வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஆரூடம்.

இது தேர்தல் பருவகாலம்  (சீசன்)  ஆதலால் தேர்தல் ஆரூடங்கள் பல அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ள மக்கள் முந்தவே தாளிகைகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆருடங்களை அச்சேற்றியவண்ணமிருக்கின்றன.

அதனால் ஆரூடம் என்ற சொல்லை ஆராய்தல் நன்று.

ஆர்தல் -  நிறைதல்.

வளமார் தமிழ் -   வளம் ஆர் தமிழ் -    வளம் நிறைந்த  தமிழ்.
எழிலார் நங்கை =   எழில் நிறைந்த நங்கை.

ஊடம் என்ற சொல்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே.

ஊடு =   ஒன்றில் உட்புகுந்து செல்லுதல்.
ஊடு+ உருவுதல்:  =  ஒன்றில் உட்புகுந்து  மறுபக்கம் தோன்றுதல். வெளிப்படுதல்.  ஊடுருவுதல்.
ஊடகம் என்ற சொல் :  ஊடு+அகம். பல விடயங்களிலும் புகுந்து செய்தி சேகரிப்பவர்கள்.

ஊடு+ அம் =  ஊடம் (எதிர்கால விடயங்களில் புகுதல்.)

இதிற் புகாவிடில் நிறைவு இல்லை.  புகுந்து ஆய்ந்து சொன்னாலே நிறைவு. இதுதான் ஆர் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆர் + ஊடம் = ஆரூடம்.

இதைச்  சில ஆண்டிகளில் முன்  வெளியிட்டிருந்தேன். வெளியிட்ட வலைத்தளம் இப்போது மூடப்பட்டுவிட்டது

இ தன் படியைத் தேடிக்கொண்டிராமல், இதைப் படித்து
இன்புறவும்.  

புதன், 27 ஏப்ரல், 2016

குற்றவாளியும் சட்டமும்

இல்லா தனசொலும் குற்ற வாளியை
நல்லா ரைப்போல் நடத்தலும்  அருஞ்செயல்
சொல்லான் இவனெனச்  சூழநின்  றதட்டினும்
கொல்லாப் புடைக்கா மெல்வழி மேற்கொளல்.

கடமை செய்தலில் காணும்   கோடிது
கடிதே  ஓச்சுதல்  எறிக மெல்லவே
கடுமை  வேண்டினும் கொள்ளல்  சொல்லிலே
உடமை உயிர்கொளல் சட்டத் துரிமையே.




புறநா: காற்றால் எழும் பறையோசை .........போர்! போர்

இலக்கிய இன்பம் வயப்பட விழையும் எவரும் புறநானூற்றினை நெடு நாட்களுக்கு மறந்துவிட்டு நாட்கடத்திவிடுதல் இயலாதது. நம் ஒளவைப் பாட்டியையும் எண்ணிப்பார்க்காமல் இருந்துவிடல் முடியாதது.  அவர்தம்  பாடலொன்றை இப்போது நுகர்வோம்.

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொருது  எண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்ஐயும் உளனே    89

 உரை :

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்   -  அழகிய மணிகள் பொருந்திய பெற்றுக்கொள்ளும் பெற்றியை  உடைய வளைந்த  இடை  அமைந்த;

மடவரல்  உண்கண்  -  மடம்பொருந்திய அழகிய கண்களும்

வாள் நுதல் -   வாளைப்போன்ற நெற்றியுமுடைய;

விறலி -    கலைபயிலும் நங்கையே!  ( பெரும்பாலும் பதினாறு வயதினள் ;   தொண்சுவையும் காண்போர் நுகர நடனம் ஆடுபவள் ....)

பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என  - போர் செய்வோரும்  இருக்கின்றனரோ உன் பரந்த நாட்டில் என்று;

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே -  கேட்டு அமையாத போர்ப்படைகளையுடைய  அரசே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன -  குச்சியால் அடிக்கும்போது அஞ்சாமல் சீறும் பாம்பினைப் போல;

சிறுவன் மள்ளரும் உளரே அதா அன்று -  சிறிய வன்மைவாய்ந்த  போர்வீரர்களும் உள்ளனரே; அதுமட்டுமில்லை;  ( சிறு  -  வன்மள்ளர் )

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை  - கூடத்தில் கிடத்தித்  தோல் வாரால் கட்டி வைக்கப்பட்டுள் ள போர்ப் பறைகளில்

வளிபொருது  எண்கண் கேட்பின்  -  கொஞ்சம் காற்று வந்து மோதிப் பறையோசை கேட்டால்

அதுபோர் என்னும் என் ஐயும் உளனே -  அதைக் கேட்டுப் போர் வந்துவிட்டது என்று  கிளம்பும்  என் தலைவனும் இருக்கின்றானே.

எண்கண் = எண்மைக்கண் = எளிமையானவிடத்து = கொஞ்சம்.

ஐ = தலைவன்; மன்னன்.

காற்றால் எழும் பறையோசை .........போர்! போர் என  எழுதல்.  என்னே   தமிழர்  தயார்  நிலை .............

படித்துச் சுவைத்தபடி இருங்கள் . பின்  இது  பற்றிப்  பேசுவோம்