ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆதித்தன் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது

பூமி முதலிய கோள்கள் உருப்பெறு முன்னரே பகலோன் என்னும்
சூரியன் வான்வெளியில் தோன்றிவிட்டான்.  அவனிடத்து ஏற்பட்ட‌
ஒரு வெடிப்பின் காரணமாகவே பல துண்டுகள் பறந்து சுழன்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளாகிவிட்டது . அதில் நம் பூமியும்
ஒன்று. இது ஒரு வானநூல் கருத்து. (தெரிவியல் :theory  தியரி என்பர்
ஆங்கிலத்தில். )

இதன்படி, சூரியன் ஆதியிலிருந்தான். அதிலும் தானே இயங்கினான்.
இப்போது இக்கருத்தை அவன் தன் பெயர்களுள் ஒன்றான ஆதித்தன்
என்பது நம் ஆய்வில் தெரிவிக்கிறதா என்று நுணுகி ஆராய்வோம்.

ஆதி: இது முதலில் இருந்தது என்பதைக் குறிக்கும். ஆகவே இந்த‌
வான நூல் கருத்தைத் தெரிவிக்கிறது.

ஆதித்தன் என்ற சொல்லில் அடுத்த சொல் " தன்" என்பது. ஆம்
தனியே தானாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதைத் தன் என்ற‌
சொல் நன்றாகவே தெரிவிக்கிறது.

எனவே ஆதித்தன் என்றால் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது
ஆதித்தன் ஆகிறது. இந்த அரிய சொல்லை இப்படி விளக்காமல்
வேறு மொழி என்று உரைத்து உண்மைக்குப் புறம்பான கதைகளைக்
கூறிக் குட்டை குழப்பாமல், ஆதி + தன் = ஆதித்தன் தமிழே என்றும்
அது அறிவியல் அடிப்படை உடைய சொல் என்பதும் அறிந்துகொள்ள‌
வேண்டும்.

இந்த அறிவியல் தெரிவியலை தமிழர் எங்ஙனம் அறிந்திருந்தனர் என்று
வினவலாம். இது தமிழரின் வானநூல் அறிவாழத்தை நன்கு காட்டுகிறதென்பதை ஒப்புக்கொண்டால் இக்கேள்வி எழாது. தமிழர்
அப்படி எண்ணினர்; அது சரியாக அமைந்துவிட்டது என்பதே சரி.

வியாழன், 30 மார்ச், 2017

தாழ்மதித்தல் தாமதம்

பண்டைப் போர் நடவடிக்கைகளில் தயார்நிலையில் இருக்கும் ஓர் படையின் தலைவன் எதிரிப்படை எப்போது இக்களம் வந்துசேரும் என்பதை கணிக்கவேண்டியவன் ஆகிறான். இன்று வராது, நாளைப்
பொழுது புலருமுன் வந்துவிடும் என்று மதிப்பிட்டு அதுவரைத் தம் படையணியிலுள்ளோர் உண்டும் களித்தும் ஓய்வுகொண்டும் இருக்க உத்தரவிடுகிறான்.  இதுதான் தாழ்மதித்தல் என்பது. வேறு விடையங்களிலும் இங்ஙனம் தாழ்மதிக்கவேண்டி யிருக்கலாம்.

இத்தாழ்மதிப்பு பின் ஓரெழுத்து இழந்து தாமதி என்று ஆகி வழங்கியது.
இது தாமதம் என்று பெயர்ச்சொல் ஆனது. வாழ்த்தியம் என்பது தன் ழகர ஒற்றை இழந்து வாத்தியம் ஆனது போல இச்சொல்லும் திரிந்தமைந்தது என்பதை உணர்க.  தாழ்வணி  >  தாவணி .

தாழ்மதித்தல் என்பது நேரத் தாழ்மதிப்புக்கு ஏற்ற சொல் என்பதறிக.

தமிழில் சொற்கள் எழுத்திழப்பு  பெருவரவினது  ஆகும் .   உசாவடி  என்பது
சாவடி என்று திரிந்தமை காண்க .

புதன், 29 மார்ச், 2017

தீ தீபம் தீயியம் தீவியம் திவ்வியம்

 ஒருவரைப் பார்த்தவுடன் அவர் தீயாரா நல்லாரா என்று தெரிவதில்லை. அவர்தம் நடவடிக்கைகளைச் சற்றுக் க‌வனித்தாலே நாம் ஒருவாறு வகைப்படுத்த முயலலாம். ஏற்கனவே தீயார் என்று அறிந்துகொண்ட ஒருவரைக் "காண்பதுவும் தீதே" என்பதுதான் ஒளவைப்பாட்டி நமக்குச்
சொல்லும் அறிவுரை.

  தீயானது, நம்மைச் சுடும் தன்மையுள்ளது. சுடப்படுதலை நாம் விரும்புவதில்லை. தீப்புண் ஆறக் காலமாகும். தொல்லையாகவிருக்கும்.

