திங்கள், 4 ஏப்ரல், 2016

சிவஞா, போ. 8: உவமை நயம்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.   சி  போ . 8

 சிவஞான போத ஆசிரியர், ஐம்புலன்களையும் வேடர்களுடன் ஒப்பிடுகிறார். நாவிற் புலால் சுவை நுகர்வான் வேண்டி, காட்டு விலங்குகளை ஒளிந்திருந்து கண்ணி வைத்தோ பொறிகளைப்  பொருத்தியோ பிடித்து அடித்து அறுத்து நெருப்பில் வாட்டியும் கறிசமைத்தும் உண்டு மகிழ்ந்து கூத்தாடுபவர்கள் இந்த வேடர்கள்.

மா மிசையக் கிட்டாத ஒவ்வொரு நாளையும் வழுக்கினுள் வைத்து வருந்துவதுடன் விலங்குகளைச் சிக்குவிக்க மிகுந்த பெருமுயற்சியும் மேற்கொள்வர்.  மா=விலங்கு; மிசைதல்: உண்ணுதல். அவர்களின் மனைவிமாரும் குழந்தைகளும் விலங்குணவை வேண்டிக்கிடப்பர்.

நம் ஐம்புலன்களும் இங்ஙனமே நுகர்வினைத் தேடி அலைந்து கிட்டின போதெல்லாம் முழுவதும் அதிலாழ்ந்து  இறைவனை மற‌ந்து
வாழ் நாளை வீணாளாக்கிவிடுகின்றன .

ஐபுலன்களையும் வேடரென்றது எத்துணைப் பொருத்தம் காண்பீர்!

வேடன் விலங்கு கிட்டும்வரை தன்னை மறைத்துக்கொள்கிறான்.
ஐம்புலன்களும் இத்தன்மையையே வெளிப்படுத்துகின்றன. சிலர் புலனுணர்வு இன்பம் பெற எப்படியெல்லாம் தம்மை மறைத்துக்கொள்கின்றனர். கிட்டினகாலை முழுமையாகப் புகுந்துவிடுகின்றனர்.

ஆசிரியரின் கவித்திறம் பெரிதும் இன்புறற்பாலதே.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி.........

உறுதல் என்னும் புலனுணர்ச்சி,  தோலுணர்ச்சியையே சிறப்பாகக் குறிப்பது. எனினும் நாவுடன் உண்பன உறும்போது,  உரசும்போது, படும்போதுதான் நாவும் பொருளின் சுவையை அறிந்துகொள்கிறது. நாவினை அண்டிவராத பொருளை அறிதல் யாங்ஙனம்? எனவே உறுதல் என்ற உணார்ச்சி, நாவில் உறுதல், மூக்கில் உறுதல், செவியில் உறுதல், கண்ணில் உறுதல் என்று  பல்வேறு வகைப்படும். கண்ணுறு, செவியுறு என்ற சொல்லாட்சிகளும் உண்டே!

நாவுறுதலே உறு > உறுசி எனப்பட்டது.

இது பின் உருசி எனத் திரிந்து, அதன்பிறகு தலையிழந்து ருசி என்றும் ஆயிற்று.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி வேறு திரிபுகள் யாதுமில்லை.

பொருளும் தெளிவாகவே உள்ளது. சி விகுதி .

தந்தியும் தந்திரங்களும்

இப்போதெல்லாம் தந்தி பற்றிக் கேளிவிப்படுவதில்லை.  மின்னஞ்சல் என்ற இ‍மெயில் மற்றும் பல புதியன புகுந்தபின், தந்திக்கு வேலை வெகுவாகக் குறைந்துவிட்டது. குறுஞ்செய்தி அனுப்பலாமே, உங்கள் கைபேசியிலிருந்து!  அப்புறம் தந்தி எதற்கு?

த ‍  :  தனக்கு வருவதாகிய செய்தி.
தி   :  நீங்கள்  திருப்பி அனுப்புவதாகிய செய்தி.

ஆக, த + தி >  தந்தி.  தத்தி என்றால் தத்தித்தத்தி என்ற சொல்லுடன் இடிபாடுறுவதால், மெலித்துத் தந்தி எனப்பட்டது.  மேலும் இருபக்கமும் செய்தி தந்திடுதல் என்னும் குறிப்பையும் அகப்படுத்துவதாய்ச் சொல் அமைவுற்றது.

மேலும் தந்தி என்பது கம்பி  நரம்பு என்றும் பொருள்படுவதால் வெகுபொருத்தமாகிவிடுகிறது.

பல பொருத்தங்கள் அமைந்த சொல் இதுவாகும்.

திருமணத்துக்குப்  பொருத்தம் பார்ப்பதுபோல் சொல் அமைக்கவும் பொருத்தம் பார்த்து அமைத்தால்  நன்றாக இருக்குமே!  கடின ஒலிகள் வருமேல் மெல்லொலி  புகுத்தவேண்டும். நீட்டம் ஆகுமேல் சுருக்க வேண்டும். இப்படிப் பல தந்திரங்களைக் கையாளுங்கள்.