வெள்ளி, 24 மார்ச், 2017

இகுத்தல் இகை > சிகை

இகுத்தல் என்பது குழைத்தல், மறித்தல் என்றும், இகுப்பம் என்பது திரட்சி  என்றும் பொருள்படுவன‌.

சிகை என்பது ஒன்றாகக் குழைத்து வேண்டியாங்கு மறித்தும் திரட்டியும்
கட்டப்படுவது.

இகு> இகை;
இகை > சிகை.

இது எளிதான அமைப்புச்சொல்.

அகரவருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்; அதாவது அ>ச, ஆ>சா, இ > சி என்று இப்படியே நெடுகிலும் வரும்.

குழைத்து, அதாவது திரட்டிக் கட்டப்படுவதால் தலைமுடிக்கு குழல்
என்றும் பெயர். கூட்டிக் கட்டப்படுவதால் கூ > கூ + தல் > கூந்தல்
என்றும் பெயர்.

இகுத்தல் என்பது குழைத்துத் திரட்டுதல் ஆதலால்,

இகு> இகு+ ஐ = இகை > சிகை ஆனது.  இகு> சிகு > சிகை எனினும் ஆம்.

இகு என்பது சுட்டடிச் சொல்.  இ= இவ்விடம்;  கு = அடைவு அல்லது
சேர்தல் குறிக்கும் மிக்கப் பழங்காலச் சொற்கள். இன்னும் நம் மொழியில் உள்ளன‌. இங்கு தலையில் வளர்வதை இங்கேயே குழைத்துக் கட்டுதலைக் குறிக்கும். எனவே சிகை அழகிய கருத்தமைதி கொண்ட சொல். இ+கு என்பதிலிருந்து திரிந்து அமைந்தது.  கு என்பதும் அவனுக்கு, சென்னைக்கு என்று இன்றளவும் வழங்கி சேர்விடம் உணர்த்துகிறது.

தமிழை நன்குணர ஓர் ஆயுள் போதாது. இங்கே(தலையில் வளர்வதை)
இவ்விடமே குழைத்துத் திரட்டிவைக்கும் செயல் இகு> சிகு> சிகை.
இங்கிருப்பது அங்கு செல்லுமானால் இ+அம்+கு = இயங்கு என்பது
இதற்கு மாறுதலாக அமையும் ஒரு கருத்து.  இவையெல்லாம் திட்ட்வட்டமான அமைப்புகள்.

அறிந்து மகிழுங்கள்.

பைரவர் : இரவனுக்கு நன்றி

  பைரவர் என்பது நாம் நம் ஆலயங்களில் அடிக்கடி கேட்கும் சொல். பைரவர் சாமியைக் கும்பிடும் பற்றரும் அதிகமே.

பல உயிர்ப் பைரவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்கி இரவில் சுற்றி வருவர்.  ஆலயங்கள் இரவில் முன்னிரவிலே மூடப்பெறுவதால் பைரவர் சாமிகட்கு இரவுகளில் பற்றருக்கு அருள்பாலிக்கும் வாய்ப்புகள் இல்லை.

நாம் கவனிக்க இருப்பது வீட்டுப் பைரவர்களை. இவர்களில் பலர் இரவில் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் காவலுக்கு விடப்படுவர்.  இவர்களின் சேவையோ மாபெரும் தகையதாகும்.  வைகுண்டம், வையாபுரி, வையகம், வையம் என்று வரும் பலசொற்களின் தொடக்கமான வை என்னும் சொல் வைரவர் என்பதில் முன்னிலை பெற்றிருப்பதைக் காணலாம்,இச்சொல் முன் நிற்பது ஒரு சிறப்பு என்பதறிக.

வை என்பது இறைவனால் வைக்கப்படுதலைக் குறிக்கிறது. இது வைரவனுக்குப் பட்டமளித்தது போன்றது.

இவன் இரவில் உழைப்பவன்.  ஆகையால் :  " இரவன் "  என்று
இச்சொல்லிலே சுட்டப்பட்டவன்,

வை + இரவன் =  வைரவன்.  இங்கு இகரம் கெட்டுச்  சொல் அமைந்தது.  வையிரவன் >  வயிரவன் என்று ஐகாரம் கெட்டும்\   சொல் அமையும். வேண்டாத நீட்டத்தைக் குறுக்கிச் சொல்லை அமைப்பது ஒரு நல்ல கொள்கை.  அறு + அம் =  அறம் என்பதில் உகரம் கெட்டுப் புணர்ந்தது காண்க; மேலும் வகர உடம்படு மெய்யும் நுழைக்கப்படவில்லை.  இவை சொல்லமைப்பினில் கையாளும் தந்திரங்கள்.

இறைவனால் நமக்காக வைக்கப்பட்ட நன்றியுள்ள இரவனுக்கு நன்றி
நவில்வோம்.
வைரவர்  -  பைரவர்


வை இரவு அன் >  வையிரவன் > வைரவன் அல்லது வயிரவன்
வையி > வயி;
வயி > வை
எப்படியாயினும் வேறுபாடின்மை காண்க.

தமிழக அரசின் குறள் கொள்கை

ஆயிரத்து முன்னூற்று முப்பதான‌ அருங்குறளும்
போயிருந்து பள்ளியிலே புகுநாட்கள் முதல்கற்பீர்
ஏயுணர்வு மிக்குவர இனியவாய பண்பமைந்த‌
சேயர்செஞ் சீர்பெறுவீர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.

இடர்கள்பல குமுகத்தில் ஏறுமுகம் இழிகுற்றத்
தடர்தொகையால் ஆழ்குழிக்குள் வீழ்படாமை ஆற்றிடவே
தொடர்தகவு  நடவடிக்கை எனப்பலரும் பாராட்டும்
சுடர்கொள்கை சூழ்பயன்சேர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.