  தீயிலிருந்து அதை  (தொல்லையை )  விலக்க அறிந்த நாம், தீ நமக்கு ஒளி தருவது; சமைத்துண்ண உதவுவது, பல்வேறு வகைகளில் உதவுவது என்பதை
அறிந்துதான் வைத்துள்ளோம். மாலையில் ஒரு விளக்கு கொளுத்திச் சாமி கும்பிட்டால் மனம் நிலைப் பட்டு அமைதி கிட்டுகிறதென்பது பலரும் கண்ட உண்மை. ஒன்றுமே இல்லாமல் அந்த அமைதி கிட்ட முயலலாகாதா எனில் முயலலாம். ஆனால் அதற்கு மனத்திறன் வேண்டும்,எல்லோர்க்கும் அமையாத மனத்திறம் அது. அமையாதோர், விளக்கினால் - ‍ தீயினால் பயன்பெறுதலில் தவறு காணல் பொருந்தவில்லை.
   தீயே நன்மைக்கும் தீமைக்கும் வித்தானதால், தீமை என்பதும் தீபம்
என்பதும்  ஒரே அடியினின்று தோன்றியவாயினும், கருத்துமுரண் காணப்படுகிறது.
   பழங்காலத்தோர், தீயை வணங்கவும் அதை இறை வழிபாடுகளில்
பயன்படுத்தவும் தலைப்பட்டனர். இவை வேறுவகைகளில் உதவினாலும்
உதவாவிட்டாலும் பூச்சிகள், புழுக்கள், குளிர், வனவிலங்குகள் என்பவற்றை அண்டித் துன்புறுத்தாமற் காத்தன. கொசுவிரட்டுத் தீச்சுருளைக் mosquito coils கொளுத்துகையில் இதை நாம் உணரலாம். இறைவழிபாடு என்ன, ஒரு நிமையம் minute  உறங்குதலும் ஆகாமற் போய்விடுமே!

தீபம் என்பது இறைப்பற்றுமையை மனத்துள் உய்க்கின்றது.

தீ என்பது ஐம்பூதங்களில் ஒன்றானாலும் அது மனிதனுக்கு அமைந்த ஒரு கருவிப்பொருளே ஆகும்.  தீபம் என்பது சற்று மேனிலை பெற்றுத்
திகழ்வதாகிறது.

இறைவன்மை குறிக்க ஒரு சொல் புனையவேண்டின், தீயையே தேர்ந்தெடுப்போம். ஆனால் முரண் உள்ளது. தீ+இயம் என்னும்  ஒரு
அடிச்சொல்லையும் ஒரு விகுதியையும் கூட்டிப் புனைந்தால் அது
தீயியம் என்று வருகின்றது. இதை (வரைசொல்லை draft ) உற்று நோக்கின், தீ மட்டுமே மனத்துள் வருகின்றது. இறைவன்மையும் அதற்குதவும் தீபமும்
அகத்துட் புகவில்லை. காரணம் அந்த முரணே ஆகும்.  ஆகவே
தீயியம் என்பதில் சில மாற்றங்கள் தேவைப்படுவது தெரிகிறது.

தீயியம் என்பதில் வந்த யகர உடம்படு மெய்யை மாற்றி அமைக்கலாம்.
தீவியம் என்னலாம். இலக்கண முறையில் (அதாவது: முன் அமைந்து
மொழிமரபுகளில் காணப்படும் நிலையை ஒட்டிச்சென்றால் ) ஈகாரத்துக்கு அடுத்து இகரம் வந்தால் யகர உடம்படு மெய்யே வரவேண்டும். பழ‌ம்புளியை விரும்பும் புலவன்மார்க்கு வகரம் சுவைக்காது.ஆகவே
தீவியம் அத்துணையும்  விரும்பத்தக்கதாக இல்லை. ஆயினும் பழையன‌
வேண்டியாங்கு கழிதலும் புதியன புகுதலுமாக இதை ஏற்கவேண்டியுள்ளது. இன்னும் ஒருபடி மேலேபோய் தீவியத்தைச் சுருக்கித் திவ்வியம் ஆக்கவேண்டியுள்ளது. அப்போது முரண் முற்றிலும் விலகி ஒரு புதுமைச்சொல் கிட்டுகிறது.

மக்கள் நாவிலே புழங்கிப் புழங்கி, தேய்ந்து தேய்ந்து, காய்ந்து சுருங்கி
மருவி அமையும்படி காத்திருந்தால் பன்னூறு ஆண்டுகள்      காத்திருக்கவேண்டும். சில நெறிமுறைகளைப் பின்பற்றி "வைத்தியம்"
செய்து  "திவ்வியத்தை" வெளிக்கொணர்தலே சாலச்சிறந்தது என்று
தீர மானித்துவிடலாம் (தீர்மானிக்கலாம்) காணீர்!

நெடில் குறிலாகப் பல சொற்கள் மொழியில் உலவிக் கிடக்கையில்
இது ஒன்றும் ஏற்க இயலாததாகிவிடாது.....தாவுதல் தவ்வுதல் என்று
நிலைக்கவில்லையோ?

will edit.
The discussion submitted here are for the purpose of understanding the etymology of the word.
A religious construction is not intended.