திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முகரை என்ற சொல்லின் திரிபு வடிவம்.

 முகரை என்ற சொல்லில் முதலிரண்   டெழுத்துக்களும்  திரிதற்குரியவை.  இது எவ்வாறு என்றால்  பகுதி என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்களும்  பகு> பா என்று திரிந்து பாதி என்றாகிவிடுவது போலுமே ஆகும். முக என்பது மோ என்று திரிந்துவிடும்.  அவ்வாறு திரிந்த பின்  இந்தத் திரிபு "ரை" என்ற கடைசி எழுத்தையும் மாறியமையச் செய்கிறது. இது ஒலிநூல் படியமைந்த திரிபுதான்.  என்ன ஆகிறது என்றால் மூன்றெழுத்தாய் இருந்த போது இடையின ஒலியாய் வந்த "ரை",  இரண்டெழுத்துச் சொல்லான பின்பு தன் வலிமையை இழந்துவிடுகிறது.  இந்தத் திரிபு  ஒலிநூல் முறைப்படியான மென்மைப்பாடே ஆகும்.

தமிழ் இலக்கண நூலுடையோர் பண்டை நாட்களில் பெரும் ஒலிநூல் சாம்பறிவர்களாக (ஜாம்பவான்களாக ) இருந்திருக்கின்றனர். வல்லினம் மெல்லினம் இடையினம் என்று ஒலிகளைப் பகுத்தறிந்தனர். கவிகளில் வண்ணங்களைப் பெய்தனர். நலிபு வண்ணம், மெலிபு வண்ணம் என்று வகுத்தனர். குறில் வண்ணம் நெடில் வண்ணம் என்றும் கூறுபடுத்தினர்.  இவற்றை எல்லாம் இத்துறை போகிய வல்லோரிடம் கேட்டறிந்து கொள்க.  சந்தசை என்ற பெயரை உடைய சமஸ்கிருத மொழியும் ஒலி நூல் நெறிமுறைகளை மந்திர  ஒலிப்புகளில் மிக்க நெறியில் கடைப்பிடித்துள்ளது.

முகரை என்ற சொல் மோறை என்று திரிந்ததும் இத்தன்மைத்தே அறிந்திடுவீர்.

சாறு என்ற சொல்லினின்றே  சாராயம் என்று சொல் பிறக்கிறது. அரிசி ஊறவைத்த நீரிலிருந்தும் சாராயம் செய்துள்ளனர். ஈரெழுத்துச் சொல்லாய் சாறு என்று இருந்த சொல் மூவெழுத்தாய்ச் சாராயம் என்று மிகுந்தவுடன் றா என்ற வல்லொலி  ரா என்று இடையினமாகி விடுகிறது.  வேர் அல்லது தானியத்தை ஊறவைத்துச் சாறு எடுத்த பின்னர் அது புளிப்பில் மதுவாகி விடும்.  அப்போது அது சாராயம் ஆகிவிடும்.  சாறாயம் என்று வராமல் சாராயம் என்று தான் சொல்லின் ஒலியில் மாற்றம் விளைகிறது.  சாராயம் என்பது முகரை மோறை என்பதை நோக்க எதிர்மாற்றுத் திரிபு ஆகும். இது பின்னும் திரிந்து மோரை என்றும் வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


 

கருத்துகள் இல்லை: