ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

முண்டாசு முதல் சும்மாடு வரை உள்ள சொற்கள்.

முண்டாசு


முண்டாசு என்ற சொல்லை ஆய்ந்து யாம் எழுதியவை வெளியாரால் அழிக்கப்பட்டுவிட்டன. 1

நிற்க, இப்போது முண்டாசு என்னும் சொல் ஆய்வோம்.

முண்டு =  துண்டு. துணி. மலையாளத்தில் இது  இன்னும் வழங்குகிறது.

ஆசு :  பற்றிக்கொள்தல். இங்கு அணிந்திருத்தல்.

ஆகவே: துண்டு அணிதல். தலையிலணிதலைக் குறிக்கிறது.

உறுமாலை என்ற சொல்லும் உளது.

உறு:  அணிதல்.( தலையில்) பொருத்துதல்.

மாலை: மாலைபோல் சுற்றப்படுவது.  கழுத்தில் அணிவதுபோல் தலையில் சுற்றுதல்.

இது மால் என்றும் கடைக்குறைந்து வரும்.  "உறுமால்"

இங்கு மாலை:  ஒப்பீட்டு அமைப்பு.
இதுவே முன் எழுதியதன் சுருக்கம்.

சுமையடை , சுமையடி, சும்மாடு  என்பனவும்  காண்க.   தலையில் வைக்கப் படும்  சுமை அழுத்தாமல்  தலையில் சுற்றப்படும்  அடைத்துணி .

சுமை என்பது சும்+ஐ.  இதில் ஐ விகுதி,

சுமை+ஆடு.   இங்கு ஆடு என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  ஆடுதல் என்று பொருள். சுமை தலையில் அமர அச்சுமையின் கீழிருந்து ஆடும் துணியடை.  ஆடுதலும் ஆளுதலும் இணைப்பொருட் சொற்கள்.  ஆள் என்பது ஆடு என்று திரியும்.  திரிவது ளகர ஒற்று டுகரமாக.   நள் என்பதில் ளகர ஒற்றீறு டுகரமாய்த் திரிவதுபோல.  நள் > நடு.  நள்ளாறு > நடு ஆறு > நட்டாறு.   நடு இரவு > நள்ளிரவு.

சுமை ஆடு =  சும்மாடு.  சும் என்பது அடிச்சொல்.  சும்மாடு:  A cloth coil that supports (here it literally means that which manages ) the burden placed on it.

அடு > அடை ( ஐ விகுதி).

அடு >  ஆடு (  முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  சுடு > சூடு என்பதுபோல)

அடு > அடி  ( இ விகுதி ).


அடு > அடுத்தல் என்பதும் காண்க.

மூலம்: அள் > அடு.

ஒருவனை அடுத்திருப்பவனே அவனை ஆள்கிறான்.  ஆகவே அடுத்தல் கருத்திற் பிறந்தது ஆள்தல்.

அடுத்து வருவோன் ஒன்று உம்மை ஆளவேண்டும். இல்லையென்றால் உமக்கு அடிபணிந்து ( அடிமை)   ஆகவேண்டும்.  (தனிமனித சுதந்திரம் என்பது ஒரு புதுமைக்கருத்து.  சொல்லமைந்த காலத்தில் இல்லை)

அடு: இது அள் > அடு; அள் > ஆள் தோற்றப்பின்னல்.

அடு> அடி > அடிமை.

இது குகைமாந்தனின் சிந்தனைப் பொருள் தோன்று படிகள்.

சும்மை  >சுமை   இடைக்குறை. .  சுமத்தல் : வினைச்சொல்.

சும்மை  > சும்மையா(க)  > சும்மா(க)  >  சும்மா.


சுமையாக ,  வீணாக ,   பணம் இல்லாமல்.


அடிக்குறிப்புகள்
1.      வ்விடுகையைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இப்படி அழிப்பவர்கள், அதனையோ பிறவற்றையோ தமிழெனக் காட்டுதலை விரும்பாதவராகவும் இருக்கலாம். மூலத்தை அழித்துவிட்டு தமவாக்கிக்கொள்ள எண்ணிய கள்ள ஆய்வாளராகவு மிருக்கலாம். கடவுச் சொல்லைக் கூடத் திருடக் கூடிய திறவோர் இவராவர்.






இலக்கம் என்ற சொல்.

இலக்கம் என்ற சொல் இருபொருளினது.  ஒன்று எண்ணுரு என்ற பொருள். இன்னொரு பொருள் நூறாயிரம் என்பது ஆகும். இத்துடன் இலக்கு அல்லது குறிக்கோள் என்பதும் தொடர்பு தெரிவிக்கும்;

பெரும்போர்கள் நிகழ்ந்த காலை,  ஒரு படைக்குப் பெருந்தொகையான வீரர்களைச் சேர்க்கவேண்டியிருந்தது.  ஆள் உடனடியாகக் கிடைக்கத் தக்கதொன்றில்லை.  ஆளைக் கொணர்ந்து அங்கு பயிற்றுவிப்பு முதலிய செய்யவும் வேண்டியிருந்தது. உடனடியாகக் கிட்டாத ஒன்றும் முயற்சி மேற்கொண்டாலே கிட்டுவதான ஒன்றுமே இலக்கு அல்லது இலக்கம் என்று நிற்பது, முயற்சிக்கு முற்செலவு தருவதும் ஆகும்.

அடையவேண்டியது நூறாயிரம்;  அது இலக்கு; அது இலக்கம் ஆனது.

இதுவேபோல் நூறாயிரம் குதிரைகளோ அல்லது நூறாயிரம் யானைகளோ இலக்குகளே ஆகும் .  அந்த அடையவேண்டிய நூறாயிரம் இலக்கம்.

அடையவேண்டியது எழுதி வைக்கப்பட்டது.  அது இலக்கு, இலக்கம்.

இலக்கு என்பது குறி.  குறிக்கு உரித்தானது இலக்கம்.

அடையவேண்டிய எண்ணிக்கை என்று பொருள்பெற்று, இன்று நூறாயிரம் என்று பொருள் தருகிறது.

இலக்காவது அடைய முன் நின்ற எண்ணிக்கை.  அது இலக்கம்.

இது பின் இலட்சம் என்றும் திரிந்து வழங்கியது.

ஒருவன் வணிகனாயின் பொற்காசுகள் நூறாயிரம் இலக்கு அல்லது
இலக்கமாகலாம்.

பிற்காலத்தில் ஆயிரம் லட்சம் என்பது இலக்கு ஆனது.  இந்தப்
பாடலை நோக்குங்கள்:

நாயகப் பட்சமடி  அது எனக்கு
ஆயிரம் லட்சமடி.

பழங்காலத்தில் ஆயிரமே போதுமானதாய் விளங்கியது:

வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் நோக்குக.

சனி, 31 மார்ச், 2018

திட்டம் தீட்டு



இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லைப் பற்றிச் சற்றுத் தெளிவாக அறிந்துகொள்வோம்.

நம் முன் இருக்கும் சொல் “திட்டம்” என்பது. ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அந்தத் தொண்டு நிறுவனத்திடம் “திட்டம்” எதுவும் இல்லை என்று ஒரு வாக்கியம், நம் கவனத்தை ஈர்க்கிறது. “திட்டம் தீட்டினால்தானே இருக்கும்” என்றொருவர் சொல்கிறார்.

ஆம்.  திட்டம் என்பது தீட்டப்படுவது.  திட்டம் போடுவது என்ற வழக்கும் உள்ளது.
திட்டம் தீட்டு.

தீட்டு என்பதே வினைச்சொல். திட்டம் என்பது இவ்வினையினின்று பிறந்த சொல்.
தீட்டுதல் > தீட்டு+அம் = திட்டம்.

அம் விகுதி சேர்ந்து சொல் அமைவது இயல்புதான். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது:  தீட்டு என்ற வினை, அம் என்ற விகுதியை எதிர்கொள்ளும்போது  திட்டு என்று குறுகி அப்புறம் விகுதியை ஏற்கிறது.

இங்கு சொல் என்பது தீட்டு என்ற வினைதான். அது திட்டு என்று விகுதி ஏற்பதற்காக உருமாறும்போது அந்த  இடைமாற்ற உருவினை ஒரு சொல்லாக ஏற்பதில்லை.  ஆகவே விளக்கத்தின்பொருட்டு அதனை பிறைக்கோடுகளுக்குள் போடலாம்.

தீட்டுதல்:   தீட்டு+ அம் =  (திட்டு+அம்) > திட்டம் என்று காட்டவேண்டும்.

கருவில் வளரும் குழந்தை,  அதன் வெவ்வேறு வளர்ச்சி வடிவங்களில் ஒரு கால் தவளை போலவும் இன்னொரு கால் வாலுடனும் இருக்கிறது.  அவையெல்லாம் எப்படி குழந்தையின் வடிவங்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையோ  அதுபோலவே இதுவும். சொற்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் முழுச்சொல் ஆகலாம்.

தீட்டு என்ற வினையிலிருந்து முதனிலை குறுகி அமைந்த பின் விகுதி பெற்று அமைந்ததே திட்டம் என்ற சொல்.

இதுபோல முதனிலை திரிந்து விகுதி பெற்ற இன்னொரு சொல்: சவம் என்பது.
சா(தல்)  >  சா(வு)+ அம் =  சாவம் >  சவம். இங்கும் முதனிலை குறுகி விகுதி ஏற்றது
.
சா+அம் என்று காட்டி, இடையில் ஒரு வகர உடம்படு மெய் தோன்றிற்று எனினும்  அதுவுமது. ஆகவே வுகரம் இடப்பட்டு விளக்கம் தரப்படினும் அஃதே என்`க.

இங்கு உணர்த்த முனைவது சா என்பதினின்று அமைந்ததே சவம் என்னும் சொல். மற்றவற்றைப் பேசி நேரம் கடத்த நம் பண்டிதர்கள் உள்ளனர்.

இனிச் சா+வ்+அம் = சவம் எனினும் ஒக்கும்.

முதனிலை குறுகிய சொல்லுக்கு இன்னொன்று எ-டு:  தோண்டு -  தொண்டை. ஐ விகுதி.

ஆனால் தீட்டு+அம் > திட்டம் என்பதில் டுகரத்தில் ஏறிநின்ற உகரம்1 கெட்டு,  தீட்+ட்+அம் = திட்டம் எனக் குறுகிப் பிறந்தது சொல்.  தமிழில் தீட் என்பது சொல் அன்று.  பிறமொழிக்கு ஏலும். தமிழில் அது ஓர் இடைவடிவம் ஆம்.

குறிப்பு: 

1இங்கு கள்ளப்புகவர் ஏற்றிய பிசகு கண்டுபிடித்துத்
திருத்தப்பட்டது. 

வேறு மாற்றங்கள் காணின் தெரிவிக்கவும்,