ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பண்டைக்காலத் தொழிற்கல்வி - அகமணமுறை அமலாக்கம்

 பண்டைக் காலத்தில் தொழிற்கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எவையும் இல்லை.  எடுத்துக்காட்டாக, பானை சட்டி செய்வதற்குப் போதுமான தொழிலறிவு உள்ள ஆள் தேவை என்றால், இன்னொரு குயவர் வீட்டிலிருந்துதான் அந்த நபரைப் பெறவேண்டும். தாமே தேவையான ஆள்பலத்தைக் குயவர்களே உண்டாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போதிருந்த முடியரசுக்கு இது வேலையன்று.  ஆகவே அரசு ஏன் ஆட்களைத் தயார்செய்து அளிக்கவில்லை என்று அரசரைக் கேட்க முடியாது. இந்தச் சிற்றூரில் உள்ள குயக் குடும்பம் அடுத்த ஊர்க் குயவர் குடும்பத்திலிருந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவந்தால், அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் குயவேலை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரியவில்லை என்றாலும் அவளுடைய அண்ணன் தம்பிகளுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அங்கிருந்த வேண்டிய ஆள்பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  அதனால் சாதிக்குள் திருமணம் என்பது  தம் பிழைப்புக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.

அகமணம் புரியும் வழக்கம் இவ்வாறே ஒவ்வொரு சாதியாரிடையேயும் ஏற்பட்டது.  அதனால் அரசுகள் எந்தப் பயிற்சிக்கூடமும் யாருக்கும் கட்டிக்கொடுத்துப் பயிற்றுவிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை யாயிற்று. தங்களுக்குத் தேவையான தொழில் ஆள்பலத்தை மக்கள் தாமே உண்டாக்கிக் கொண்டனர். சாதியை விட்டுத் திருமணம் செய்யும் பழக்கம் இதனால் ஏற்படவில்லை.

அகமணம் அல்லது சாதிக்குள் திருமணம் என்பது இதனால் ஏற்பட்டு நாளடைவில் ஒரு விதியாக மாறிவிட்டது.  பூசாரி வருக்கத்தினர் யாரும் இதைச் செயல்படுத்தவில்லை. அவர்களுக்கு மற்ற சாதிகள் எவ்வாறு தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டன  ரென்பது  அக்கறைக் குரியதன்று.

சாதிக்கு இன்றியமையாத அகமண முறை எந்த ஆரியனாலும் அல்லது பூசாரி வருக்கத்தினராலும் புகுத்தப்படவில்லை.

தங்கள் தொழிலில் அதிகம் சம்பாதித்தவர்கள் மேனிலை அடைந்ததனால்,  மதிப்புக் கூடியவர்கள் ஆயினர். அரசனின் படையில் வேலை செய்தவன் போருக்குப் பின் பல ஆதாயம் உள்ள பொருள்களைக் கொண்டுவந்த காரணத்தால் செல்வம் உடையனாய் பெருமதிப்பை அடைந்தான். செல்வமே பிழைப்புக்கு ஆதாரமானது,  அதுவே திருமகள் அவதாரம் என்று போற்றப்பட்டது.

பொருளியலால் விளைந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு  -  செல்வச் சேமிப்புக்கு மக்களிடையே இருந்த ஈட்டும் மதிப்பே காரணம் ஆகும். பூசாரிகள் பெரும்பாலும் தமக்குக் கிடைத்த தட்சிணைகளை வைத்தே பிழைத்தனர்.  தட்சிணை என்றால் தக்க இணை - தக்கிணை - தம் வேலைக்குத் தக்க ஊதியம். தக்கிணை என்பது: பக்கி என்பது பட்சி ஆனதுபோல ஒரு திரிபுச் சொல்தான்.   

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் முன் நாட்களில் இல்லை.  அப்போது செய்திப் பரப்பலைப் பறையர் (பரையர்) களே செய்துகொண்டிருந்தனர். இதுபோலும் இவர்களாலும் இதைச் செய்திருக்க இயலாது. பூசாரி மணியடிப்பதை விட்டுவிட்டுச் சமுதாயக் கட்டமைப்புகளைச் செய்துகொண்டிருக்க வழியில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: