இன்று சமஸ்கிருதம் என்பதன் சொற்பொருளை அறிவோம்.
இதனை மோனியர் வில்லியம்சு என்னும் வெள்ளையர் தெரிந்துகொண்டபடி செல்லாமல். சொல்லின் பகவுகளை நன்கு கவனித்தறிந்து காண்போமாக.
இச்சொல்லில் இருப்பது: சமம், கதம் என்ற இருபகவுகள்.
சமம் என்ற சொல், இது வேறொரு மொழிக்கு அல்லது பேச்சுமுறைக்கு ஒப்பான என்று பொருள்படும். இதனை இரண்டு விதமாக ஏற்புடைத்தாகக் கருத இடமுண்டு. தனக்கு அதாவது " இந்த மொழிக்கு முன்னிருந்த நிலைகளுக்கு ஏற்புடைத்தான" என்று பொருள்கூறலாம். அவ்வாறாயின் முன்னிருந்த நிலைகள் யாவை என்ற கேள்வி எழும். அதற்குப் பதிலறிதலும் தேவையாகும். முன்னிருந்த நிலைகள் இம்மொழியின் தந்நிலைகள் அல்லது இதற்கு முன் இலங்கிய மொழிகள் என்னும் முடிபே இங்கு வெளிப்படுவதாம்.
இந்த மொழிக்கு முன் இருந்த நிலைக்குச் சந்தாசா என்று பெயர். சந்தாசா என்றால் சந்த அசைவுகள் அல்லது ஒலி அசைவுகள் என்று பொருள். சந்தாசா என்பது ஒரு மொழிப்பெயராகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பது பழங்காலச் சந்தாசா மொழியின் பண்பட்ட அல்லது வளர்ச்சியடைந்த நிலை. சந்தாசா என்பது இம்மொழி சந்தப் பாடல்களாகப் பாடப்பட்ட முன்னைய நிலை. பூசை மொழியாதலால் பூசை அல்லது அருச்சனைகளின் போது சந்தத்துடன் இம்மொழி பாடப்பட்டது. தாம் தம் தன தம் என்பன போல ஒலி போதருதலே சந்தம் ஆகும். தம் என்பது திரிந்து சம் ஆகும். அடுத்த அசையாகிய சம் என்பது திரியாமல் நின்றது. சம்+ தம் > சந்தம் என்ற சொல்லாய் அமைந்தது. இப்பெயர் இசைவடிவினையே கொணர்ந்து முன் நிறுத்துகிறது.
இந்தச் சந்தங்கள் ஐரோப்பாவில் ஏற்படவில்லை. அவர்களுக்குப் பூசைமொழியும் இல்லை.
இம்மொழிக்கு வேண்டிய சந்தங்கள் தென் மாநிலங்களிலே படைக்கப்பட்டன.
சுனில்குமார் சாட்டர்ஜி என்ற மொழியறிஞர் சமஸ்கிருதம் என்பது தென்மாநிலங்களின் ஒலிமுறையைப் பின்பற்றி அமைந்த மொழி என்றார். சமஸ்கிருதம் பூசைகளின் போது பலுக்கப் படும் ஒலித் தொகுதியைச் செவிமடுத்து, பிறமொழியினர், தமிழ் அல்லது தென்மாநில மொழிகள் போலவே ஒலிக்கின்றது என்று கூறியுள்ளனர்.
சமஸ்கிருதம் ஒரு தென்மொழி. அது வடக்கில் வழங்கும்போது புதிய சொற்களைப் பெற்றிருந்தாலும், அது தென்னொலியே இயைந்து வளர்ந்தது என்று அறிக. தென்மொழியின் ஒலிப்பட்டது என்றாலும் யாவருக்கும் உரியதே இதுவும் மற்றெந்த மொழியும். எந்த மொழியையும் யாரும் பேசலாம். எம்மொழியும் நம்மொழியே. எல்லா மொழிகளும் மனித குலத்துக்குச் சொந்தமானவை.
தமிழின் இலக்கணத்துக்கும் ஒலியமைப்புக்கும் ஒட்டி அமைந்ததால், சம் அல்லது சம என்பது தமிழுக்குச் சமமானது என்று பொருள்படும். மற்ற தென்மொழிகட்கும் சமமானதே ஆகும்.
அடுத்து வரும் சொற்பகவு: கிருதம் என்பது. கதம் என்ற சொல்லே கிருதம் என்று மாற்றொலி பெறுகிறது. இது படி> பிரதி என்பதுபோலும் ஒப்பொலி ஆகும் . இன்னொரு சொல்: மகம். மக என்றால் பிறந்தது என்று பொருள். இது மகம்> ம்ருகம்> மிருகம் என்று மாற்றொலி பெறும். இன்னொன்று: கமம்> க்ரமம் என்பது. கிராமம் என்ற சொல்லும் கமம் என்பதன் திரிபுதான். பண்டை நாட்களில் குடியிருப்புகளும் மக்களின் நிலங்கட்கருகிலே அமைந்ததால், இச்சொல் சிற்றூர் என்று பொருட்பேறு எய்திற்று.
சமஸ்கிருதம் என்றால் தென்மொழிகட்குச் சம்மான ஒலியுடைய மொழி என்று பொருள். அது தன் முந்திய நிலையினின்று வளர்ச்சி அடைந்துவிட்ட படியால்தான் புதிய பெயர் பெற்றது என்பதால் அது தன் முந்திய மொழி நிலையை இப்பெயர் மூலம் தெரிவித்தது என்பது பொருந்தவில்லை. இவ்வளர்ச்சி இலக்கியங்களின் வளர்ச்சி என்பது தெளிவு,
சமஸ்கிருதம் என்பது நன்றாக இயன்ற மொழிதான். ஆனால் அதன் பெயர் இதனால் (மொழியின் தந்நிலைக் கட்டமைப்பு ம்) உண்டானதன்று. அவர்களின் பெயர்விளக்கம் சற்று வழுவினது ஆகும். பிராகிருதங்களிலிருந்து அல்லது பிறவழிகளில் என்ன கட்டமைப்பினைப் புதுமையாய்ப் பெற்றதென்பதற்கு விளக்கம் இல்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக