண்மாண் நுழைபுலத்துடன் கண்டறியவேண்டும்.

இரு என்ற சொல்லில் இ என்ற சுட்டு தன்மை இடத்தை வெளிக்காட்டி நிற்பதை அறியவேண்டும்.

இருப்பது இ !   இ > இரு.  அல்லது இ> இர் > இரு.

இருந்தது முன்னிருப்பதை  அண்மிச்செல்ல இரு+ அண் +து = இரண்டு.

து என்ற ஒன்றன்பால் விகுதி இரண்டில் வந்தது வழுவமைதி.
அன்றி, இருந்தது அண்மிற்று ஒன்றை என்றும் விளக்கலாம். இழுக்கின்று.

அறிந்து மகிழ்க.


அடிக்குறிப்பு:

இரு என்பதற்குப் பெரிது என்பதும் பொருள்.  முன்னிருக்கும் ஒன்றுடன்
இங்கிருக்கும் ஒன்று இணைந்துவிடின் அப்பொருள் பெரிதாகிவிடும் என்பது காண்க.

ஆயிரம் சொல்லமைப்பு:  http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_62.html

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மயானமும் மவுசும்



இருப்பதைக் கொண்டே இல்லாததை உருவாக்கவேண்டும். தெரிந்ததைக் கொண்டே தெரியாததையும்  தெரிந்துகொள்ளவேண்டும்.  இந்தவகையில் இன்று மயானம் என்ற சொல்லின் தோற்றத்தினை உணர்ந்துகொள்வோம்.

மாய்ந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரியூட்டும் இடமே மயானம் எனப்படுகிறது.  இது எந்த மொழிக்குரிய சொல் என்பதைவிட எப்படி அமைந்தது என்று கண்டுபிடித்தால் அதன் பொருளை நன்`கு தெரிந்தின்புறலாம்.

மயானம் என்ற சொல்லை இட்டம்போலப் பிரித்தால்:

மயா +ன் + அம்  என்று "பாதை தெரிகிறதன்றோ",  எனவே மயா என்பது என்ன என்று தேடுங்கள். இங்கு மயா என்பது மஜா என்பதன் திரிபுபோல் தோன்றலாம். ய-ஜ திரிபு.  யேசுதாஸ் > ஜேசுதாஸ் போல. மயாவுக்கும் மஜாவுக்கும் ஏதும் பொருள்தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஒட்டகம்,  பெண்குதிரை,  கழுதை முதலியவற்றுக்கு  சமஸ்கிருதத்தில்  மயா என்பர் என்று சமத்கிருதப் பண்டிதர் கூறுகிறார். இந்த விலங்குகள் எல்லாம் மயானத்தில் இல்லாதவை!  ஆகவே மூலம் அறிய இந்த வழியில் இயலாது. இந்தச் சிந்தனை மின்னல்போல் பளிச்சிட முடியாது.

மசான என்பதை (சொல்லின் பிற்பகுதியாக )  உள்ளடக்கிய  சொற்கள் சில உள.  மயானம் என்ற சொல்லுடன் பாதி ஒலியொற்றுமை உடைய சொற்கள் இவை. அவற்றைக் கொணர்ந்து தொடர்புறுத்திவிட்டு அக்கடா என்று கிடக்கலாம்  என்றாலும் மீண்டும் முயல்வோம்.

நாம் தமிழின்மூலம் இச்சொல்லை ஆய்வோம்.

மாய் என்றால் இறத்தல்,  மாய்ந்து போவது.

ஆன் என்பது இடைநிலை.  ஆன என்றும் பொருள்படும்.  ஆன என்னும் எச்சவினையாகவும் கொள்ளலாகும்.

அம் என்பது விகுதி.

மாய்+ஆன + அம் =  மாயானம் > மயானம் ( முதலெழுத்துக் குறுக்கம்).

நெடில் குறிலாகிச் சொல்லமைதல் தமிழில் பழங்காலம் தொட்டு உள்ளது. 

எடுத்துக்காட்டு:

காண்  >  கண்.  (காணும் உறுப்பு).

எத்துணை பழங்காலச் சொல். காண் என்பது.  அப்போதே இவ்வசதியைக் கையாண்டிருக்கிறார்களே......

வீழ் > விழுது.

இன்னும் வினையல்லாத சொற்களிலும் இப்படி வரும்.  

பாழ் > பழுது. 

நெடிலிற் றொடங்கிய  சொற்கள் குறிலில் முதலெழுத்துக்கொண்டதனை இதன்மூலம் அறிந்தீர்கள்.  எம் இடுகைகளை நோக்கின் நெடுகிலும் இதனை யாம் தெரிவித்துவந்திருப்பதனை அறியலாகும்.   பல மரபுதோய்ந்த மாற்றங்களில் இதுவும் ஒரு வகையினது ஆகும்.

இம்முறையால்,  மாயானம் என்பது மயானம் என்று குறுகிற்று. பாட்டில் அசைகள் குறுக்கும்வழி குறுக்குறுதல் போலுமே சொல்லமைப்பிலும் குறுக்கம்பெறும். சுருக்கமாக முடிப்பதைவிட்டு வாயைப்பிளந்து நீட்டிக்கொண்டிருத்தல் வேண்டாதது ஆகும்.


சொல்லானது பின் வேறுமொழிகட்கு ஏகுதலில் தடையேதுமில்லை. ஏகுமாயின் தமிழர்க்கும் பிறர்க்கும் உள்ள தொடர்புகளை இத்தகு சொற்கள் காட்டவல்லன.


மயானம் சொற்பிறப்பு இதுவே.  மாய்ந்தோர்க்கான இடமே மயானம்.  சொல் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் மாவினால் உசுப்பப்பட்ட    அழகு மாவுசு ஆகிப் பின் மவுசு ஆனதுபோலும் காண்க.